மீனாட்சி அம்மன் கோயிலில் ரூ.1 கோடி மின்கட்டணம் பாக்கியா? ஆர்பி உதயகுமார் கேள்வி.. அமைச்சர் விளக்கம்
சென்னை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் ரூ.1 கோடிக்கு மின் கட்டணம் பாக்கி வைத்திருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாக சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் பேசினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே என் நேரு, பணத்தை பற்றி கவலைப்படாமல் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உலகப் புகழ் பெற்றது. கள்ளழகர் ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வினை லட்சக்கணக்கான பக்தர்கள் நேரில் பார்த்து தரிசனம் செய்வார்கள். மிகவும் பிரசித்தி பெற்ற இந்த மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். கள்ளழகர் ஆற்றில் எழுந்தருளும் வைபவம் வரும் மே மாதம் 12 ஆம் தேதி நடக்கிறது.

ரூ.1 கோடி மின் கட்டணம் பாக்கி
சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவத்தினை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மின் கட்டண பாக்கியாக ரூ.1 கோடி நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.
மின் கட்டணத்தை கட்டினால் தான் சித்திரை திருவிழாவுக்கு மின்சாரம் வழங்க முடியும் என்று மாநகராட்சி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று தமிழக சட்டசபையின் கேள்வி நேரத்தின் போது, இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் பேசினார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த ஆண்டில் இருந்து மின் கட்டணப் பாக்கி ரூ.1 கோடி இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் சொல்கிறார்கள்.
கே என் நேரு பதில்
இது பற்றி அமைச்சருக்கு தெரியுமா என்று கூறினார். மேலும் மதுரை சித்திரை திருவிழா புகழ் பெற்றது. இந்த பணத்தை கட்டாவிட்டால் சித்திரை திருவிழாவுக்கு அனுமதிக்க மாட்டோம் என்று அதிகாரிகள் சொல்லியிருக்கிறார்கள். எனவே இது பற்றி அமைச்சர்கள் கவனத்திற்கு தகவல் வந்திருக்கிறதா என்பதை அறிய விரும்புகிறேன் என்று கூறினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே என் நேரு, "பொதுப்பணித்துறை அமைச்சர், பதிவுத்துறை அமைச்சர், அறநிலையத்துறை அமைச்சர்கள் மதுரை சித்திரை திருவிழாவுக்கான ஏற்பாடுகள் பற்றி ஆய்வு செய்தனர். மதுரை மாநகராட்சி ஆணையர் என்னிடம் பேசினார். அப்போது நான் சித்திரை திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். பணத்தை பற்றியெல்லாம் யோசிக்க வேண்டும். எல்லாவற்றையும் நாங்க பார்த்துக்கொள்கிறோம் என்று கூறியிருக்கிறேன். எனவே சித்திரை திருவிழா ஏற்பாடுகள் பிரம்மாதமாக நடைபெறும் என்றார்.
அமைச்சர் சேகர்பாபு விளக்கம்
தொடர்ந்து இதற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பதில் அளித்து பேசினார். சேகர்பாபு கூறுகையில், "மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 5 ஆண்டுகளுக்கு மின் கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. சித்திரை திருவிழாவிற்காக ரூ. 2 கோடி நிலுவைத் தொகை நேற்று மாநகராட்சிக்கு செலுத்தப்பட்டு விட்டது. இதேபோன்று திருவண்ணாமலை தீபத்திருவிழாவிற்கு ரூ.1.5 கோடி நிலுவைத் தொகை வழங்கப்பட்டது" என்று பதில் அளித்தார்.












Click it and Unblock the Notifications