ஒருத்தரும் வரலையே! அதிமுக கூட்டணி பேச்சு "ஓவர்".. தனித்து விடப்படும் பாஜக? டெல்லிக்கு எகிறும் பிரஷர்
சென்னை: லோக்சபா தேர்தலை முன்னிட்டு அதிமுக ஒரு பக்கம் கூட்டணியை இறுதி செய்யும் நிலையில் உள்ளது. ஆனால் பாஜகவின் கூட்டணியில் இணைய பெரிய கட்சிகள் எதுவும் தயாராக இல்லை என்று கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி ஆலோசனைகள் நாடு முழுக்க தீவிரமாக நடந்து வருகிறது. தேசிய அளவில் இந்திய கூட்டணி முறியும் நிலையில் உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் மம்தா பானர்ஜி இந்திய கூட்டணியில் லோக்சபா தேர்தலை மேற்கு வங்கத்தில் சந்திக்க மாட்டேன் என்று அறிவித்துவிட்டார்.

அதேபோல் ஆம் ஆத்மியும் பஞ்சாப்பில் இந்தியா கூட்டணியில் போட்டியிடாமல் தனித்து போட்டியிடும் என்று அறிவித்துவிட்டது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தமிழ்நாட்டில் இந்த முறை 3வது அணி புதிதாக ஒன்று உருவாக்கி நாம் தமிழரோடு சேர்த்து 4 முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
என்னென்ன கூட்டணிகள்: . லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை தீவிரமாக நடத்தி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் திமுக - காங்கிரஸ் இடையிலான ஆலோசனை கூட்டம் நடந்தது. அதன்பின் இந்த மாத தொடக்கத்தில் கூட்டணி கட்சியில் உள்ள மற்ற கட்சிகளுடன் திமுக ஆலோசனை நடத்தியது. அதன்படி இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக கட்சிகளுடன் திமுக கூட்டணி குழுவினர் ஆலோசனை நடத்தினர்.
அதன்படி இந்த முறையும் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக , விடுதலை சிறுத்தைகள், இன்னும் சில உதிரி கட்சிகள் உடன் திமுக கூட்டணி வைக்க உள்ளது.
கண்டிப்பு: இந்த நிலையில்தான் 2024 லோக்சபா தேர்தலுக்கான கூட்டணியை இறுதி செய்ய பிப்ரவரி 18ம் தேதி வரை மட்டுமே கால அவகாசம் என்று பாஜக தலைவர் அண்ணாமலைக்கு டெல்லி பாஜக தலைமை உத்தரவிட்டு உள்ளதாம். நீங்கள் நடைப்பயணம் செய்தது போதும்.. உடனே கூட்டணியை முடிவிற்கு கொண்டு வாருங்கள்.
கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடிங்க. 3வது அணி உருவாவதை உறுதி செய்யுங்கள் என்று அண்ணாமலைக்கு டெல்லி பாஜக உத்தரவிட்டு உள்ளதாம். ஆனால் அதிமுக கூட்டணிக்கு பாமக, தேமுதிக செல்வதால்.. பாஜக கூட்டணிக்கு ஆள் வராத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளதாம்.
பாஜக கூட்டணி இல்லை: இரண்டு கட்சிகளும் பாஜக கூட்டணிக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அதிமுக கூட்டணிக்கு வர முடிவு செய்துள்ளன.
அதன்படி பாமக 6 சீட். தேமுதிக 3 சீட் என்று இறங்கி வர முடிவு செய்துள்ளன. இரண்டு ராஜ்யசபா இடங்கள் இரண்டு கட்சிக்கும் தலா 1 என்று பிரித்து கொடுக்கப்பட உள்ளன. இது போக பணம் கேட்டதில் நான்கில் ஒரு பகுதி பிரித்து கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதாம். பாஜகவுடன் கூட்டணி வேண்டாம்.. நாம் பெரிய கூட்டணி அமைப்போம் என்று அதிமுக வைத்த வாதத்தை இவர்கள் ஏற்றுக்கொண்டார்களாம்.
பாஜக தனித்துவிடப்பட்டது; இதனால் பாஜக தனித்துவிடப்படும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளதாம். முக்கியமாக பாமக, தேமுதிக இல்லை என்றால் பாஜகவின் கூட்டணியில் பெரிய கட்சி எதுவும் இருக்காது. முக்கியமாக புதிய தமிழகம் கூட அதிமுக கூட்டணிக்கு போகும் சூழலில் உள்ளது.
இது போக ஐஜேகே மட்டுமே தற்போது பாஜக கூட்டணிக்கு செல்லும் சூழல் உள்ளது. பாஜகவின் கூட்டணி இன்னும் முழுமையாக உருவாகாததால் விரைவில் கூட்டணி உருவாக்கும் விவகாரத்தில் டெல்லி நேரடியாக தலையிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications