கழட்டி விட்ருவோம்! பாஜக நமக்கு வேணாம்..சீனியர்களை களமிறக்கும் எடப்பாடி பழனிசாமி! அதான் இந்த பேச்சா?
சென்னை : அதிமுகவில் கடந்த சில நாட்களாக நடந்து வரும் நிகழ்வுகளில் ஓபிஎஸ் தரப்புக்கு சாதகமாக பாஜக தலைமை இருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், சில எடப்பாடி பழனிசாமி தரப்பு சீனியர்கள் பாஜகவை கூட்டணியை முறிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமியே பேசவைத்திருக்கலாம் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலும் சரி கட்சி பொறுப்பில் இருந்தபோதும் சரி அதிமுக எப்படி இருந்ததோ அதற்கு அப்படியே தலைகீழாக இருப்பதாக தொண்டர்கள் புலம்பி வருகின்றனர்.
அவரது மறைவுக்குப் பின் ஒவ்வொரு நாளும் பல்வேறு சிக்கல்களை அதிமுக சந்தித்து வருகிறது. சசிகலா விவகாரம், டிடிவி தினகரன், எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வம் மோதல் என ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு பிரச்சனைகளில் சிக்கி பேசு பொருள் ஆவது தான் அதிமுகவின் வாடிக்கையாகி போனது.

அதிமுகவில் மோதல்
அந்த வகையில் முதலமைச்சர் வேட்பாளர் தேர்வில் மோதல் , எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு போட்டி என மீண்டும் சிக்கல்களை சந்தித்து வந்த அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை விவகாரம் தான் கடந்த இரண்டு மாதங்களாக பேசுபொருளாக மாறியிருக்கிறது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பு போர்க்கொடி தூக்க முடியவே முடியாது என பேசினார் ஓபிஎஸ்.

எடப்பாடி பழனிசாமி
ஆனாலும் கட்சியில் தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவோடு எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனால் ஓபிஎஸ் உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ள நிலையில், பாஜக மேலிடத்தின் ஆதரவு யாருக்கு உள்ளது என்பது கேள்விக்குரியாகவே உள்ளது.

பாஜக ஆதரவு
ஆனால் நடக்கும் நிகழ்வுகளை பார்த்தால் பாஜக ஆதரவு ஓபிஎஸ்க்கு தான் உள்ளது எனக் கூறுகின்றனர். ஓபிஎஸ் ஆதரவு நிர்வாகிகள். 2024 நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு பாஜக தலைமை தீவிரமாக காய்களை நகர்த்தி வருகிறது. தமிழகத்தில் கடந்த தேர்தலைப் போல படுதோல்வியை சந்திக்க கூடாது எனவும் குறைந்தது 10 முதல் 15 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என பாஜக தலைமை விரும்புகிறது. ஆனால் ஓபிஎஸ் இபிஎஸ் மோதலால் அதிமுக பிளவுண்டு இருக்கும் நிலையில் இருவரையும் ஒருங்கிணைக்கவே விரும்புகிறது. குறிப்பாக ஓ பன்னீர்செல்வத்துக்கு ஆதரவளித்து வருகிறது

களமிறங்கிய சீனியர்கள்
மீண்டும் ஒன்றிணையவே முடியாது என எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக மறுத்துவிட்ட நிலையில் தற்போது பாஜக தலைமையில் நெருக்கடியை சமாளிக்க சீனியர்களை களமிறக்கி வருகிறார். பாஜகவை கூட்டணியில் இருந்து கழற்றிவிட்டால் மக்கள் மத்தியிலும் சிறுபான்மை இன வாக்காளர்கள் மத்தியிலும் ஓரளவு ஆதரவை பெற முடியும் என நம்பும் எடப்பாடி இதற்காக சில மூத்த முன்னாள் அமைச்சர்களை ஊடகங்களிடம் பேச விட்டுள்ளார்.

பாஜகவை கழற்றி விட முடிவு
அந்த வகையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கடம்பூர் ராஜு தேசிய கட்சியாக இருந்தாலும் திமுகவாக இருந்தாலும் தனியாக களமிறங்க முடியுமா என கேட்டிருந்தார். இந்த நிலையில் அதிமுகவில் தற்போது எடப்பாடி பழனிச்சாமியின் வலதுகரம் போல செயல்பட்டு வரும் கேபி முனுசாமி மத்திய அமைச்சர்கள் நேரடியாக ஆய்வு நடத்துவது நல்லதல்ல காங்கிரஸ் கூட இப்படி செய்வதில்லை என பேசி இருக்கிறார் .இப்படி மத்திய பாஜக அரசை நேரடியாக விமர்சித்துப் பேசும் எடப்பாடி ஆதரவாளர்களால் பாஜக தலைமையும் சற்று அதிர்ச்சி அடைந்துள்ளது. இது பாஜகவை கூட்டணியில் இருந்து கழற்றிவிடும் முயற்சியே என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications