"ஷ்.. காரம்.. ஆனா செம டேஸ்ட்.." தமிழக உணவுகளை உச்சுக்கொட்டி சாப்பிடும் வெளிநாட்டு செஸ் வீரர்கள்
சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக சென்னை வந்துள்ள சர்வதேச வீரர்கள் தமிழக உணவுகளை விரும்பி சாப்பிட்டு வருகின்றனர்.
Recommended Video
செஸ் ஒலிம்பியாட் போட்டி செஸ் தலைநகரமான தமிழ்நாட்டில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. மூன்று சுற்றுகளுக்கான போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இந்திய அணி தொடர்ந்து வெற்றிப்பாதையில் முன்னேறி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த செய்திகள் மக்களிடையே ஆர்வத்தை அதிகரித்து வருகிறது.

விளம்பர நடவடிக்கை
அதேபோல் செஸ் ஒலிம்பியாட் போட்டியை மக்களிடையே பிரபலபடுத்தும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு சார்பாக செஸ் போட்டியை பிரபலபடுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் சர்வதேச அளவில் பாராட்டுகளை பெற்று வருகின்றன. அதேபோல் சர்வதேச செஸ் வீரர்களுக்கு தமிழ் கலாச்சாரம், தமிழக உணவு பண்பாடு ஆகியவற்றை உணர்த்தும் வகையில் உணவுகள் தயாரிக்கப்பட்டு விருந்து வைக்கப்பட்டு வருகின்றன.

உணவுகள்
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்றுள்ள வீரர்களுக்கு பரிமாறப்படும் உணவு பட்டியல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்களுக்கு 53 மெனுவில் 700க்கும் மேற்பட்ட உணவு வகைகள் தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. அதிலும் முக்கியமான உணவுகள் மீண்டும் மீண்டும் ஒரே வகையில் வழங்கப்படக்கூடாது என கண்டிப்புடன் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படி செஸ் ஒலிம்பியாட் தொடர்பான ஒவ்வொரு தகவல்களும் மக்களிடையே வியப்பை ஏற்படுத்தி வருகிறது.

வீரர்களின் கருத்து
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்றுள்ள சர்வதேச வீரர்களுக்கு அனைத்து வகையான உணவுகளும் பரிமாறப்பட்டு வந்தாலும், பெரும்பாலும் இந்திய உணவுகளை சுவைப்பதிலேயே கவனம் செலுத்தி வருகின்றனர். இதுகுறித்து சர்வதேச வீரர்கள் கூறுகையில், இந்திய உணவுகள் ஆரோக்கியமாகவும், சுவையுடனும் தயாரிக்கப்படுகிறது. தமிழக உணவுகள் காரசாரமாக மனமாக இருக்கும் மசாலாவும், உணவுகளின் நிறங்களும் சாப்பிடும் போது சுவையாகவும், உற்சாகமளிப்பதாகவும் கூறியுள்ளனர்.

காரம் அதிகம்
தொடர்ந்து சைப்ரஸ் நாட்டின் வீராங்கனை கிளாடிஸ் கூறுகையில், இந்திய உணவுகளில் காரம் அதிகமாக இருக்கிறது. ஆனால் சுவை மிகுதியாக உள்ளது. இந்தியாவில் பல்வேறு வகையான உணவுகள் இருக்கின்றன. பழங்கள், ரொட்டிகள் என எல்லாமே உண்பதற்கு நன்றாக இருக்கிறது. இதுநாள் வரை எந்த உடல் உபாதைகளும் ஏற்படவில்லை. பெயர்கள் தெரியவில்லை என்றாலும், சாப்பிட ஆசையாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications