அதிமுகவில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு.. சென்னையில் நேர்காணலை தொடங்கிவைத்த பழனிசாமி
சென்னை: தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் பணிகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேர்காணலை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் பணிகள் ஜெட் வேகத்தில் நடைபெற்று வருகின்றன. திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி, பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி, விஜயின் தமிழக வெற்றிக் கழகம், சீமானின் நாம் தமிழர் கட்சி என அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

முதல்வர் ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுக்கு பிரசாரத்தை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பிரசாரப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், அதிமுக சார்பில் தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரியில் நடைபெறும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை ராயபுரத்தில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வழங்கலாம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.
அதன்படி, அதிமுக சார்பில் போட்டியிட ஏராளமானோர் விருப்ப மனுக்களை வழங்கியிருந்தனர். தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் உள்ளிட்ட சட்டசபைத் தேர்தல்களில் போட்டியிடுவதற்காக 10,175 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. எடப்பாடி பழனிசாமி தங்களுடைய தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து 2,187 விருப்ப மனுக்கள் அளித்துள்ளன.
அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளவர்களுக்கான நேர்காணல் சென்னையில் கட்சியின் தலைமை அலுவலத்தில் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். சேலம் மாநகர், புறநகருக்கு 10.15 மணியளவில் நேர்காணல் நடைபெற்றது. ஈரோடு மாநகர் மற்றும் ஈரோடு புறநகர் கிழக்கு, ஈரோடு புறநகர் மேற்கு, கரூருக்கு நேர்காணல் நடைபெற்றது.
தொடர்ந்து, திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு, நாமக்கல், திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர் கிழக்கு மற்றும் திருப்பூர் புறநகர் மேற்கு, கோவை மாநகர் மற்றும் கோவை புறநகர் வடக்கு, கோவை புறநகர் தெற்கு, நீலகிரி மாவட்டத்துக்கு நேர்காணல் நடைபெற்றது. இந்த நேர்காணலில் பங்கேற்பதற்கு விருப்ப மனு அளித்தவர்கள், விருப்ப மனு பெற்றதற்கான அசல் ரசீதுடன் வந்து நேர்காணலில் கலந்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications