நடுத்தர சம்பளதாரர்களுக்கு வருமான வரியில் நல்ல செய்தி: பட்ஜெட்டில் ரூ.17 லட்சம் வரை விலக்கு வாய்ப்பு?
சென்னை: வரப்போகும் 1ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய போகிறார்... இது அவர் தாக்கல் செய்யும் 9வது பட்ஜெட். இந்த பட்ஜெட்டை எதிர்பார்த்து நாடு முழுவதுமுள்ள மக்கள், குறிப்பாக நடுத்தர குடும்பங்கள் மற்றும் சம்பளம் வாங்கும் ஊழியர்கள், அதிக ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்... இவர்களுக்கான சிறப்பு அறிவிப்புகள் வருமா? அந்தவகையில் சில எதிர்பார்ப்புகளும் உள்ளன.. அவைகளை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
கடந்த பட்ஜெட்டில் நடுத்தர மக்களுக்கு ஒரு பெரிய நிம்மதி கிடைத்தது. புதிய வருமான வரி முறையின் கீழ் ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் வரை இருந்தால் வரி இல்லை என்று அரசு அறிவித்தது.

வருமான வரி
இந்த அறிவிப்பின் காரணமாக எத்தனையோ பேர், பழைய வரி முறையை விட்டு புதிய வரி முறைக்கு மாறினார்கள்.. அரசின் கணக்குப்படி பார்த்தால், 90 சதவீதம் பேர் புதிய வரி முறையை தேர்வு செய்துள்ளனர்.
இந்நிலையில், வரப்போகும் பட்ஜெட்டில் வருமான வரியில் மேலும் சலுகைகள் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது... குறிப்பாக ரூ.12 லட்சமாக உள்ள வரிவிலக்கு வரம்பை ரூ.17 லட்சமாக உயர்த்த வாய்ப்பு இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் சொல்கிறார்கள்.. அப்படி மட்டும் நடந்தால், நடுத்தர வர்க்க மக்களுக்கு பெரிய நிவாரணமும், நிம்மதியும் கிடைத்துவிடும்..
வரிச்சலுகைகள்
ஏனென்றால் புதிய வரி முறையில் இன்னும் சில குறைபாடுகள் உள்ளதாக மக்கள் கூறுகிறார்கள்.. வீட்டு கடன், கல்விக் கடன், மருத்துவக் காப்பீடு மற்றும் வீட்டு வாடகை போன்றவற்றுக்கு புதிய வரி முறையில் சலுகைகள் இல்லை. ஆனால், இவை அனைத்துக்கும் பழைய வரி முறையில் வரிச்சலுகைகள் கிடைக்கின்றன. அதனால்தான் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் இன்னும் பழைய வரி முறையையே பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த ஆண்டு பட்ஜெட்டில் இந்த சலுகைகளையும் புதிய வரி முறையில் சேர்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு சற்று அதிகமாக உள்ளது என்று சொல்லலாம்..
மருத்துவ காப்பீட்டு வரிச்சலுகை
அதேபோல மருத்துவ செலவுகள் தொடர்ந்து உயர்ந்து வருவதால், மருத்துவ காப்பீட்டுக்கான வரிச்சலுகை அவசியம் என்று பலர் வலியுறுத்துகின்றனர். குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு இது மிக முக்கியமான விஷயமாக உள்ளது.. அவர்களுக்கான சலுகைகள் இப்போது குறைவாக இருப்பதால், இந்த பட்ஜெட்டில் முதியவர்களுக்காக தனிச்சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்ற நம்பிக்கையும் உள்ளது.
அதேபோல சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் நிலையான கழிவு தற்போது ரூ.75,000 ஆக உள்ளது. பணவீக்கம் அதிகரித்து வரும் சூழலில், இந்த தொகையை ரூ.1 லட்சம் அல்லது அதற்கு மேலும் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இது நடுத்தர குடும்பங்களின் மாதச் செலவுச் சுமையை ஓரளவு குறைக்கும் என்று நம்பப்படுகிறது.
விக்சித் பாரத் 2047
இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டின் முக்கிய நோக்கம், மக்களின் கைகளில் அதிக பணம் இருக்கச் செய்வதுதான் என்று கூறப்படுகிறது. மக்கள் அதிகமாக செலவு செய்தால், நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடையும்.... இந்த வளர்ச்சியின் மூலம் 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற "விக்சித் பாரத் 2047" என்ற இலக்கை அடைய அரசு திட்டமிட்டுள்ளது.
மொத்தத்தில், வருமான வரிச்சலுகைகள், எளிமையான வரி விதிப்பு முறை மற்றும் நடுத்தர மக்களுக்கு நிம்மதி தரும் அறிவிப்புகள் இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் இடம்பெறுமா என்பதே மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் விஷயமாக உள்ளது... பொறுத்திருந்து பார்ப்போம்...!!












Click it and Unblock the Notifications