தொழில் முதலீடுகள் குவியுது.. முதலீட்டாளர்கள் மாநாடு லோகோவை வெளியிட்டு ஹேப்பி நியூஸ் சொன்ன ஸ்டாலின்!
சென்னை: திமுக ஆட்சியில் தொழில் முதலீடுகள் குவிந்துவருகின்றன. தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு, உள்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக உள்ளதால் தொழில் முதலீடுகள் குவிகின்றன என உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 இலச்சினை வெளியீட்டு விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஜனவரி 7 மற்றும் 8ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்தநிலையில், சென்னை ஆர்.ஏ. புரத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 இலச்சினையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதன்பிறகு பேசிய அவர், " கலைஞர் ஆட்சியில் தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சி அடைந்தது. திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கும், உள்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக உள்ளதால் தொழில் முதலீடுகள் குவிந்து வருகின்றன" என தெரிவித்தார்.

தமிழ்நாட்டை வரும் 2030-ம் ஆண்டில் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டுக்கு அதிக முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அரபு நாடுகளுக்கும், தொடர்ந்து சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கும் பயணித்து முதலீடுகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டார்.
தமிழ்நாடு அரசின் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை, உயர் தொழில்நுட்பம் சார்ந்த தொழில் முதலீடுகளை ஈர்த்திடுவது மட்டுமல்லாமல், பெருமளவில் வேலைவாய்ப்பு அளித்திடும் தொழில் முதலீடுகளையும் ஈர்த்திட முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதன் பலனாக, ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றது முதல் இதுநாள் வரை, 4.15.282 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.2.97196 கோடி மதிப்பிலான 241 முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாக, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இதற்கான பணிகளை தற்போது தொழில்துறை மற்றும் தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம் ஆகியவை இணைந்து மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கான இலட்சினையை வெளியிட்டார்.
சென்னையில் இன்று நடைபெற்ற தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் நடைபெற்ற "உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024"-க்கான முன்னோட்ட அறிமுக விழாவின்போது, 2024 ஜனவரி 7 மற்றும் 8 தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ள இம்மாநாட்டிற்கான இலச்சினையை (Logo) வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்.
இந்த விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "தமிழ்நாட்டில் 2 ஆண்டுகளில் 240 ஒப்பந்தங்கள் மூலம் 2.96 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் 4.14 லட்சம் வேலை வாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. திமுக ஆட்சியில் தொழில் முதலீடுகள் குவிந்து வருகின்றன. தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு, உள்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக உள்ளதால் தொழில் முதலீடுகள் குவிகின்றன. கருணாநிதி ஆட்சியில் தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சி அடைந்தது. தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியனாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனவேதான், பல பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் புதிய, விரிவாக்க, பல்முனைப்படுத்தப்படவுள்ள மற்றும் மதிப்புக் கூட்டு திட்டங்களுக்காக தமிழ்நாட்டைத் தேர்ந்தெடுத்து வருகின்றன. மாநிலத்தில் தொடங்கப்பட்ட புத்தொழில்களும், நன்கு வளர்ச்சி பெரும். சிறந்த சூழலமைப்பும் தமிழ்நாட்டில் நிலவுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில், தொழில் வளர்ச்சியிலும், பொருளாதாரத்திலும் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது. சமீபத்தில், நிதி ஆயோக் வெளியிட்ட ஏற்றுமதி தயார்நிலை குறியீடு தரவரிசைகளின்படி, 80.89 புள்ளிகளுடன் அகில இந்திய அளவில் முதல் இடத்தை பெற்றுள்ள தமிழ்நாடு, மின்னணுவியல் ஏற்றுமதியிலும் முதல் இடத்தில் உள்ளது. மேலும், அதிக எண்ணிக்கையில் தொழிற்சாலைகள் மற்றும் பணியாளர்களை கொண்ட மாநிலங்களில் முதலிடத்திலும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கையில், அகில இந்திய அளவில், இரண்டாவது இடத்திலும் உள்ளது.
கடந்த ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் தொழில் புரிவதற்கு சிறந்த மாநிலங்களுள் ஒன்றாகவும் தமிழ்நாடு விளங்கி வருகிறது. மேலும், ஏற்றுமதித் தொழில்களுக்கான தயார்நிலைக் குறியீட்டில் நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications