அடுத்த 5 நாட்களுக்கு.. இந்த கடலோர மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்.. இந்திய வானிலை ஆய்வு மையம்
சென்னை: தமிழ்நாட்டில் வரும் நவம்பர் 26ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த அக். 26ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அப்போது முதலே மாநிலத்தில் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. ஏற்கனவே கடந்த சில வாரங்களில் பெய்த கனமழையால் வடதமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தென்னிந்தியாவின் சில பகுதிகளில் இடைவிடாத பெய்த கனமழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஆந்திர மாநிலத்தில் வெள்ளத்தால் 34 பேர் பலியாகியுள்ளனர். அதேபோல கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகிறது.

அடுத்த 48 மணி நேரம்
இந்தச் சூழலில் தமிழகத்தின் சில பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் 24 டிகிரி செல்சியஸாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எந்தெந்த மாவட்டங்கள்
செவ்வாய்க்கிழமை (நவ 23) அன்று திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழைக்கு வாய்ப்பு
அதேபோல புதன்கிழமை (நவ 24) அன்று கன்னியாகுமரி, ராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் வட தமிழகத்தின் உள்வட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வியாழக்கிழமை (நவ 25) தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
Recommended Video

இந்திய வானிலை ஆய்வு மையம்
இந்திய வானிலை ஆய்வு மையத்தின்படி, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் கடலோர மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை கனமழை முதல் மிகக் கனமழை பெய்யும். மேலும் மாநிலத்தின் மற்ற மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது












Click it and Unblock the Notifications