இதுதான் ரொம்ப முக்கியம்.. சாட்டையை சுழற்றிய ககன்தீப் சிங் பேடி.. மருத்துவமனைகளுக்கு பறந்த உத்தரவு
சென்னை: அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் குறித்த நேரத்திற்கு வர வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு எப்போதும் மருத்துவ துறையில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடிதான். தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை பெரும்பாலும் இந்தியாவின் சுகாதார தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது. 19 ஆம் நூற்றாண்டிற்கு முன்பே சென்னை இந்தியாவின் மருத்துவ தலைநகரமாக மாறியது, ஏனெனில் நாடு முழுவதிலும் இருந்து நோயாளிகளின் நிலையான வருகையை அப்போதில் இருந்தே சென்னை எதிர்கொண்டு வந்துள்ளது. 1835 ஆம் ஆண்டில், மெட்ராஸ் மருத்துவக் கல்லூரிதான் மாநிலத்தில் மருத்துவப் படிப்புக்கான முதல் நிறுவனமாகும்.

ஒவ்வொரு வருடமும் வெளிநாடுகளில் இருந்து 45 முதல் 50 சதவீத சுகாதார சுற்றுலாப் பயணிகளையும் உள்நாட்டில் 40 சதவீதத்தையும் ஈர்க்கிறது. இந்தியாவில் மூன்றாவது அதிக எண்ணிக்கையிலான மருத்துவக் கல்லூரிகளுடன், தமிழ்நாடு நாட்டிலேயே மிகவும் மேம்பட்ட சுகாதார வசதிகளைக் கொண்டுள்ளது.
கொரோனா காலத்திலும் கூட தமிழ்நாட்டின் சுகாதாரம் மிக சிறப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு பொது சுகாதாரத்தில் தனக்கென ஒரு முத்திரையை பதித்துள்ளது. மேலும் மலிவு விலையில், குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு தரமான சுகாதார சேவைகளை வழங்குவதால் தமிழ்நாடு மிகவும் பிரபலமாக உள்ளது. சுகாதாரத் துறையில் குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்கள் காரணமாக சென்னை மட்டுமின்றி தமிழ்நாடு முழுக்கவே கிராமப்புற சுகாதார உள்கட்டமைப்பு சிறப்பான நிலையை அடைந்தது.
தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்பு வசதிக்கு மிக சிறந்த எடுத்துக்காட்டு சென்னைக்கு தினம் தினம் வரக்கூடிய பயணிகள்தான். தமிழ்நாட்டில் மருத்துவ துறை, மருத்துவ சேவை, மருத்துவத்தில் புதிய கண்டுபிடிப்புகள், மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை என்று அனைத்திலுமே நம்பர் 1 இடத்தில் உள்ளது.
மருத்துவமனை: இந்த நிலையில்தான் மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை சார்பாக முக்கிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதன்படி அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் குறித்த நேரத்திற்கு வர வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.
நோயாளிகள் காத்திருக்க கூடாது என்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில்தான் சுகாதாரத்துறை செயலாளராக ககன்தீப் சிங் பேடி நியமிக்கப்பட்டு இருந்த நிலையில் அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
முக்கிய உத்தரவு: தமிழ்நாட்டில் முக்கியமாக சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை என்று ஒவ்வொரு மாவட்டமும், மண்டலங்களும் மருத்துவ துறையில் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியை பெற்றுள்ளது. மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில்தான் இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் அரசு கருத்தரிப்பு மையம் தொடங்கப்படவுள்ளது; சென்னை எழும்பூரிலும், மதுரையிலும் ₹5 கோடி மதிப்பில் அரசு கருத்தரிப்பு மையங்கள் செப்டம்பர் மாதத்தில் நிறுவப்பட உள்ளது. இதுவரை தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே கருத்தரிப்பு மையங்கள் இருந்தன.
தற்போது தமிழ்நாட்டிலும் இது தொடங்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பு பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. முக்கியமாக ஏழை, எளிய மக்கள் இலவசமாக கருத்தரிப்பை தனியார் மருத்துவமனைக்கு செல்லாமல் அரசு மருத்துவமனைகளில் செய்ய முடியும்.
இது போக மருத்துவ துறையில் அடுத்த சாதனையாக தமிழ்நாட்டில் நாட்டிலேயே முதன் முறையாக ஸ்மார்ட் ஆம்புலன்ஸ் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. சிக்கனலில் ஆம்புலன்ஸ் அதிக நேரம் நிற்பதை தவிர்க்க இந்த முறை கொண்டு வரப்பட்டு உள்ளது. அதன்படி அவசரகால ஆம்புலன்ஸ் வரும்போது சிக்னலில் எச்சரிக்கை செய்யும் புதிய தொழில்நுட்பம் கொண்டு வரப்பட்டு உள்ளது.
சென்னையில்தான் முதற்கட்டமாக 16 சிக்னல்களில் 25 ஆம்புலன்ஸ் சேவைகள் இணைக்கப்பட்டுள்ளன. சென்னையில் 40 சிக்னலில் இந்த சேவையை விரிவுப்படுத்த திட்டமிட்டப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications