பஹல்காமில் வெறும் ஐந்து நிமிட கேப்பில் தப்பிய ஜெயஸ்ரீ சுந்தர்.. திக் திக் பயணம் குறித்து பேட்டி
சென்னை: பைசரன் பள்ளத்தாக்கை பார்க்க மிகவும் ஆர்வமாக இருந்தோம். ஏனெனில் அந்த இடத்தை மினி சுவிட்சர்லாந்து என்று சொல்வார்கள்.. எங்களுடைய போனி ரைடரே அந்தஇடம் குறித்து பெருமையாக கூறியிருந்தார். அவரிடம் எப்போது செல்வோம் என்று கேட்ட போது, ஐந்து நிமிடத்தில் போய் சேர்ந்து விடுவோம் என்று கூறினார். ஆனால் அப்போது ஐந்து முறை துப்பாக்கியால் சுடும் சத்தத்தை கேட்டோம் என்று ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் தாக்குதலில் உயிர் தப்பிய ஜெயஸ்ரீ சுந்தர் ஒன் இந்தியா தமிழ் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார்.
ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் தாக்குதலில் உயிர் தப்பிய ஜெயஸ்ரீ சுந்தர் ஒன் இந்தியா தமிழ் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், நான், என் கணவர், குழந்தை ஆகிய 3 பேரும் ஏப்ரல் 19ம் தேதி காஷ்மீருக்கு கிளம்பினோம்.. ஏப்ரல் 19, 20, 21 ஆகிய நாட்களில் ஸ்ரீநகர், ஸ்ரீநகரை சுற்றியுள்ள இடங்களை பார்த்தோம்.

நேற்று காலை 8.30 மணிக்கு ஸ்ரீநகரில் நாங்கள் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து பஹல்காமிற்கு புறப்பட்டு சென்றோம்.. 12.15 மணி அளவில் பஹல்காம் போய் சேர்ந்தோம். அங்கு பயங்கர மக்கள் கூட்டம் இருந்தது. நிறைய சுற்றுலா பயணிகள் இருந்தனர். உண்மையில் நாங்கள் பஹகல்காமில் 21ம் தேதியும், 22ம் தேதியும் தங்கி சுற்றி பார்க்க திட்டமிட்டிருந்தோம்.. அதன்படி அங்கு சென்ற உடன் பைசரன் பள்ளத்தாக்கில், ஆறுகள், அருவிகளை சுற்றி பார்க்க திட்டமிட்டோம்.
உதவிக்கு இரண்டு பேர்
அங்கு செல்ல வேண்டும் என்றால் நடந்து தான் போக வேண்டும்.. அல்லது குதிரையில் செல்ல வேண்டும். ஏனெனில் அங்குள்ள பாதைகள் மிகவும் கரடு முரடாக இருக்கும். குதிரையில் சென்றாலும், குதிரைக்கும் கஷ்டமாக இருக்கும். நமக்கும் கஷ்டமாக இருக்கும். எனினும் பார்க்க வேண்டும் என்பதால் அங்கு சென்றோம். மொத்தம் 8 இடங்களை சுற்றி பார்க்கும் வகையில் பேக்கேஜ் எடுத்துக் கொண்டு சென்றோம்.எங்களுடன் உதவிக்கு இரண்டு பேர் வந்தார்கள்..
ஐந்தாவது இடம்
நாங்கள் நான்கு இடங்களை பார்த்து விட்டோம்.. ஐந்தாவது இடமான பைசரன் பள்ளத்தாக்கை பார்க்க மிகவும் ஆர்வமாக இருந்தோம். ஏனெனில் அந்த இடத்தை மினி சுவிட்சர்லாந்து என்று சொல்வார்கள்.. எங்களுடைய போனி ரைடரே (குதிரை ஓட்டியபடி சுற்றுலா வழிகாட்டியாக வந்தவர்கள்) அந்தஇடம் குறித்து பெருமையாக கூறியிருந்தார். அவரிடம் எப்போது செல்வோம் என்று கேட்ட போது, ஐந்து நிமிடத்தில் போய் சேர்ந்து விடுவோம் என்று கூறினார். இதனால் நாங்கள் மிகவும் சந்தோஷமாக இருந்தோம்.
துப்பாக்கி சத்தம்
ஆனால் எதிர் முனையில் குதிரையில் சுற்றுலா பயணிகளை வைத்துக் கொண்டு வந்தவர்கள்.. வராதீர்கள். தயவு செய்து திரும்பி போங்கள் என்று இந்தியில் கூறினார்கள்.. பைசரன் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். உடனே திரும்பி செல்லுங்கள் என்று கூறினார்கள்..இதை கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தோம்.. குதிரையை ஓட்டிக்கொண்டு வந்தவர்கள் அதற்கு ரியாக்ட் செய்வதற்குள், இரண்டு நிமிட ஹேப்பில் ஐந்து முறை துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டது. பிற்பகல் இரண்டரை மணி முதல் 2.45க்குள் இந்த சம்பவம் நடந்தது.
40 நிமிட பயணம்
இந்த சம்பவத்தை அடுத்து குதிரை ஓட்டும் நபர் உடனே குதிரையை திருப்பி, வழக்கமான பாதையில் இல்லாமல் குறுக்கு பாதையில் ஓட்டினார். எங்களுடன் இன்னொரு தமிழ் பேமிலியும் வந்திருந்தார்கள்.. நாங்கள் 40 நிமிடம் குதிரையில் பயணம் செய்த பிறகு ஒரு சிறிய கிராமம் போல் இருந்தது. அதில் ஒரு வீட்டில் எங்களை போய் இருக்க சொன்னார்கள்.. அங்கு 20 நிமிடம் காத்திருந்தோம்.. அதன்பிறகு கொஞ்ச தூரம் நடக்க வைத்து மெயின் ரோட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு காரை வரச்சொன்னார்கள்..
50 ஆம்புலன்சுகள்
இந்த நேரத்தில் ராணுவத்தின் வாகனங்கள், சிஆர்பிஎப் வாகனங்கள் போய் கொண்டே இருந்தது.. ஒரு ஐம்பது ஆம்புலன்ஸையாவது எங்கள் கண்களில் நாங்கள் பார்த்திருப்போம்.. ஆனால் செய்தியில் ஒருவர் இறந்ததாக கூறினார்கள்.. ஆனால் நிஜம் அது அல்ல என்பது தெரிந்தது.. ஏனெனில் என்னவே முடியாத அளவிற்கு ஆம்புலன்ஸ் போய் கொண்டிருந்தது.. எண்ணவே முடியவில்லை.. ஐந்து, ஆறு ஹெலிகாப்டர்கள் மீட்பு பணிகளுக்காக அங்கு பறந்து கொண்டிருந்தன..
சாலையில் போகவே முடியாது
அந்த இடத்தில் காயம் அடைந்தவர்களை மீட்க வேண்டும் என்றால் சாலையில் போய் மீட்கவே முடியாது. ஹெலிகாப்டரில் தான் போய் மீட்க முடியும்.. அப்படி ஒரு இடம் அது.. இதை பார்த்த உடன் நாங்கள் பஹல்காம் ரூமில் வந்து அடைந்து விட்டோம்.. அங்கு ஒரு ஆறு ஓடிக்கொண்டிருந்தது. அதைக் கூட பார்க்க போக வேண்டாம் என்று அறிவுறுத்தினார்கள்.. ரூமை விட்டு வெளியேற வேண்டாம் என்றார்கள்..
ஸ்ரீநகரில் இருக்கிறோம்
நாங்கள் எங்கள் டூர் ஏஜென்டுக்கு அழைத்து, நிலையை சொல்லி இங்கு இருக்கவே மாட்டோம் என்று கூறினோம். அவர்கள் எங்களை அழைத்து வந்து இன்று (நேற்று) பிற்பகல் 12 மணி அளவில் ஸ்ரீநகரில் கொண்டு வந்துவிட்டார்கள்.. ஸ்ரீநகரில் உள்ள ஒரு ஹோட்டலில் பாதுகாப்பாக இருக்கிறோம்" என்று கூறினார். உயிர் தப்பிய ஜெயஸ்ரீ சுந்தர் கூறிய மேலும் பல்வேறு விஷயங்களை வீடியோவில் பாருங்கள்.












Click it and Unblock the Notifications