நண்பனுக்காக ஓடிவந்த இளையராஜா.. ஸ்டாலினுக்கு நன்றி கூறி நெகிழ்ச்சி.. பின்னணியில் இருக்கும் எஸ்பிபி
சென்னை: மறைந்த பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள பிரதான சாலைக்கு அவரது நினைவாக எஸ்பி பாலசுப்பிரமணியம் சாலை என பெயர் வைப்பதாக நேற்று முன்தினம் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதனால் நெகிழ்ந்து போன இசையமைப்பாளர் இளையராஜா, முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் பல ஆயிரம் பாடல்களை பாடி மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் எஸ்பி பாலசுப்பிரமணியம். எஸ்பிபி என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் இவரின் சினிமா பாடல்கள் மட்டுமின்றி பக்தி பாடல்களும் மிகவும் பிரபலம்.

மேலும் நடிகராகவும், இசையமைப்பாளராகவும், பின்னணி குரல் தருபவர் என பன்முக திறமையுடன் அவர் வலம் வந்தார். 6 தேசிய விருது, நூற்றுக்கணக்கான பல மாநில விருதுகளைப் பெற்றுள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் எஸ்பி பாலசுப்பிரமணியன் காலமானார். நேற்று முன்தினம் எஸ்பி பாலசுப்பிரமணியத்தின் 4ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இந்த வேளையில் தான் முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதாவது, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள காம்தார் நகர் பகுதியில் எஸ்பி பாலசுப்ரமணியம் வாழ்ந்த வீடு அமைந்துள்ள சாலைக்கு எஸ்பி பாலசுப்பிரமணியம் சாலை என பெயர் வைக்கப்படும் என அறிவித்தார்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛பாடும் நிலா எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களது நினைவு நாளில் அவர் வாழ்ந்த காம்தார் நகர் பிரதான சாலைக்கு ‛‛எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை'' என பெயரிடப்படும் எனும் அறிவிப்பை செய்வதில் பாலு அவர்களின் கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவனாக மகிழ்ச்சியும், பெருமிதமும் கொள்கிறேன்'' என கூறியிருந்தார்.
எஸ்பி பாலசுப்பிரமணியம் வாழ்ந்த காம்தார் நகரில் உள்ள வீட்டுக்கு அவரது பெயர் வைக்க வேண்டும் என்று மகனும், பாடகருமான எஸ்பி சரண் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்திருந்த நிலையில் அது நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் தான் முதல்வர் ஸ்டாலினுக்கு இசையமைப்பாளர் இளையராஜா நெகிழ்ச்சியுடன் நன்றி கூறியுள்ளார்.
இது தொடர்பாக இளையராஜா தனது எக்ஸ்தள பக்கத்தில், "என் நண்பன் பாலுவின் நினைவாக, அவன் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள சாலைக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை என்று பெயரை மாற்றி வைத்ததற்காக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு, தமிழக மக்களின் சார்பிலும், திரையுலகத்தின் சார்பிலும், நன்றியை தெரிவித்து கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
அதேபோல் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில், "ஒப்பற்ற இசைக் கலைஞரும் எனது மூத்த சகோதரருமான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பெயரை, சென்னையில் அவர் வாழ்ந்த தெருவிற்குச் சூட்டி அறிவித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். லட்சக்கணக்கான கலை ஆர்வலர்களின் மனதில் இன்றும் வாழும் ஒரு பெரும் கலைஞனுக்குச் செய்யப்பட்டு இருக்கும் மரியாதை இது. பாலு அண்ணாவின் ரசிகர் கூட்டத்தில் ஒருவனாக என் பாராட்டுகளும் நன்றியறிதல்களும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு உரித்தாகட்டும்" என தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications