இந்தியாவில் கொரோனா பாதிப்பை விட மீண்டவர்கள் எண்ணிக்கை அதிகம் - அதிகரிக்கும் நம்பிக்கை
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,981 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 17,861 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.
சென்னை: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களை விட மீண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 15,981 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 17,861 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.
நேற்று முன்தினம் 18,987 பேர், நேற்று 16,862 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,40,53,573 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 17,861 பேர் கொரோனாவிலிருந்து மீண்ட நிலையில் கொரோனாவிலிருந்து 3,33,99,961 பேர் மீட்டுள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 166 பேர் பலியாகியுள்ளனர். நேற்று முன்தினம் 246 பேரும், நேற்று 379 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்த நிலையில் இன்று கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 4,51,980 ஆக உள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 2,01,632 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் 8,36,118 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் 97,23,77,045 பேர் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கோவிஷீல்டு
நாட்டில் தினசரி கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மத்திய மாநில அரசுகள் கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா நோய்த் தொற்றை தடுக்கும் பேராயுதமாக தடுப்பூசி உள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலைத் தடுக்க கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகின்றன.

100 கோடி டோஸ் தடுப்பூசி விநியோகம்
மத்திய அரசு மாநிலங்களுக்கு தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. தடுப்பூசி திட்டத்தின்கீழ் மாநிலங்களுக்கு 100 கோடி தடுப்பூசிகள் வினியோகிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கியது. கொரோனா தடுப்பூசி திட்டத்தின்கீழ் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் இதுவரையில் மத்திய அரசு சார்பில் 100 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் வினியோகிக்கப்பட்டுள்ளன. இதில் பயன்படுத்தியதுபோக மாநிலங்களிடமும், யூனியன் பிரதேசங்களிடமும் 10,53,11,155 டோஸ்கள் கையிருப்பு இருப்பதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

ஜொலிக்கும் புராதன நினைவுச்சின்னங்கள்
இதை சிறப்பாக கொண்டாடும் வகையில் மத்திய அரசு இந்தியாவில் உள்ள 100 புராதன நினைவு சின்னங்களை மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்க ஏற்பாடு செய்துள்ளது. தமிழ்நாட்டில் ஐந்து நினைவு சின்னங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மகாபலிபுரம், செஞ்சிக்கோட்டை, வேலூர் கோட்டையும் மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கின்றன. வரலாற்று சிறப்பு மிக்க வேலூர் கோட்டை அகழியின் ஒரு பகுதி மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது. இதனை அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.












Click it and Unblock the Notifications