குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை.. மாற போகிறதா ரேஷன் கார்டு? உண்மை என்ன?
குடும்பத் தலைவிகள் ரூ 1000 உதவித் தொகை பெற ரேஷன் கார்டு மாறுகிறதா?
சென்னை: குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000 உரிமைத் தொகை வழங்க ரேஷன் கார்டில் ஏதேனும் மாற்றம் கொண்டு வரப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்பு திமுக தனது தேர்தல் அறிக்கையில் 500 க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அளித்தது. அந்த வகையில் முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றதும் பெண்களுக்கு இலவச பஸ் பயணம், ஆவின் பால் விலை குறைப்பு, கொரோனா நிவாரணம் ரூ 4000 உள்ளிட்ட திட்டங்களுக்கு கையெழுத்திட்டார்.
பெட்ரோல் விலை குறைப்பு உடனடியாக அறிவிக்காவிட்டாலும் 2022- 2023 தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரின் போது 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அது போல் நீட் தேர்வு ரத்து, டீசல் விலை குறைப்பு, மாதந்தோறும் மகளிருக்கு ரூ 1000 உரிமைத் தொகை உள்ளிட்ட வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படாமல் இருப்பது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.

ரூ 1000 உரிமைத் தொகை
இந்த நிலையில் ரூ 1000 உரிமைத் தொகை எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது. ஆனால் தமிழக அரசோ தற்போது திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் 85 சதவீதம் வரை செய்து முடித்துவிட்டோம். மீதமுள்ள திட்டங்களை ஒவ்வொன்றாக செய்து முடித்துவிடுவோம் என தெரிவித்திருந்தது. இது தொடர்பாக உயர்மட்ட அதிகாரிகள் அளவில் ஆலோசனையையும் முதல்வர் ஸ்டாலின் நடத்தியிருந்தார்.

பொருளாதார ஆலோசனை குழு
இதைத் தொடர்ந்து பொருளாதார ஆலோசனை குழுவுடன் ஆலோசித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்த கூட்டத்தில் யார் யார் பயன் அடையலாம் என்ற விவரங்களை சேகரித்து முதல்வரிடம் சமர்ப்பித்திருந்தார். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000 வழங்கும் திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
அதன்படி இன்றைய தினம் தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கப்பட்டது. இதில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த திட்டம் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தொடங்கப் போகிறது என அறிவிக்கப்பட்டது.

தகுதியுடையவர்கள் யார்
இந்த நிலையில் இந்த திட்டத்தின் பயனாளிகளை கண்டறிய மகளிர் மேம்பாட்டுக் கழகம் ஈடுபட்டு வருகிறது. மாநிலத்தில் வருமான வரி தாக்கல் செய்பவர்கள் குறித்த தகவல்களையும் மத்திய நேரடி வரிகள் வாரியத்திடம் தமிழக அரசு கேட்டுள்ளது. அதன்படி நிலையான மாத வருமானம் இல்லாத அன்றாட கூலி வேலை செய்யும் உழைக்கும் பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், கைம்பெண்கள், பி.எச்.எச். (PHH),அந்தியோதயா அன்னயோஜனா (AAY) ரேஷன் அட்டை வைத்திருக்கும் ரேஷன்கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும் என தெரிகிறது.

யாருக்கெல்லாம் ரூ 1000 கிடைக்காது
தமிழகத்தில் தற்போது 1.14 கோடி அந்தியோதயா அன்னயோஜனா ரேஷன் கார்டுகள் உள்ளன. தொடர்ந்து முதியோர் ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்துள்ளவர்களின் விவரங்களும் ஒப்பீடு செய்யப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாதம் ரூ 1000 உரிமைத் தொகையை வருமான வரி செலுத்துபவர்கள் பெற முடியாது. அது போல் மத்திய, மாநில அரசு பணியில் உள்ள பெண்களுக்கும் உரிமைத் தொகை கிடைக்காது. நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்போருக்கும் கிடைக்காது என்கிறார்கள்.

ரேஷன் கார்டில் மாற்றம்
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000 உரிமைத் தொகை வழங்குவதற்காக ரேஷன் கார்டு மாற்றப்படுவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த திட்டத்திற்காக ரேஷன் கார்டில் மாற்றங்கள் கொண்டு வந்தால் நிறைய குழப்பங்கள் ஏற்படும் என்பதால் அதில் மாற்றம் ஏதும் இல்லை என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications