கட்சிக்கு உள்ளேயே நடக்கும் "அமைதிப்படை" ஆபரேஷன்.. அவங்களாம் கூட்டு? எடப்பாடி எப்படி சமாளிப்பாரோ?
சென்னை; அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கட்சிக்கு உள்ளேயே எதிர்ப்பு எழும் வாய்ப்புகள் உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி வந்த காலத்தில் இருந்து வரிசையாக அக்கட்சி தோல்விகளை தழுவி வருகிறது. வரிசையாக 9 தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்துள்ளது.

அதன்படி 2017 ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், அதே ஆண்டு 22 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல், 2020 ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், 2021 ஆம் ஆண்டு நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2022 ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2023 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், 2020ல் நடந்த கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தல் என மொத்தம் 9 தோல்விகளை எடப்பாடி தலைமையிலான அதிமுக சந்தித்துள்ளது.
இப்போது லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்தால் அது அதிமுகவின் 10வது தொடர் தோல்வியாக அமையும். தென் மண்டலத்தில் வாக்குகளை இழந்தது, வடக்கு மண்டலத்தில் வலிமை இழந்தது, டெல்டாவில் பெரிய அளவில் சரிவை சந்தித்தது என்று அந்த கட்சி கடுமையான தோல்வியை தழுவி உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கட்சிக்கு உள்ளேயே எதிர்ப்பு எழும் வாய்ப்புகள் உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புரட்சி; ஏற்கனவே அதிமுக கட்சி லோக்சபா 2024 தேர்தலில் பெரிய அளவில் இடங்களை குவிக்காது என்று கட்சி தலைமை தகவல்கள் சென்றுள்ளதாம். இதன் காரணமாகவே தேர்தல் முடிந்ததும் நிர்வாகிகளை அழைத்து எடப்பாடி புலம்பி இருக்கிறார். கண்டிப்பு காட்டி இருக்கிறார். வெற்றிபெற முடியாது என்று தெரிந்து புலம்பி இருக்கிறார்.
விரக்தியாக எடப்பாடி பழனிச்சாமி இருந்துள்ளார் . உங்களை எல்லாம் 4 வருடம் சம்பாதிக்க விட்டேன். ஆனால் நீங்கள் தேர்தலில் செலவே செய்யவில்லை. ஏன் இப்படி செய்தீர்கள், என்றெல்லாம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமைதிப்படை ஆபரேஷன்: இப்படிப்பட்ட நிலையில்தான் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அமைதிப்படை ஆபரேஷன் ஒன்று நடந்து வருகிறதாம். அதிமுகவில் லோக்சபா தேர்தல் முடிவுகளுக்கு பின் மீண்டும் உட்கட்சி மோதல் வெடிப்பதற்கான அறிகுறிகள் ஏற்பட தொடங்கி உள்ளன. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கொங்கு பெல்ட் டீம் உருவாக்கிக்கொண்டு இருக்கிறது.
மணியான சிலர் எடப்பாடி பழனிசாமி மட்டும் தனியாக இருந்தால் கட்சி வெற்றிபெறாது. எல்லோரும் ஒன்று சேர வேண்டும். வெளியே சென்றவர்கள் உள்ளே வர வேண்டும். இல்லையென்றால் நமக்கும் எதிர்காலம் இருக்காது. கட்சி வென்றால்தான் நாம் சம்பாதிக்க முடியும். தனி தனியாக இருந்தால் அது முடியாது என்று முடிவு செய்துள்ளார்களாம்.
எடப்பாடி: இதை மனதில் வைத்தே சசிகலா - டிடிவி தினகரன் - ஓ பன்னீர்செல்வம் உடன் மணியான குழுவை சேர்ந்த சிலர் பேசி வருகிறார்களாம். கட்சியை மீட்டு ஒருமைப்படுத்த வேண்டும். அப்போதுதான் நம் எதிர்காலம் சரியாகும். இல்லையென்றால் கட்சிக்கு மட்டுமல்ல நமக்கும் எதிர்காலம் இருக்காது என்று "அமைதிப்படை" குரூப் கருதுகிறதாம்.
இதன் காரணமாகவே ஒவ்வொரு மாவட்டத்திலும் எடப்பாடி புதிய ஆட்களை கொண்டு வருகிறார். விரைவில் அவர்களை பெரிய பொறுப்பில் போடுவார். கட்சியில் தனக்கு எதிராக அமைதிப்படை புரட்சி நடப்பது தெரிந்து எடப்பாடி இப்படி செய்கிறார் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications