ஏப்ரலில் வெப்பம் குறையும், குளுகுளு காற்று வீசும்.. சட்டென்று மாறிய வானிலை - காரணம் என்ன
சுட்டெரிக்கும் சூரியன் சற்றே ஓய்வெடுக்கப் போகிறது. கொஞ்சம் மழையும் குளுமையான காற்றும் வீசப்போவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: சுட்டெரிக்கும் சூரியன் சற்றே தனது சூட்டை தணிக்கப்போகிறார். ஏப்ரல் மாதத்தில் காற்று வீசப்போவதால் வெப்பத்தின் தாக்கம் குறையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையமும், தனியார் வானிலை ஆய்வாளர் வெதர்மேன் பிரதீப் ஜானும் கூறியுள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் பிப்ரவரி இறுதியில் இருந்தே வெப்பநிலை இயல்பை விட அதிகமாகவே உள்ளது. சுட்டெரிக்கும் சூரியனால் வியர்வை மழையில் நனைத்து தவித்து வருகின்றனர் மக்கள். பல நகரங்களில் 100 டிகிரியைத் தாண்டி வெப்பநிலை பதிவாகி வருகிறது.
நேற்றைய தினம் ஈரோடு, கரூர் பரமத்தி, மதுரை விமான நிலையம், மதுரை நகரம், திருச்சி, வேலூர் ஆகிய 6 பகுதிகளில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டி வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்த நிலையில்
தமிழகத்தில் ஏப்ரல் மாதத்தில் வெப்பம் இயல்பை விட குறைவாகவும், மழை இயல்பை விட அதிகமாகவும் இருக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏப்ரலில் வெப்பம் தணியும்
ஒவ்வொரு மாதத்திற்குமான வானிலை முன்னறிவிப்பை நீண்டகால முன்னறிவிப்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கையாக வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், இந்தாண்டு ஏப்ரல் மாதத்திற்கான நீண்டகால முன்னறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாடு உள்ளிட்ட தெற்கு தீபகற்ப பகுதியில் ஏப்ரல் மாதத்தில் வெப்பம் இயல்பை ஒட்டியும், இயல்பை விட குறைவாகவும் இருப்பதற்கான சாதகமான சூழல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடை மழைக்கான வாய்ப்பு
வடமேற்கு இந்திய பகுதி, மத்திய இந்திய பகுதி மற்றும் சில வடகிழக்கு பகுதிகளில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. மழைக்கான வாய்ப்பு இந்தியா முழுவதும் இயல்பை ஒட்டி இருக்க கூடிய சாதகமான சூழல் இருந்தாலும், தமிழ்நாடு உள்ளிட்ட தெற்கு தீபகற்ப பகுதி மற்றும் இதனை ஒட்டிய மத்திய மேற்கு இந்திய பகுதிகளில் இயல்பை விட அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

வெப்பநிலையில் மாற்றம்
இந்திய பெருங்கடல் வெப்பநிலை தற்போது சமன் என்ற குறியீட்டில் உள்ள நிலையில், ஏப்ரல் மாதம் முழுவதும் இதே குறியீட்டில் இருக்க கூடிய சாதகமான சூழல் நிலவுவதாக தெரிவித்துள்ளது. இந்திய வானிலை நிலவரம், இந்திய பெருங்கடல் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றத்திற்கு உட்பட்டது என்பதால் இதனை தொடர்ந்து கண்காணித்து வருவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வெப்பம் தணிந்து காற்று வீசும்
கரூர், திருச்சி, சேலம், நாமக்கல் மதுரை மாவட்டங்களில் இருபுறமும் காற்று வீசக்கூடும் என வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கோவை, ஈரோடு மாவட்டங்களில் நிலக்காற்று சூடாக இருக்கும் என்றும் பதிவிட்டுள்ளார்.

வெப்பநிலை குறையும்
கடலுக்கு அருகாமையில் உள்ள சென்னைப் பகுதிகளில் உள்ள வெப்பம் குறைவாக இருக்கும் என்றும் நல்ல செய்தி கூறியுள்ளார் பிரதீப் ஜான். மேலும் அவர் தனது மற்றொரு பதிவில், கடலோர தமிழக வெப்பநிலைக்கு சற்றே ஓய்வு கிடைக்கப்போகிறது. வங்கக் கடலில் கடந்த 150 ஆண்டுகளில் மார்ச் மாதத்தில் 2 காற்றழுத்த தாழ்வுநிலைகளைப் பார்த்தோம். ஏப்ரல் மாதத்தில் கடலோர பகுதிகளில் வெப்பநிலை குறைவாக இருக்கும் என்றும் வெதர்மேன் பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications