கரும்பு விவசாயிகளுக்கு ஸ்பெஷல் ஊக்கத்தொகை எப்போ? தீபாவளி வருதே.. ஸ்டாலினிடம் கேட்ட எடப்பாடி பழனிசாமி
சென்னை: கரும்பு விவசாயிகளுக்கு வழங்குவதற்கான எந்த விதமான நடவடிக்கைகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக அரசு எடுக்கவில்லை என்று தெரிவித்திருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முக்கிய கோரிக்கை ஒன்றை தமிழக அரசுக்கு விடுத்திருக்கிறார்.
கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகையை விடுவிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வருகிறார் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.. கடந்த வருடமும் இப்படித்தான் கோரிக்கை விடுத்து, திமுக அரசை கடுமையாக விமர்சித்திருந்தார்.

நிலுவைத்தொகை: "பாடுபட்டு சாகுபடி செய்த கரும்புக்கு போதிய விலை கிடைக்காத நிலை உள்ளது. பல சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்குத் தரவேண்டிய கோடிக்கணக்கான ரூபாயை நிலுவையில் வைத்துள்ளன, திமுக அரசு விவசாயிகளை வஞ்சிக்கிறது" என்றெல்லாம் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்திருந்தார்.
ஆனால், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் புகார்களுக்கு, வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மறுப்பு தெரிவித்து விளக்கம் ஒன்றையும் உடனடியாக தந்திருந்தார்.
குற்றச்சாட்டுகள்: அதில், "கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மஞ்சள் அழுகல் நோய், வேர்ப்புழு தாக்குதல் மற்றும் காட்டுப்பன்றி தொல்லையால் கரும்பு பயிர்கள் பாதிப்படைந்து விவசாயிகள் நஷ்டம் அடைந்திருக்கிறார்கள்.. பல சர்க்கரை ஆலைகள் கோடிக்கணக்கான ரூபாய் நிலுவையில் வைத்துள்ளன.. எதிர்க்கட்சித் தலைவர் விவரம் தெரியாமல் குற்றச்சாட்டை கூறுகிறார்" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், மீண்டும் அதே கோரிக்கையை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளதுடன், அது தொடர்பாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்.. அந்த அறிக்கையில் உள்ளதாவது:
கரும்பு சப்ளை: "கரும்பு டன் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.4000 வழங்கப்படும் என்று சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது வாக்குறுதி அளித்து ஆட்சியைப் பிடித்து 41 மாதங்கள் கடந்த நிலையில், 2023-24-ம் ஆண்டில் கரும்பு சப்ளை செய்த அனைத்து விவசாயிகளுக்கும் சிறப்பு ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூ.215 வழங்கப்படும் என்று சட்டமன்றத்தில் வேளாண்மை துறை அமைச்சர் அறிவித்தார்..
அதையே உறுதி செய்து தீபாவளிக்கு முன்பு அனைத்து கரும்பு விவசாயிகளுக்கும் இத்தொகை வழங்கப்படும் என்று அரசின் சார்பில் செய்தி குறிப்பும் வெளியிடப்பட்டது. ஆனால் இன்று வரை இத்தொகை கரும்பு விவசாயிகளுக்கு வழங்குவதற்கான எந்த விதமான நடவடிக்கைகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக அரசு எடுக்கவில்லை.
சிறப்பு ஊக்கத்தொகை: எனவே, தீபாவளிக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் ஊக்கத்தொகை கிடைக்காத கரும்பு விவசாயிகள் இந்தாண்டு தீபாவளியை வழக்கமான உற்சாகத்தில் கொண்டாட முடியாமல் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர். உடனடியாக கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையை வழங்க முதலமைச்சர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.
2023-2024 அரவைப் பருவத்துக்கு சர்க்கரை ஆலைகளுக்கு, பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்குவதற்காக ரூ. 247 கோடியை கடந்த வாரம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.. தகுதியுள்ள விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறியிருந்த தமிழக அரசு, கரும்பு விவசாயிகளின் நலனுக்காக ரூ.247 கோடி மதிப்பில் மாநில அரசு வழங்கும் சிறப்பு ஊக்கத் தொகையினால் சுமார் 1.20 லட்சம் கரும்பு விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications