வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை
சென்னை: 2026-27 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி படிவங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம், 2025-26 நிதியாண்டில் ஈட்டிய வருமானத்துக்காக தாக்கல் செய்ய வேண்டிய அனைத்து 7 வருமான வரி படிவங்களையும் அறிவித்துள்ளது. யார் யார் என்ன படிவங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை நிதியாண்டு கணக்கிடப்படுகிறது. இன்று ஏப்ரல் 1ம் தேதி என்பதால் புதிய நிதியாண்டு ஆரம்பம் ஆகி உள்ளது. நாளை முதல் புதிய நிதியாண்டின் கணக்குகள் செயல்பட ஆரம்பிக்கும். புதிய நிதியாண்டு பிறக்கும் போது, வருமான வரி முதல் பல்வேறு விஷயங்களில் பல்வேறு மாற்றங்கள் மற்றும் சீர் திருத்தங்கள் இருப்பது வழக்கம் ஆகும். அதன்படியே 2026-27 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி படிவங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம், 2025-26 நிதியாண்டில் ஈட்டிய வருமானத்துக்காக தாக்கல் செய்ய வேண்டிய அனைத்து 7 வருமான வரி படிவங்களையும் அறிவித்திருக்கிறது.

இதில் முதல் 4 படிவங்கள் சிறு மற்றும் குறு வருமான வரி செலுத்துபவர்களுக்கானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.டி.ஆர் படிவம்-1 (சஹாஜ்) என்பது இதுவரை ஒரு வீடு வைத்திருப்பவர்கள் மட்டுமே இதைப் பயன்படுத்த முடிந்தது. இனி இரண்டு வீடுகள் மூலம் வருமானம் பெறுபவர்களும் இந்த படிவத்தைப் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரூ.50 லட்சம் வரை வருமானம் கொண்ட சம்பளம் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கானது. 2-வது படிவம் முதலீட்டாளர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கானது. ரூ.50 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ள தனிநபர்கள் மற்றும் கூட்டு குடும்பத்தினர் இதனைப் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
3-வது படிவம் தொழில் செய்பவர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கானது. தனிப்பட்ட முறையில் தொழில் அல்லது சுயதொழில் செய்பவர்கள், தனியார் நிறுவனங்களின் பங்குதாரர்களாக இருப்பவர்கள், தணிக்கை செய்ய வேண்டிய கட்டாயம் உள்ள வணிகம் செய்பவர்கள், கிரிப்டோகரன்சி சொத்துக்கள் மூலம் வருமானம் ஈட்டுபவர்கள் இந்த படிவத்தை தாக்கல் செய்ய வேண்டும்.
4-வது படிவம் (சுகம்) சிறு வணிகர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கானது.இந்திய வருமான வரிச் சட்டம் பிரிவு 44AD-ன் கீழ் வரும் வணிகர்கள். (இதன் படி, உங்கள் மொத்த விற்றுமுதல் அல்லது வருவாய் ₹2 கோடிக்கு மிகாமல் இருக்க வேண்டும்). : பிரிவு 44ADA-ன் கீழ் வரும் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள், கணக்காளர்கள், தொழில்நுட்ப ஆலோசகர்கள் போன்றவர்கள் தாக்கல் செய்ய முடியும்.
ITR-4 படிவத்தில், உங்கள் ஒவ்வொரு சிறு செலவையும் அல்லது பற்று வரவு சீட்டுகளையும் பராமரிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறப்படுகிறது.
வணிகர்கள் தங்கள் மொத்த வருவாயில் குறைந்தபட்சம் 6% (டிஜிட்டல் பரிவர்த்தனை) அல்லது 8% (ரொக்கப் பரிவர்த்தனை) லாபமாகக் காட்டி வரி செலுத்தினால் போதும். தொழில் வல்லுநர்கள் தங்கள் வருவாயில் 50% லாபமாகக் காட்டினால் போதுமானது. உங்கள் வருமானம் சட்டப்பூர்வ வரம்பிற்குள் இருக்கும் வரை, நீங்கள் தணிக்கை செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை.
5-வது படிவம் நிறுவனங்கள் மற்றும் சங்கங்களுக்கானது. 6-வது படிவம் கம்பெனிகளுக்கானது. 7-வது படிவம் அறக்கட்டளைகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கானது. ஜூலை 23, 2024-க்கு முன் மற்றும் பின் செய்யப்பட்ட பரிவர்த்தனைகளைத் தனித்தனியாகக் கணக்கு காட்ட வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.1 கோடிக்கு மேல் இருப்பவர்கள் இனி தங்கள் சொத்து மற்றும் கடன் விவரங்களைக் கட்டாயமாகத் தெரிவிக்க வேண்டும். முன்பு இது ரூ.50 லட்சமாக இருந்தது. தாக்கல் செய்ய தனிநபர்களுக்கு வருகிற ஜூலை 31-ந்தேதியும், வணிகம் மற்றும் தொழில் செய்பவர்கள் ஆகஸ்டு 31-ந்தேதியும் தணிக்கை செய்யப்பட வேண்டிய கணக்குகளுக்கு அக்டோபர் 31-ந்தேதியும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications