திமுக இளைஞரணியில் புதிய உறுப்பினர் சேர்ப்பு தீவிரம்! உதயநிதி ஸ்டாலின் பிக்ஸ் செய்த டார்கெட்!
சென்னை: தமிழகம் முழுவதும் திமுக இளைஞரணியில் புதிய உறுப்பினர் சேர்ப்பு படலம் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் திமுக இளைஞரணியை வலிமைப்படுத்தும் முனைப்பில் இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
இதனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் திமுக இளைஞரணி நிர்வாகிகளுக்கு டார்கெட் பிக்ஸ் செய்யப்பட்டு, சத்தமின்றி புதிய உறுப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

திமுக இளைஞரணி
1980-ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் நாள் மதுரை ஜான்சிராணி பூங்காவில் திமுகவின் துணை அமைப்பாக இளைஞரணி உருவாக்கப்பட்டது. திமுக இளைஞரணியின் கட்டமைப்பும் அதன் உறுப்பினர்கள் எண்ணிக்கையும் மற்ற அரசியல் கட்சிகளில் இல்லாத ஒரு சிறப்பாக பார்க்கப்படுகிறது. இளைஞரணி தொடங்கப்பட்டு 42 ஆண்டுகள் கடந்து தற்போது 43ஆம் ஆண்டு நடைபெற்று வருகிறது.

உதயநிதி ஸ்டாலின்
குடியுரிமைத் திருத்தச் சட்டம் எதிர்ப்பு, நீட் விலக்குப் போராட்டம், கொரோனா கால நிவாரணப் பணிகள் ஆகியவற்றில் திமுக இளைஞரணியின் பங்களிப்பு மிக முக்கியமானது. அதேபோல் திமுக எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோதெல்லாம் அக்கட்சி நடத்திய ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களில் இளைஞரணி உறுப்பினர்களின் பங்களிப்பும் அபரிமிதமானது. இப்படி பல்வேறு பெருமைகளை கொண்ட திமுக இளைஞரணியை இன்னும் அடுத்தக்கட்டத்துக்கு உயர்த்திச் செல்ல ஆசைப்படுகிறார் உதயநிதி ஸ்டாலின்.

புதிய உறுப்பினர்கள்
அதனால் தான் இளைஞரணியில் புதிது புதிதாக உறுப்பினர்களை சேர்க்க தீவிரம் காட்டி வருகிறார். கிளை, ஒன்றிய, பேரூர், நகரம், மாநகரம், மாவட்டம் என அனைத்து நிலைகளிலும் திமுக இளைஞரணியின் அமைப்பு வலிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக புது புது வியூகங்களை வகுத்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். தற்போது கூட ஆரவாரமின்றி புதிய உறுப்பினர் சேர்ப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

உதயநிதி கட்டளை
திமுக இளைஞரணி நிர்வாகிகளுக்கு உதயநிதி ஸ்டாலின் போட்டுள்ள ஒரே கட்டளை என்னவென்றால், புதிய உறுப்பினர் சேர்ப்பில் உண்மையாக இருக்க வேண்டும் என்பது தான். எண்ணிக்கையை உயர்த்திக் காட்டி தன்னை மகிழ்விப்பதற்காக போலியாக யாரையும் சேர்க்க வேண்டாம் என்பது உதயநிதி ஸ்டாலினிடம் இருந்து வந்த கட் அண்ட் ரைட் உத்தரவு. அண்மையில் நடைபெற்ற இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கூட யாரெல்லாம் போலியாக உறுப்பினர் சேர்த்தீர்கள் என்று நான் கூறவா எனக் கேட்டு பலரையும் அலறவிட்டார்.

நாடாளுமன்றத் தேர்தல்
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் திமுக இளைஞரணியை வலிமைப்படுத்தும் முனைப்பில் இருக்கும் உதயநிதி ஸ்டாலின் அதற்கான பணிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். இடை இடையே சினிமா பணிகள் இருப்பினும் கூட கட்சிப் பணிகளை அவர் கவனிக்கத் தவறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications