பிரான்ஸ் சுற்றுலாவை திடீரென ரத்து செய்த டி.ஆர்.பி.ராஜா! காத்திருக்கும் அமைச்சர் பதவி? பரபர பின்னணி
சென்னை: கோடைக்கால விடுமுறையை குடும்பத்துடன் கழிக்க பிரான்ஸ் செல்வதற்காக டிக்கெட் முன்பதிவு செய்து வைத்திருந்த டி.ஆர்.பி.ராஜா திடீரென தனது பயணத்தை ரத்து செய்துள்ளாராம்.
டி.ஆர்.பி.ராஜாவை பிரான்ஸ் செல்ல வேண்டாம் என முதல்வர் அறிவுறுத்தியதன் பின்னணியில் பெரிய அறிவிப்பு ஒன்று இம்மாத இறுதியில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது தமிழக அமைச்சரவையில் இடம்பெற மூன்றாவது முறை சட்டமன்ற உறுப்பினராக உள்ள டி.ஆர்.பி.ராஜாவுக்கு காலம் கனிந்துவிட்டதாக கூறுகிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

திமுக அமைச்சரவை
திமுக அமைச்சரவை பொறுப்பேற்று ஓராண்டு காலம் நிறைவடைந்துள்ளது. இந்த ஓராண்டு காலத்தில் சரியாக செயல்படாத இரண்டு அமைச்சர்களுக்கு கல்தா கொடுத்துவிட்டு புதுமுகங்கள் இருவர் ப்ளஸ் உதயநிதி என மூவருக்கு கேபினட்டில் இடம் கொடுக்கும்
திட்டத்தில்
உள்ளார் முதல்வர் ஸ்டாலின். அந்த புதுமுகங்கள் இருவர் யார் என்பது தான் இப்போது தமிழக அரசியல் களத்திலும் திமுகவிலும் ஹாட் டாபிக்காக உள்ளது.
அந்த வகையில் மன்னார்குடி எம்.எல்.ஏ.வும் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மகனுமான டி.ஆர்.பி.ராஜாவுக்கு அமைச்சராகும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக கோட்டை வட்டாரத்தில் பேச்சு ஒடிக்கொண்டுள்ளது.

ஒரு நிகழ்வு
டி.ஆர்.பி.ராஜாவுக்கு அமைச்சர் பதவி கிடைப்பதற்கான அறிகுறி தென்படத் தொடங்கிவிட்டதாக கூறும் மன்னார்குடி தொகுதியை சேர்ந்த வடுவூர் நிர்வாகி இருவர் நம்மிடம் ஒரு நிகழ்வை பகிர்ந்து கொண்டார். அதாவது, மே 10-ம் தேதி சட்டசபை முடிவதை அடுத்து குடும்பத்துடன் 20 நாட்கள் பிரான்ஸ் டூர் சென்று வருகிறேன் என முதலமைச்சரையும், சபாநாயகரையும் சந்தித்து டி.ஆர்.பி.ராஜா புரோட்டகால் படி தகவல் கூறி பெர்மிஷன் கேட்டிருக்கிறார். அதற்கு நீ போக வேண்டாம் இரு, உனக்கு இங்கு வேலை இருக்கு என முதல்வர் ஸ்டாலின் சொன்னாராம். டி.ஆர்.பி.ராஜா சிரித்துக்கொண்டே முதல்வர் தன்னை கலாய்க்கிறார் என நினைத்துக் கொண்டு அங்கேயே நின்றிருக்கிறார். நிஜமாகத்தான் சொல்கிறேன், நீ பிரான்ஸ் டூர் போக வேண்டாம், இங்க இரு வேலை இருக்கு என மீண்டும் அழுத்தமாக கூறியிருக்கிறார் முதல்வர். இதையடுத்து தனது பிரான்ஸ் பயணத்தை ராஜா ரத்து செய்தாராம். ஆகையால் இந்த நிகழ்வை சுட்டிக்காட்டி அவர் அமைச்சரவையில் இடம் பிடிப்பார் என நம்பிக்கு தெரிவிக்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

இன்னொருவர் யார்
இதனிடையே இன்னொரு புது முகம் யாராக இருக்கக்கூடும் என்ற விவாதமும் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. பரந்தாமன், தாயகம் கவி ஆகிய இருவரில் ஒருவருக்கு அமைச்சராகும் யோகம் கிட்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது. காரணம் இருவருமே உதயநிதி ஸ்டாலினின் எண்ண ஓட்டங்களுக்கு ஒத்துப் போகக் கூடியவர்கள். அதுமட்டுமல்லாமல் சென்னை போன்ற பெரு மாநகரங்களுக்கு இரண்டு அமைச்சர்கள் போதாது என்பதால் கூடுதலால மூன்றாவதாக ஒரு அமைச்சரையும் கொடுக்கலாம் என ஆலோசிக்கப்படுகிறதாம். ஆனால் இது தொடர்பாக இன்னும் இறுதி முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

உதயநிதிக்கு உறுதி
டி.ஆர்.பி.ராஜா உட்பட இரண்டு புதுமுகங்களுக்கு அப்பாற்பட்டு உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி உறுதியாகிவிட்டது. ஆரம்பத்தில் உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுக்க ஸ்டாலின் விரும்பவில்லை என்பதும் ஆனால் குடும்ப உறவுகள், நண்பர்கள், முக்கிய தொழிலதிபர்கள் என முதல்வர் யாரை சந்தித்தாலும் உதயநிதியின் திறமையை வீணடிக்க வேண்டாம் என அவரிடம் அவர்கள் வலியுறுத்துவது அதிகரித்ததாலும் உதயநிதிக்கு நூறு சதவீதம் கேபினட்டில் இடம் உறுதியாகிவிட்டதாக தெரிவிக்கிறார்கள் உள் விவரம் அறிந்தவர்கள்.












Click it and Unblock the Notifications