திமுகவிற்கு 30-34 இடங்களா? அப்போ பாஜக எத்தனை இடம்? மிஸ்ஸானது எங்கே? ஸ்டாலின் களமிறக்கும் உளவுத்துறை
சென்னை: லோக்சபா தேர்தல் தொடர்பாக பல்வேறு கருத்து கணிப்புகள் வெளியாகி வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் உளவுத்துறைக்கு முக்கியமான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இப்போதே தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகள் வெளியாக தொடங்கி உள்ளன. பல்வேறு அமைப்புகள் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில் தான் டைம்ஸ் நவ் இடிஜி சார்பில் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு நடத்தப்பட்டு ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் மத்தியில் ஆட்சியை பிடிக்கும் எனவும், 26 கட்சிகளின் ‛‛இந்தியா'' கூட்டணி பின்னடைவை சந்திக்கும் எனவும் கணிப்பில் கூறப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவின் என்டிஏ எனும் தேசிய ஜனநாயக கூட்டணி 296 முதல் 326 தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 கட்சிகள் இணைந்த எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா' கூட்டணி 160 முதல் 190 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 30- 34 இடங்களில் வெல்லும். 4-8 இடங்களை பாஜக - அதிமுக கூட்டணி லோக்சபா தேர்தலில் பிடிக்கும் என்று இந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா போன்ற தென் மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் கணிசமான வெற்றியைப் பெறும் என்று சர்வே கணித்துள்ளது. கர்நாடகாவில் NDA 18-20 (44.6%) இடங்களையும், இந்திய கூட்டணி 8-10 (43.3%) இடங்களையும் கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
திமுக மேலிடம்: ஆனால் திமுக மேலிடம் இந்த சர்வேவை பெரிதாக கருதவில்லை என்று கூறப்படுகிறது. இது போன்ற சர்வேக்கள் நிறைய வரும். அதில் உண்மை இருக்காது. அவர்களின் சாம்பிள் மிகவும் குறைவாக இருக்கும் என்று திமுகவினர் கூறுகின்றனர்.
கடந்த தேர்தலுக்கு முன்பும் இப்படித்தான் சொன்னார்கள். நாங்கள் 39 இடங்களில் வெல்வோம் என்ற கணிப்பை யாரும் வெளியிடவில்லை. ஆனால் நாங்கள் வென்று காட்டினோம். அதேபோல் நாங்கள் இந்த முறையும் வெல்வோம் என்று திமுக தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

உளவுத்துறை: ; லோக்சபா தேர்தல் தொடர்பாக பல்வேறு கருத்து கணிப்புகள் வெளியாகி வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் உளவுத்துறைக்கு முக்கியமான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி தேர்தலுக்கு முந்தைய சர்வேவை கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறாராம்.
அதாவது மாவட்ட அளவில் உள்ள லோக்சபா தொகுதிகள் அடிப்படையில் 39 லோக்சபா தொகுதியிலும் தமிழ்நாட்டில் யாருக்கு எல்லாம் வெற்றி வாய்ப்பு உள்ளது என்று பிரித்து வாக்கு சதவிகித அடிப்படையில் கொடுக்க வேண்டும் என்று முதல்வர் அலுவலகம் உத்தரவிட்டு உள்ளதாம். அந்த ரிப்போர்ட் வந்த பின்பே அதன் பின்பே தேர்தல் பணிகளை தொடங்கும் திட்டத்தில் இருக்கிறார்களாம்.
அதோடு தேர்தலில் அதிமுக - பாஜகவிற்கு சாதகமாக இருக்கும் இடங்களை கண்டறிந்து அங்கே பணிகளை செய்யும் திட்டத்திலும் திமுக தலைமை உள்ளதாம். இதனால் நாங்கள் 40க்கு 40 இடங்களை புதுச்சேரியோடு சேர்த்து வெல்வது உறுதி. அதில் மாற்றம் இல்லை என்று திமுகவினர் நம்பிக்கையாக தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications