சென்னையில் பனிமூட்டம்.. ரோடு தெரியலை... பைக்கில் சென்ற கமிஷனர் மகன் மின்கம்பத்தில் மோதி பலி
சென்னை: சென்னையில் கடுமையான பனிமூட்டம் மற்றும் போகி புகை மூட்டம் காரணமாக சாலை தெரியாததால் இருசக்கர வாகனத்தில் சென்ற தனியார் நிறுவன அதிகாரி ஒருவர் மின்கம்பத்தில் மோதி உயிரிழந்தார்.
நாடு முழுவதும் கடும் பனி மூட்டம் நிலவுவதால் விமான போக்குவரத்தும், சாலை போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. போகி பண்டிகை காரணமாக மக்கள் வேண்டாத பழைய பொருட்களை எரித்து வருவதால் சென்னை முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்த அஸ்வின் குமார், சாலை தெரியாததால் விபத்தில் உயிரிழந்துள்ள சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. வழக்கம் போல இரவுப்பணி முடிந்து தமது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
வரும் வழியில் கடுமையான புகை மற்றும் பனிமூட்டத்தால் சாலை தெரியாத நிலை காணப்பட்டது. அப்போது, எதிரே இருந்த மின்கம்பத்தில் அவர் இருசக்கர வாகனத்துடன் மோதினார். இந்த விபத்தில் அவர் படுகாயமடைந்து உயிரிழந்தார்.
பாதுகாப்புக்காக தலைக்கவசம் அணிந்திருந்தும் அஸ்வின்குமார் பலியானார்.
அஸ்வின் குமாரின் தந்தை திண்டுக்கல் மாநகராட்சியின் ஆணையராக இருந்து வருகிறார். பொங்கல் பண்டிகை தினத்தில் அஸ்வின் குமார் விபத்தில் பலியான செய்தி அறிந்து அவரது உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications