50 மி.லி தாய்ப்பால் 500 ரூபாய்.. சென்னை தாய்மார்களிடம் பெறப்பட்டது எப்படி? விசாரணையில் ஷாக் தகவல்
சென்னை: சென்னை மாதவரத்தில் 50 மி.லி தாய்ப்பாலை பாட்டிலில் அடைத்து ரூபாய் 500க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். உணவுப் பாதுகாப்பு அதிகாரி போஸ் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
மாதவரத்தில் சட்டவிரோதமாக பாட்டில்களில் அடைத்து தாய்ப்பால் விற்ற முத்தையா என்பவரின் லைஃப் வேக்சின் ஸ்டோர் என்ற கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தாய்ப்பால் விற்பனை செய்த கடைக்கு சீல் வைத்து, விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 50 தாய்ப்பால் பாட்டில்களை பறிமுதல் செய்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தாய்ப்பால் விற்ற கடை: திருவள்ளூர் மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி போஸ் தலைமையில், உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, சுமார் 50 தாய்ப்பால் பாட்டில்களை கைப்பற்றினர். தொடர்ந்து, அவற்றை சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் ஆய்வகத்துக்கு சோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
அண்மையில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், தாய்ப்பால் விற்பனை தொடர்பாக எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், தாய்ப்பாலை சட்ட விரோதமாக பாட்டிலில் அடைத்து விற்பனை செய்த கடையின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
தாய்ப்பால் கிடைத்தது எப்படி?: மேலும், தாய்ப்பால் எங்கிருந்து எப்படி இவர்களுக்கு கிடைத்தது? இதனை எப்படி பதப்படுத்தி விற்பனையில் ஈடுபட்டு வந்தார் என்பது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், அந்த கடையின் உரிமையாளர் முத்தையாவிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதுதொடர்பாக பேசியுள்ள மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி போஸ், "உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தாய்ப்பாலை விற்க தடை விதித்து உள்ளது. கடையில் தாய்ப்பால் விற்பதாக வந்த புகாரின் அடிப்படையில் இப்பகுதியில் கடந்த ஒரு வார காலமாக ஆய்வு செய்து வருகிறோம்.
போலி லைசென்ஸ்: புரோட்டீன் பவுடர் விற்பதற்காக வழங்கப்பட்ட லைசென்ஸ் நம்பரை வைத்து, தாய்ப்பாலை பாட்டில் மூலம் விற்பனை செய்து வந்துள்ளனர். தாய்ப்பால் பாட்டிலில், யாரிடம் இருந்து தாய்ப்பால் பெறப்பட்டது, எந்த தேதியில் பெறப்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளனர்.
பதப்படுத்தப்பட்ட தாய்ப்பால் என்ற லேபிளில் இதனை பாட்டிலில் அடைத்து விற்கின்றனர். கடைக்காரர் சொல்லும் தகவல்கள் நம்பும்படியாக இல்லை. இது தொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருகிறோம். உணவுப் பாதுகாப்பு ஆணையரின் உத்தரவின்படி, இந்தக் கடை நிரந்தரமாக சீல் வைத்து மூடப்படும்.

தாய்ப்பால் வழங்கும் தாயின் விவரங்கள்: இந்தக் கடையில் ஒரு நோட்டையும் பறிமுதல் செய்துள்ளோம். அதில் தாய்ப்பால் வழங்கும் தாயின் பெயர்கள், போன் நம்பர் ஆகிய விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவர்களை தொடர்பு கொண்டு உறுதிப் படுத்தினால் தான், கடைக்காரர் சேகரித்து வைத்துள்ள விவரங்கள் உண்மை தானா என்பது தெரியவரும்.
தாய்ப்பாலை சேகரிப்பது தொடர்பாக ஒரு தனியார் மற்றும் அரசு அமைப்புகளின் பெயர்களை கடைக்காரர் சொல்கிறார். தாய்ப்பால் பதப்படுத்தப்படும் நிறுவனமாக ஒரு பெரிய நிறுவனத்தின் பெயரைச் சொல்கிறார். அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அவர் சொல்வது உண்மையா இல்லையா என்பது அடுத்தகட்ட விசாரணைகளில் தான் தெரியும்.
தாய்ப்பாலை சேகரித்து வைத்தால், நுண்ணுயிர் கிருமிகள் இருக்க வாய்ப்புள்ளது. அதில் இயற்கையாகவே தாய்ப்பாலில் இருக்கும் புரதங்கள் இருக்குமா என்பது கேள்விக்குறி. பாட்டிலில் அடைத்து வைத்து தாய்ப்பால் விற்பது தடை செய்யப்பட்ட ஒன்று." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications