நீ கைய குடு பங்கு! அமெரிக்கா முட்டி மோத.. சத்தமில்லாமல் இந்தியா பார்த்த வேலை! தோள் கொடுத்த ரஷ்யா!
சென்னை: இஸ்ரேல் - ஈரான் - அமெரிக்கா மோதலால் போர் பதற்றம் மற்றும் உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த மார்ச் மாதத்தில் ரஷ்யாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்த கச்சா எண்ணெயின் மதிப்பு மட்டும் மூன்று மடங்கு உயர்ந்து ரூ.58,200 கோடியை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் காரணமாக உலகளவில் எரிபொருள் சந்தையில் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உலகின் மிக முக்கிய கடல் வழித்தடங்களில் ஒன்றான ஹார்முஸ் நீரிணை பகுதியில் கப்பல் போக்குவரத்து சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரானின் கடுமையான எச்சரிக்கை காரணமாக ஈரான் துறைமுகங்களில் இருந்து வரும் எண்ணெய் கப்பல்கள் மிகுந்த சிக்கலில் உள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி உலக அளவில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
அமெரிக்கா ஈரான் போர்
இந்த சூழ்நிலையில், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்ட இடைவெளியை சமாளிக்க இந்தியா மாற்று வழிகளைத் தேடியது. அதன்படி ரஷ்யா நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி கணிசமாக உயர்ந்துள்ளது. ஐரோப்பிய ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் படி, 2026 மார்ச் மாத நிலவரப்படி ரஷ்ய எரிபொருள்களை அதிகமாக இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. முதலிடத்தில் சீனா உள்ளது.
இந்தியா ரஷ்யா
மார்ச் மாதத்தில் மட்டும் இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து மொத்தமாக ரூ.64,000 கோடி மதிப்பிலான ஹைட்ரோகார்பன் பொருட்களை இறக்குமதி செய்துள்ளது. இதில் கச்சா எண்ணெய் மட்டும் ரூ.58,200 கோடி மதிப்பில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து நிலக்கரி மற்றும் பிற எண்ணெய் சார்ந்த பொருட்களும் அதிகளவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
கச்சா எண்ணெய்
இதற்கு முன்பு பிப்ரவரி மாதத்தில் இந்தியா, ரஷ்ய ஹைட்ரோகார்பன் பொருட்களை ரூ.19,700 கோடி மதிப்பில் இறக்குமதி செய்திருந்தது. அப்போது ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி 81 சதவீத அளவில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் மார்ச் மாதத்தில் இந்த அளவு திடீரென அதிகரித்திருப்பது கவனிக்கத்தக்கதாக உள்ளது.
எண்ணெய் இறக்குமதி
மற்றொரு முக்கிய அம்சமாக, இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதி அளவு மார்ச் மாதத்தில் சுமார் 4 சதவீதம் குறைந்திருந்தாலும், ரஷ்யாவிடம் இருந்து மட்டும் இறக்குமதி இரு மடங்கு அதிகரித்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மாற்று ஆதாரங்களில் இருந்து எண்ணெய் பெறும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
போரின் தாக்கம்
முன்னதாக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதித்திருந்தது. இதனால் இந்தியா சில காலம் அந்த இறக்குமதியை குறைக்கும் முயற்சி எடுத்திருந்தது. ஆனால் மேற்காசியாவில் ஏற்பட்ட போர் பதற்ற சூழ்நிலை காரணமாக, உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்ட தடை இந்தியாவை மீண்டும் ரஷ்யா நோக்கி திரும்பச் செய்துள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
எரிபொருள் விலை
மேற்காசிய மோதலின் தாக்கம் உலகளாவிய எரிபொருள் சந்தையை மாற்றி அமைத்து வருகிறது. அந்த தாக்கத்தின் ஒரு பகுதியாக இந்தியா, ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரித்துள்ளது. இந்த நிலை நீடித்தால், எதிர்காலத்தில் எரிபொருள் விலை இந்தியாவைப் பொறுத்தவரை மாற்றத்தை சந்திக்க வாய்ப்பில்லை என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications