ஓபிஎஸ் எம்எல்ஏ பதவிக்கு சிக்கலா? சட்டசபையில் எடப்பாடி போடும் பிளான்! கிடைக்கிற கேப்பில் எல்லாம் செக்
அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம் வகித்து வந்த பதவிகள் அனைத்தும் நீக்கப்படுகின்றது.
சென்னை: ஓ பன்னீர்செல்வத்திற்கு எதிராக தமிழ்நாடு சட்டசபையிலும் செக் வைக்க எடப்பாடி பழனிசாமி தரப்பு முடிவு செய்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 20ம் தேதி தொடங்க உள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அதிமுக இருப்பிட விவகாரம் வெடிக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த இரண்டு சட்டசபை கூட்டங்களிலும் இருப்பிட விவகாரம் உச்சத்தில் இருந்தது.
அதன்படி எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கையில் ஓ பன்னீர்செல்வத்தை அமர வைக்க கூடாது என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு சபாநாயகர் அப்பாவுவிற்கு கடிதம் எழுதி இருந்தது.

என்ன கோரிக்கை
ஆர்பி உதயகுமார்தான் அதிமுகவின் எதிர்க்கட்சி துணை தலைவர். அதனால் அவரைத்தான் அந்த இருக்கையில் அமர வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. ஆனால், நான்தான் எதிர்க்கட்சி துணை தலைவர். அதனால் நான்தான் அந்த இடத்தில் தொடர வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடக்கையில் இதில் முடிவு எடுக்க கூடாது என்று ஓ பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்தார். இதனால் அப்போது அப்பாவு எந்த முடிவும் எடுக்கவில்லை. அப்போது உச்ச நீதிமன்றத்தில் பொதுக்குழு வழக்கு நிலுவையில் இருந்தது. இதனால் அதில் அப்பாவு முடிவு எடுக்காமல் இருந்தார்.

மாற்றப்படவில்லை
தமிழ்நாடு சட்டசபையில் கடந்த முறை கூட்டம் கூடிய போது இருக்கைகள் மாற்றம் செய்யப்படவில்லை. எதிர்க்கட்சி தலைவர் இருக்கை எடப்பாடி பழனிசாமிக்கும், எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை ஓ பன்னீர்செல்வத்திற்கும் அளிக்கப்பட்டு இருந்தது. ஆர்பி உதயகுமாருக்கு அந்த இருக்கை அளிக்கப்படவில்லை. இதனால் எடப்பாடி இருக்கையில் அமராமல், ஒரு நிமிடம் இருந்துவிட்டு அதன்பின் அவைக்கு நடுவே வந்து தர்ணா செய்யும் நிலை ஏற்பட்டது. இதை எதிர்த்து எடப்பாடி தரப்பு கருப்பு நிறத்தில் உடை அணிந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

விளக்கம்
அப்போது விளக்கம் அளித்த அப்பாவு, ஓபிஎஸ், இபிஎஸ் அணியினருக்கான இருக்கைகள் தொடர்பாக சட்டப்பேரவை கூடும்போது தெரியவரும். இப்போதே அறிவிக்க முடியாது. இரண்டு பேருமே மூத்த தலைவர்கள். இரண்டு பேருமே ஒரே சின்னத்தில் போட்டியிட்டு வென்றவர்கள். ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் முதலமைச்சர்களாக இருந்தவர்கள். நிச்சயம் கண்ணியமாக நடந்துகொள்வார்கள். அதேபோல் இருக்கைகள் ஒதுக்குவது தொடர்பாக சட்டமன்ற மரபுப்படியே நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் ஆணையத்தில் இருக்கும் ஆவணங்களின் அடிப்படையில்தான் முடிவு எடுக்கப்படும் என்று கூறி இருந்தார்.

பொதுக்குழு வழக்கு
இந்த நிலையில்தான் அதிமுக பொதுக்குழு வழக்கு எடப்பாடிக்கு சாதகமாக திரும்பி உள்ளது. ஆனால் இன்னும் இந்த தீர்ப்பை ஏற்று பொதுக்குழு முடிவை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை. எடப்பாடியை இன்னும் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. இந்திய தேர்தல் ஆணையத்தில் அதிமுக வழக்கறிஞர்கள் இது தொடர்பாக மனு அளித்து உள்ளனர். அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நகலுடன் மனு அளித்து உள்ளனர். பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்க வேண்டும் என கோரிக்கை இந்திய தேர்தல் ஆணையத்தில் அதிமுக வழக்கறிஞர்கள் சார்பில் வைக்கப்பட்டு உள்ளது. அப்படி ஏற்கும் பட்சத்தில் அதை சபாநாயகர் அப்பாவுவிடம் கொடுக்க முடிவு செய்துள்ளனர்.

அப்பாவு முடிவு
அவரிடம் கொடுத்து.. ஓபிஎஸ் எதிர்க்கட்சி துணை தலைவர் இல்லை.. உதயகுமார்தான் எதிர்க்கட்சி துணை தலைவர் என்று அறிவிக்க கோரிக்கை விடுக்கப்படும். அதோடு எடப்பாடி பழனிசாமி தரப்பு இன்னொரு கோரிக்கை ஒன்றையும் வைக்க உள்ளதாம். அதாவது ஓ பன்னீர்செல்வம் கட்சி விதிகளை மீறிவிட்டார். அதனால் அவரை எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் என்கிறார்கள். ஓ பன்னீர்செல்வம் உடன் இருக்கும் மற்ற 3 எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுத்துவிட்டு, ஓ பன்னீர்செல்வத்திற்கு எதிராக மட்டும் இந்த கோரிக்கையை எடப்பாடி தரப்பு வைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அவர் எம்எல்ஏ பதவியை இழந்தால் தானாக எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியும் போய்விடும் என்பதால் இந்த திட்டமாம்.

விதி என்ன சொல்கிறது?
கட்சியில் இருந்து ஓ பன்னீர்செல்வம் நீக்கப்பட்டுவிட்டதால், ஓபிஎஸ் எம்எல்ஏ பதவி நீக்கம் செய்யப்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால் அப்படி எம்எல்ஏ பதவியில் இருந்து ஓபிஎஸ்ஸை நீக்க முடியாது என்ற சட்டசபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கட்சிக்குள் இருக்கும்போதே அடுத்த கட்சியில் இணைந்தாலோ/ கட்சியை விட்டு விலகினாலோ எம்எல்ஏ பதவி கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் பறிக்கப்படும். ஆனால் இங்கே ஓ பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு உள்ளார். அவர் வேறு கட்சிக்கு தாவவில்லை. எனவே MLA பதவி பறி போகாது. அவர் இரட்டை இலை இல்லாமல் சுயேச்சை போல் செயல்பட முடியும் என்று குறிப்பிட்டு உள்ளனர்.


Click it and Unblock the Notifications
