பெரிய திருப்பம்? சமாதானத்திற்கு "சைலன்ட்" தூது விடும் ஓபிஎஸ்.. பேச்சை கவனிச்சீங்களா? மனமாற்றம்?
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் தனக்கு சாதகமாக தீர்ப்பு வந்த நிலையில் ஓ பன்னீர்செல்வம் சமாதானமாக செல்லும் வகையில் பேட்டி அளித்துள்ளார். அவர் பேட்டியில் குறிப்பிட்ட சில விஷயங்கள் எடப்பாடி தரப்பிற்கு அவர் விட்ட சமாதான தூதாக பார்க்கப்படுகிறது.
Recommended Video
ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதிமுகவில் ஜூன் 23ஆம் தேதி இருந்த நிலையே நீடிக்கும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
மேலும் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் இணைந்து பொதுக்குழுவை கூட்ட வேண்டும், பொது செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

சர்வாதிகாரம்
இந்த தீர்ப்பை அடுத்து பேட்டி அளித்த ஓ பன்னீர்செல்வம், அதிமுகவில் சர்வாதிகாரம் செல்லாது, யாருக்கும் கீழ் ஒரு கட்சி செயல்பட முடியாது. ஒரு தனி நபருக்கு கீழ், தனி குடும்பத்திற்கு கீழ் கட்சி செயல்பட முடியாது. இது தொண்டர்களின் இயக்கம் என்று ஓ பன்னீர்செல்வம் குறிப்பிட்டார். அவரிடம் கேள்வி எழுப்பிய செய்தியாளர், அதிமுகவில் எல்லோரும் ஒன்று சேர்ந்த செயல்பட வேண்டும் என்று நினைக்கிறீர்களா? பிளவுபட்ட அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது.

ஒன்று சேர வேண்டும்
நான் ஏற்கனவே சொன்னபடியே அனைவரும் ஒன்று சேர வேண்டும். கழகத்தில் நீக்கப்பட்டவர்கள் எல்லோரும் கட்சியில் சேர்க்கப்பட வேண்டும், என்றார். இதையடுத்து சசிகலாவையும் சொல்கிறீர்களா என்ற கேள்விக்கு.. அதிமுகவின் கொள்கையை ஏற்று யாரெல்லாம் கட்சிக்குள் வருகிறார்களோ அவர்களை சேர்த்துக்கொள்வோம். எல்லோரும் ஒன்று சேர்ந்து செயல்படுவதே கட்சிக்கு சரியானது, என்று ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தீர்ப்பு
இந்த தீர்ப்பிற்கு பின் ஓ பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில், தர்மத்தை நம்பினேன்; மாட்சிமைமிக்க நீதிமன்றங்களை நம்பினேன்; கழகத்தை உயிராக நேசிக்கும் கழகக் கண்மணிகளை, தொண்டர்களை நம்பினேன்; உண்மையும், தர்மமும் என் பக்கம்தான் இருக்கிறது என்பதை உளமார நம்பிய தமிழ்நாட்டு மக்களை நம்பினேன்; இவையாவிற்கும் மேலாக, தமிழ்நாட்டு மக்களுக்காக இந்த அப்பழுக்கில்லாத இயக்கத்தை தோற்றுவித்து, வளர்த்தெடுத்து, பாதுகாத்து, தங்களது ஆயுளையே அர்ப்பணித்த இயக்கத்தின் காவல் தெய்வங்களான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது ஆசிகளை நம்பினேன். இந்த நம்பிக்கை இன்றைக்கு உண்மையாகி இருக்கிறது.

அரசியல் கட்சி
அடுத்தவர் வீட்டை மட்டுமல்ல, அரசியல் கட்சியையும் யாரும் அடாவடியாக, சட்டத்திற்குப் புறம்பாக அபகரிப்பதை நீதியும், தர்மமும், தொண்டர்களும், பொதுமக்களும், குறிப்பாக தெய்வமும் ஏற்றுக்கொள்ளாது என்பதை இன்றைய தீர்ப்பு மெய்ப்பித்து இருக்கிறது.கழக நிறுவனர் புரட்சித் தலைவர் அவர்கள் வகுத்தெடுத்த விதிகளை துச்சமாக நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள் என்பது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. இனி, கழகத்தின் ஒற்றுமை நிலைநிறுத்தப்பட்டு, அசைக்க முடியாத எஃகு கோட்டையாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் திகழும், வெற்றி நடைபோடும் என்பது திண்ணம்.

ஓர்வழி நிற்க வேண்டும்
"தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்று நேர் வழி சென்றால்
நாளை நமதே"என்னும் மக்கள் திலகம், பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் திருமந்திரத்தை இதயப்பூர்வமாக ஏற்று, கழகத்தின் நிரந்தரப் பொதுச் செயலாளர் என்றைக்கும் நம் இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள்தான் என்னும் உணர்வு கொண்ட ஒன்றரை கோடி தொண்டர்களையும் அரவணைத்துச் செல்வேன். கழகத்தின் கசந்த காலங்கள், இனி வசந்த காலங்களாக மாறும், என்று குறிப்பிட்டார்.

தாங்க வேண்டும்
அதிமுகவில் உங்களுக்கு எடப்பாடி தரப்பு மூலம் ஏற்பட்ட அவமானங்களை மறந்து இணைவீர்களா என்ற கேள்விக்கு.. அதிமுகவின் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் அனைத்தையும் தாங்கிக்கொள்ள வேண்டும். கட்சிதான் முக்கியம். இதற்காக எதையும் தாங்கிக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார். ஓ பன்னீர்செல்வத்தின் இந்த பேட்டி மூலம் அவர் மீண்டும் எடப்பாடி தரப்புடன் "பழசை" மறந்து சேர்ந்து செயல்பட முடிவு செய்துள்ளாரோ.. அதற்கான சமாதான தூதாக இப்படி பேசுகிறாரோ என்ற விவாதம் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications