சாலைகளில் ம்மா..ம்மா.. தொல்லையா? சென்னை மாநகராட்சியின் அதிரடி அறிவிப்பு! ’மாட்டு’ ஓனர்ஸ் உஷார்
சென்னை: சென்னை மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளில் சாலையில் அவிழ்த்து விடப்பட்டுள்ள மாடுகள் மற்றும் தெரு நாய்கள் தாக்கி பொதுமக்கள் படுகாயம் அடையும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மாநகராட்சி என்னதான் நடவடிக்கை எடுத்தாலும் மாட்டின் உரிமையாளர்கள் கண்டு கொள்வதாக தெரியவில்லை. இந்த நிலையில் சாலையில் சுற்றி திரியும் மாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் அதன் உரிமையாளர்களுக்கு விதிக்கும் அபராத தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மாடுகள் சாலைகளில் சுற்றித் திரிவது அதிகரித்து வருகிறது. இதுமட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், கடந்த சில மாதங்களில் மட்டும் பத்துக்கும் மேற்பட்டோர் மாடுகள் தாக்கி படுகாயம் அடைந்திருக்கின்றனர்.

மேலும், தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்கள் பொது மக்களை கடித்து அச்சுறுத்தும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை விமான நிலையத்தில் கூட ஏராளமான நாய்கள் சுற்றித் திரிவது விமான பயணிகளை அச்சுறுத்தலில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், நாய் மற்றும் மாடுகளினால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலைக் களைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. சென்ற ஆண்டு நவம்பர் மாதம், வண்ணாரப்பேட்டை பகுதியில் ஒரு நாய் 29 நபர்களை கடித்துக் குதறியது. இந்த ஆண்டு மே 6-ஆம் நாள் நுங்கம்பாக்கத்தில் உள்ள சென்னை மாநகராட்சி பூங்காவில், நாயினுடைய உரிமையாளர் முன்பே தாய், மகளை நாய் கடித்துக் குதறியது, இந்த ஆண்டு ஜூன் மாதம் மாங்காடு பகுதியில் நாய் கடித்து 11-வது சிறுவன் பாதிக்கப்பட்டது என பல சம்பவங்கள் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன.
இதேபோன்று இந்த ஆண்டு ஜனவரி மாதம் மாடு தாக்கி நங்கநல்லூரைச் சேர்ந்த ஒருவர் இறந்தது.. ஜூன் மாதம் மாடு முட்டி திருவொற்றியூரின் ஒரு பெண் படுகாயமடைந்தது. திருவல்லிக்கேணியில் மாடு முட்டி முதியவர் இறந்தது என பல சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இது குறித்து மாநகராட்சி சார்பில் எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த நிலையில், கடந்த 19-ஆம் தேதி சென்னை வண்ணாரப்பேட்டையில் மூன்றாவது படிக்கும் பத்து வயது சிறுவனை தெரு நாய் கடித்துக் குதறியதில் அந்தச் சிறுவனின் இடது பக்கத் தோள்பட்டையில் பலத்த காயமடைந்த நிலையில், அச்சிறுவன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான். மேலும் பெண் ஒருவரை எருமை மாடு முட்டித் தூக்கிச் சென்ற நிலையில், அவர் படுகாயமடைந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மாநகராட்சி தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டதோடு மாடுகளைப் பிடித்து அபராதம் விதிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது. ஆனாலும் மாட்டின் உரிமையாளர்கள் கண்டு கொள்வதாக தெரியவில்லை. இந்நிலையில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி அபராத தொகையை அதிகரித்துள்ளது. இன்று மாநகராட்சி கூட்டம் நடைபெற்ற நிலையில் ஏற்கனவே ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்ற அறிவிப்பு தற்போது உயர்த்தி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதன்படி சென்னையில் சாலையில் சுற்றி தெரியும் மாடுகளை பிடிக்கும் போது முதன் முறையாக பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதே மாடு இரண்டாம் முறைப்பிடிப்பட்டால் மாட்டின் உரிமையாளருக்கு அபராத தொகையாக 15 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படும், எனவும் பராமரிப்பு செலவுக்காக ஒரு மாட்டுக்கு ஆயிரம் ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தெருவில் சுற்றித் திரியும் மாடுகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவே இந்த அபராத தொகை உயர்வு என மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications