ஆளுநர் தேநீர் விருந்தில் தமிழ்நாடு அரசு சார்பில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் பங்கேற்பு!
சென்னை: நாட்டின் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு அமைச்சர்கள் பங்கேற்பர் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். ஆளுநர் மாளிகையில் இன்று மாலை நடைபெறும் தேநீர் விருந்தில் ஆளுநர் பதவிக்கு மதிப்பளித்து முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று தேநீர் விருந்து அளிக்கிறார். இதில் பங்கேற்க அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்து அழைப்பைப் புறக்கணிப்பதாக அறிவித்தன.

இது தொடர்பாக திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறுகையில், திமுக சார்பில் ஆளுநரின் தேநீர் விருந்தில் யாரும் பங்கேற்கமாட்டார்கள்; ஆனால் தமிழ்நாடு அரசு சார்பில் பங்கேற்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார் என்றார். திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி கூறுகையில், ஆளுநர் நடுநிலையாக இருக்க வேண்டும். அவர் ஏதோ ஒரு கட்சிக்காரர் போல் நடந்து கொள்ளும் பொழுது எதிர்க்கட்சிகளும் இப்படிதான் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவிப்பார்கள் என்றார். இதேபோல திமுகவின் கூட்டணி கட்சிகள் அனைத்துமே ஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணிப்பதாக அறிவித்தன.
ஆனால் சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, ஆளுநர் ஆர்.என்.ரவியின் தேநீர் விருந்தில் பங்கேற்போம் என அறிவித்திருந்தது.
இந்த நிலையில் சென்னை கோட்டையில் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியேற்றி வைத்து உரையாற்றினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று அளிக்கும் தேநீர் விருந்தில் தமிழ்நாடு அரசு சார்பில் பங்கேற்கிறோம். ஆளுநர் என்ற பதவிக்கு மதிப்பளித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு அரசின் அமைச்சர்கள் தேநீர் விருந்தில் பங்கேற்பர் என தெரிவித்தார். அதாவது திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் யாரும் இந்த தேநீர் விருந்தில் பங்கேற்கமாட்டார்கள். அதேநேரத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்கின்றனர்.












Click it and Unblock the Notifications