அமித் ஷா உடன் 'காந்தாரா’ ரிஷப் ஷெட்டி திடீர் மீட்டிங்.. போட்டோவில் பாருங்க.. அனுமன் சிலை வேற!
டெல்லி: 'காந்தரா' மூலம் புகழ்பெற்ற நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி, சனிக்கிழமையன்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசியுள்ளார். 'ஜெய் ஹனுமான்' திரைப்படத்தில் நடித்து வரும் ரிஷப் ஷெட்டி அமித் ஷாவை சந்தித்துள்ளது திரையுலகில் கவனம் பெற்றுள்ளது.
பிரசாந்த் வர்மா இயக்கத்தில் ரிஷப் ஷெட்டி நடிக்கும் 'ஜெய் ஹனுமான்' படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் பூஜையுடன் தொடங்கப்பட்டது. அனுமன் பிறந்த இடமான ஹம்பி அஞ்சனாத்ரியில் பூஜையுடன் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. 'காந்தாரா 2' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு ரிஷப் ஷெட்டி நாயகனாக நடிக்கும் படம் இது. இதில் ஹனுமான் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அண்மையில் 'ஜெய் ஹனுமான்' படக்குழுவினர், அனுமன் கதாபாத்திரத்தில் ரிஷப் ஷெட்டி இடம்பெறும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர். அனுமன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக, நடிகர் தற்போது தீவிரமான உடல் உருமாற்றத்திற்கு உள்ளாகி வருகிறார். 'ஜெய் ஹனுமான்' திரைப்படம் இந்தியத் திரையுலகில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் புராணப் படங்களில் ஒன்றாக உள்ளது.
இந்நிலையில், நடிகரும் திரைப்பட இயக்குநருமான ரிஷப் ஷெட்டி சனிக்கிழமையனறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். அந்த சந்திப்பு ஒரு மறக்க முடியாத அனுபவம் என்று அவர் கூறியுள்ளார். 'காந்தாரா' மூலம் புகழ் பெற்ற ரிஷப் ஷெட்டி, அமித் ஷா உடனான சந்திப்பின் சில காட்சிகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
"உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கும் பாக்கியம் பெற்றேன். காந்தாரா மற்றும் காந்தாரா அத்தியாயம் 1-ஐப் பாராட்டி அவர் பேசிய அந்தத் தருணம், என் வாழ்வின் மறக்க முடியாத தருணங்களில் ஒன்றாக அமைந்தது. அவருடன் தனது வரவிருக்கும் திட்டங்கள் குறித்து விவாதித்தது ஒரு "அற்புதமான அனுபவமாக" இருந்ததது" என ரிஷப் ஷெட்டி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளார்.
மேலும், "அவர் நமது வரலாறு, கலாச்சாரம், கலை மற்றும் திரைப்படத் தயாரிப்பு குறித்த தனது ஆழ்ந்த அறிவையும் புரிதலையும் பகிரத் தொடங்கியபோது, நான் உண்மையிலேயே மகிழ்ச்சியடைந்தேன்" என்று நடிகர் ரிஷப் ஷெட்டி தெரிவித்துள்ளார்.
எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா, "திரைப்படங்கள் மற்றும் கலாச்சாரம் குறித்து உங்களுடன் உரையாடியது உண்மையிலேயே மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. உங்கள் திரைப்படங்கள் மூலம் இந்திய நாகரிகத்தையும் கலாச்சாரத்தையும் அத்தகைய புரிதலுடனும் உணர்வுப்பூர்வமாகவும் நீங்கள் முன்வைக்கும் விதம் உண்மையிலேயே போற்றத்தக்கது மற்றும் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எதிர்காலத்திலும் உங்கள் பணிகளின் மூலம் மக்களுக்குத் தொடர்ந்து உத்வேகம் அளிப்பீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன" எனத் தெரிவித்துள்ளார்.
அமித் ஷா உடனான சந்திப்பு தொடர்பாக ரிஷப் ஷெட்டி பகிர்ந்துள்ள புகைப்படங்களில், இருவருக்கும் அருகில் அனுமன் சிலை ஒன்றும் உள்ளது. இதுவும் பல்வேறு யூகங்களை அரசியல் மற்றும் திரையுலகினர் மத்தியில் கிளப்பிவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications