டோட்டலா காலி.. பயங்கர ‘ட்விஸ்ட்’ கொடுத்த ஈபிஎஸ் டீம்! சிக்கலாக மாறிய ‘ஒற்றை ஓட்டு’ ஆஹா! இதென்ன ரூல்?
சென்னை : அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்துவிட்டார், தற்போது நான் தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறேன், இப்போது தேர்தல் நடத்தினாலும், அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக நான் தான் வருவேன் என ஓ.பன்னீர்செல்வம் 'விஸ்வரூபம்' காட்டி வரும் நிலையில், அதற்கு பதிலடியாக பயங்கர 'ட்விஸ்ட்' கொடுக்கிறது எடப்பாடி பழனிசாமி தரப்பு. 'ஒற்றை ஓட்டு' முறையை வைத்து ஓபிஎஸ்ஸுக்கு வேட்டு வைக்கிறது ஈபிஎஸ் அணி.
ஈபிஎஸ் தனது இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்வதாகவும், இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பிவிட்டார், ஈபிஎஸ் நடத்திய பொதுக்குழு செல்லாது என்றால் ஈபிஎஸ் எந்தப் பதவியிலும் இருக்க மாட்டார் என்பது ஓபிஎஸ் தரப்பின் வாதம்.
எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார் என்றால், ஓ.பன்னீர்செல்வம் பதவியும் காலியாகிவிடும், 'ஒற்றை வாக்கு' அடிப்படையில் இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டதால், இரண்டு பதவிகளும் காலி தான் என ட்விஸ்ட் கொடுக்கிறது எடப்பாடி தரப்பு.

விரைவில் தீர்ப்பு
ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரில் அதிமுகவை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்பதைத் தீர்மானிக்கும் அதிமுக பொதுக்குழு வழக்கு குறித்து உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. விரைவில் விசாரணை முடிந்து, தீர்ப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அதிமுக தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒற்றைத் தலைமை விவகாரம் வெடித்த நிலையில் ஜூலை மாதம் 11ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி அணியினர், அதிமுக பொதுக்குழுவை கூட்டினர். பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்தனர்.

செல்லும்? செல்லாது?
இந்தக் கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் அதிரடியாக அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இந்த பொறுப்புகளுக்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் உடனடியாக நியமிக்கப்பட்டனர். இதையடுத்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் தன்னிடம் அனுமதி பெறாமல் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எடப்பாடி அணியினர் கூட்டி உள்ளனர். பொதுக்குழுவும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லாது என்று ஓ.பன்னீர்செல்வம் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஐகோர்ட் தனி நீதிபதி பொதுக்குழு செல்லாது என தீர்ப்பு கொடுக்க, இரு நீதிபதிகள் அமர்வு செல்லும் என்று தீர்ப்பளித்தது. அதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் சென்றார் ஓபிஎஸ்.

குறுக்கு வழியில்
இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போது, ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர், குறுக்கு வழியில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற அதிகாரத்திற்கு வந்த எடப்பாடி பழனிசாமியின் பதவியை ரத்து செய்ய வேண்டும் என்ற வாதத்தை முன்வைத்தார். இதையடுத்து வழக்கு நேற்று முன்தினம் தொடர்ந்து 3வது நாளாக நடந்தது. அப்போது, இப்போது தேர்தல் நடத்தினாலும், அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக நான் தான் வருவேன் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். இந்த வாரத்துடனே விசாரணையை முடிக்க விரும்புவதாக தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஈபிஎஸ் தரப்பு வாதம் இன்னும் முடிவடையாததால், வழக்கு விசாரணையை 10ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

என்ன நடக்கும்?
இந்த பரபரப்பான சூழலில் இன்னும் ஒருசில நாட்களில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அதிமுகவில் இடைக்கால பொதுச்செயலாளர் பதவி நீடிக்குமா அல்லது ரத்து செய்யப்படுமா, ஜூலை 11ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே அதிமுகவில் தொடர அனுமதிக்கப்படுமா என்பது குறித்த தங்களது தீர்ப்பை அளிக்க உள்ளனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பைப் பொறுத்தே அதிமுகவிற்கு எடப்பாடி பழனிசாமி தலைமை வகிப்பாரா, ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகிப்பாரா அல்லது தேர்தல் ஆணையம் தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்று தீர்ப்பு வருமா என்று குழப்பத்தோடு காத்திருக்கிறார்கள் இரு அணியினரும்.

எடப்பாடி பதவி மொத்தமா காலி
எடப்பாடி பழனிசாமி தனது இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்வதாகவும், பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பிவிட்டார், ஈபிஎஸ் நடத்திய பொதுக்குழு செல்லாது என்பதால், ஈபிஎஸ் இடைக்கால பொதுச் செயலாளர் பதவியிலும் இருக்கமாட்டார், அவர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதால் அந்தப் பதவியிலும் இருக்க மாட்டார், எடப்பாடி பழனிசாமி அவராகவே கட்சியின் பதவிகளில் இருந்து விலகிவிட்டார் என்கின்றனர் ஓபிஎஸ் தரப்பினர்.

ஓபிஎஸ் பதவியும் இருக்காது
இதற்கு பதிலடியாக ஒரு வாதத்தை முன்வைக்கிறது எடப்பாடி பழனிசாமி தரப்பு. ஈபிஎஸ் ஆதரவாளரான சுரேஷ் கண்னன், ஒரு டிவி விவாதத்தில் பேசுகையில், ஒற்றை வாக்கு அடிப்படையில் தான் ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளராகவும், ஈபிஎஸ் இணை ஒருங்கிணைப்பாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். யாரேனும் ஒருவர் பதவியை ராஜினாமா செய்தாலும் இருவரின் பதவியுமே காலியாகிவிடும். அதுதான் சட்ட விதி. இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் இல்லை என்று அவர்கள் கூறினால், ஓபிஎஸ்ஸும் ஒருங்கிணைப்பாளர் இல்லை எனத் தெரிவித்திருக்கிறார்.

ஒற்றை ஓட்டு
அதாவது, 2021 டிசம்பர் 7ஆம் தேதி அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ், ஈபிஎஸ் முறையே தேர்ந்தெடுக்கப்பட்டனர். கழக ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இருவரும் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் ஒற்றை வாக்கின் (single vote) அடிப்படையில் இணைந்தே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற சிறப்பு தீர்மானத்தை அதிமுக செயற்குழு கொண்டு வந்ததன் அடிப்படையில் தேர்தல் நடைபெற்றது. ஒற்றை வாக்கில் இணைந்தே தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதால், இரு பதவிகளும் ஒன்றாகவே காலியாகும் என்ற வாதத்தை முன்வைக்கிறது எடப்பாடி தரப்பு.












Click it and Unblock the Notifications