நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனுக்கு எதிராக இம்பீச்மெண்ட்! அடுத்த என்ன? இதற்கு முன் நடந்தது என்ன?
சென்னை: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மலை மீது தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனுக்கு எதிராக இம்பீச்மென்ட் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்தியா கூட்டணி எம்பிக்கள் சபாநாயகரிடம் மனு அளித்துள்ளனர். இந்த நிலையில் இதற்கு முன்பு நடந்த இம்பீச்மென்ட் நடவடிக்கைகள் என்னென்ன? அதன் முடிவுகள் என்ன? என்பது குறித்து சற்று சுருக்கமாக பார்க்கலாம்.
மதுரையைச் சேர்ந்த ராம.ரவிக்குமார் என்பவர், கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில் மலை உச்சியில் உள்ள பழைய தீபத்தூணில்தான் தீபம் ஏற்ற வேண்டும் என மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், நேரடியாக மலை உச்சிக்கு சென்று ஆய்வு செய்ததுடன், அங்குள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவின் பேரில் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டாலும், சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறை முன்வைத்து, மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டது.

நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன்
அதற்கு மேலாக, 144 தடையுத்தரவும் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து பாஜகவினர், இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டு, திருப்பரங்குன்றத்தில் பெரும் பரபரப்பு உருவானது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன், சமூக மற்றும் மத விவகாரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தும் தீர்ப்புகளை நீதிபதி வழங்கி வருகிறார் என இந்தியா கூட்டணி எம்.பிக்கள் குற்றம்சாட்டி இம்பீச்மெண்ட் நோட்டீஸ் கொண்டு வந்துள்ளனர்.
இந்தியா கூட்டணி
இந்நிலையில், நேற்று, திமுக, காங்கிரஸ், விசிக, மதிமுக கட்சிகளை உள்ளடக்கிய இந்தியா கூட்டணி எம்.பிக்கள், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கொடுத்தனர். இதில், மொத்தம் 107 எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளனர். இந்த நோட்டீஸை மக்களவைத் தலைவர் ஏற்றுக்கொண்டால், ஒரு விசாரணைக் குழு அமைக்கப்படும். அதில் உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி ஒருவர், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஒருவர் மற்றும் ஒரு சட்ட நிபுணர் இருப்பார்கள். இந்த விசாரணையின் அடிப்படையில் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு எம்.பிக்கள் ஆதரவு அளித்தால் மட்டுமே பதவி நீக்கத் தீர்மானம் நிறைவேறும். இதனால் நீதிபதி பதவி விலக வேண்டியிருகும்.
இம்பீச்மெண்ட் நோட்டீஸ்
இந்த நிலையில் இதற்கு முன்பு நடந்த இம்பீச்மென்ட் நடவடிக்கைகள் என்னென்ன? அதன் முடிவுகள் என்ன? என்பது குறித்து சற்று சுருக்கமாக பார்க்கலாம்.1993ஆம் ஆண்டு பஞ்சாப்-ஹரியாணா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி. ராமசுவாமிக்கு எதிரான தீர்மானம் மக்களவையில் போதிய ஆதரவு இல்லாததால் தோல்வியடைந்தது. 2011ஆம் ஆண்டு கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சௌமித்ரா சென் மீது மாநிலங்களவை இம்பீச்மெண்ட் நிறைவேற்றியதைத் தொடர்ந்து அவர் பதவி விலகினார்.
பழைய இம்பீச்மெண்ட்
2015ஆம் ஆண்டு குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி ஜே.பி. பார்திவாலாவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நோட்டீஸ், அவர் சர்ச்சைக்குரிய கருத்துகளை நீக்கியதால் கைவிடப்பட்டது. அதே ஆண்டு மத்திய பிரதேச நீதிபதி எஸ்.கே. கங்கலே மீது பாலியல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டும், ஆதாரமின்மையால் தீர்மானம் நிறைவேறவில்லை. 2017ஆம் ஆண்டு சி.வி. நாகார்ஜுனா ரெட்டிக்கு எதிரான முயற்சி கையொப்பம் திரும்பப்பெறப்பட்டதால் பலவீனமானது.
நீதித்துறை வழக்குகள்
2018ஆம் ஆண்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் முயற்சி, அப்போது மாநிலங்களவைத் தலைவராக இருந்த வெங்கையா நாயுடுவால் நிராகரிக்கப்பட்டது. 2011ஆம் ஆண்டில் நீதிபதி பி.டி. தினகரன் மீது பதவி நீக்க முயற்சிகள் நடந்து கொண்டிருந்தபோது அவர் தானாகவே பதவி விலகினார். இந்நிலையில் கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி மீது இம்பீச்மெண்ட் நடவடிக்கை எடுக்க தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications