சல்லி சல்லியா நொறுங்கும் பாஜக கணக்கு.. அதிமுகவுக்கு திடீர்னு முட்டுகொடுக்கும் "தலைவர்".. அப்ப திமுக?
திமுக கூட்டணியில் இருந்து விசிக விலகுமா என்ற சந்தேகம் மேலும் அதிகமாகி உள்ளது
சென்னை: அதிமுக தொண்டர்களுக்காக விசிக தலைவர் திருமாவளவன், அக்கறையுடன் பேசியுள்ளது மகிழ்ச்சியையும், மற்றொரு பக்கம் சில சந்தேகங்களையும் எழுப்பி வருகிறது.
ஒற்றைத் தலைமை விவகாரம் அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் உச்சம் தொட்ட நிலையில், இன்று காலை 9.15 மணிக்கு அக்கட்சியின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடத்த ஏற்கனவே திட்டமிடப்பட்டது.
அதில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறதாகவும் கூறப்படுகிறது.

எடப்பாடி நம்பிக்கை
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஓபிஎஸ் பொதுக்குழுவிற்கு தடை கேட்டு சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதற்கு முன்னதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் தொடர்ந்த வழக்கில், பொதுக்குழு நடத்த தடையில்லை என்று சுப்ரீம்கோர்ட்டும் தீர்ப்பளித்திருந்தது.. இந்நிலையில், இந்த வழக்கில் விவாதம் முடிந்ததை தொடர்ந்து, இப்போது எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாகவே உத்தரவு வந்துள்ளது.. பொதுக்குழுவுக்கு தடையில்லை என்று கோர்ட் தெரிவித்துள்ளது.

பாஜக
இதெல்லாம் ஒரு கட்சியின் உட்பூசல்கள் என்றாலும், பிற கட்சிகளுக்கும் அதிமுகவில் நடப்பது வேதனை தந்து வருகிறது.. காரணம், அதிமுகவுக்கு பின்னால் இருப்பது பாஜகதான் என்றும், அதிமுகவை ஒருபக்கம் பலவீனப்படுத்தி கொண்டே, மறுபக்கம் பாஜகவை வளர்க்கப் பார்ப்பதாகவும் இந்த தலைவர்கள் சொல்லி வருகிறார்கள்.. நேற்றுகூட காங்கிரஸ் மாநில தலைவர் அழகிரி, "அதிமுக மூன்றாக உடைவதற்கு ஆர்எஸ்எஸ்.தான் காரணம். எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்தி உள்ளே நுழைய பார்க்கின்றனர்" என்று பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டியிருந்தார்.

திருமாவளவன்
இதைதான், விசிக தலைவர் திருமாவளவனும் தெரிவித்துள்ளார்.. சென்னை தாம்பரத்தில், அரசு அலுவலர் நலச்சங்கம் சார்பில் நடந்த முப்பெரும் விழாவில் சிறப்பு அழைப்பாளராக, தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு சிறப்பித்தார்... அப்போது அவர் பேசியபோது, "அதிமுக தலைமை குறித்து அதிமுக பொதுக்குழு முடிவு செய்யும். அதிமுக பலவீனப்படுவது, அதிமுகவை மட்டுமில்லை, தமிழ்நாட்டு நலனுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஏனெனில் அதிமுகவின் பலவீனத்தை சங்கப் பரிவார் தங்களை வலிமைபடுத்தி கொள்ள பயன்படுத்துவார்கள். தமிழ்நாட்டில் சங்கப் பரிவார் வலிமை பெறுவது பெரும் தீங்கை விளைவிக்கும்.

அமித்ஷா
சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூட பாஜகவின் அடுத்த இலக்கு தென்னிந்திய மாநிலங்கள் தான் என சொல்லியிருக்கிறார். தமிழ்நாட்டை மனதில் வைத்து தான் அவர் இதை சொல்லியிருக்கிறார். இத்தனை ஆண்டு காலம் அவர்கள் பாஜக தமிழகத்தில் மேற்கொண்ட முயற்சி வெற்றி பெறவில்லை. இப்போது தென்னிந்திய மாநிலங்களில் குறிவைத்து காய்களை நகர்த்துகிறார்கள். அதிமுக பலவீனப்படுவது அதிமுகவிற்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்தாது. இதை அதிமுக தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதிமுக தலைவர்களுக்காக சொல்லவில்லை.. தொண்டர்களுக்காக சொல்கிறேன்" என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

திருமாவளவன்
பாஜக குறித்து, அதிமுகவை திருமாவளவன் அலர்ட் செய்யவே திருமாவளவன் இப்படி சொல்லியிருப்பதாக எடுத்து கொண்டாலும், இதற்கு பின்னணியில் வேறு காரணம் இருக்கிறதா என்பதையும் யோசிக்க வேண்டி உள்ளது.. ஏனென்றால், சில தினங்களுக்கு முன்பு, திருமாவளவன் போட்ட ட்வீட் ஒன்று, புது குழப்பத்தை ஏற்படுத்தியது.. அதில், "அம்மாவுக்கு உடல்நலம் சரியில்லை. வானகரம் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைக் காண அதிகாலை புறப்பட்டு சென்றேன். வானகரம் அருகே போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டேன். அதிமுக பொதுக்குழுவுக்கு வந்திருந்த அக்கட்சியினர் என்னைச் சூழ்ந்துகொண்டு கைக் குலுக்கியது நெகிழ்வாயிருந்தது." என்று பதிவிட்டிருந்தார்.

திருமாவளவன் புலம்பல்
அதிமுகவினர் ஏன் திருமாவளவனை சூழ்ந்து கொள்ள வேண்டும் என்பதே அப்போது குழப்பமாக இருந்தது.. திமுகவில் ஏற்கனவே நிறைய விவகாரங்களில் திருமா புழுங்கி கொண்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.. அவ்வளவு ஏன்? 'ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்வதற்காக, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தலைமையில், எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் டெல்லியில் கடந்த 15ம் தேதி நடந்தபோது, இந்த கூட்டத்துக்கு திருமாவை அழைக்கவில்லை என்றார்கள்..

புலம்பல்
ஆனால், அடுத்து நடந்த கூட்டத்துக்கு அழைத்திருந்தனர். தேசிய அளவில் நடக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு தங்களுக்கு அழைப்பு இல்லை, திமுகவும் தங்களை தவிர்ப்பதாக, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர்களிடம் திருமா புலம்பியதாகவும், அவர்களும் திருமாவை சமாதானப்படுத்தியதாகவும், சில பத்திரிகைகள் செய்திகளை கசியவிட்டிருந்தன.எனினும், தற்போது வரை, திமுகவை விட்டுக்கொடுக்காமல் பேசி வருகிறார் திருமாவளவன்.. அதில் மாற்று கருத்து இல்லை.. பாஜகவின் கொட்டத்தை அடக்க வேண்டுமானால், அதன் வளர்ச்சியை தடுக்க, இதே திமுக கூட்டணி, அடுத்த தேர்தலிலும் இருக்க வேண்டும் என்ற விருப்பத்தையும் திருமாவளவன் விடாமல் சொல்லி வருகிறார்..
Recommended Video

புகைச்சல்
என்றாலும், கூட்டணிக்குள் சலசலப்புகள், முணுமுணுப்புகள் வெடித்து கொண்டுதான் வருவதையும், அடிக்கடி அதிமுக தொண்டர்கள் மீதான கரிசனத்தையும் லேசில் எடுத்துக் கொண்டு கடந்து போக முடியவில்லை.. ஒருவேளை அதிமுகவுடன் கூட்டணி வைப்பாரா? அப்படி கூட்டணி வைக்கும் சூழல் ஏற்பட்டால், பாஜக என்ன செய்யும்? இத்தனை காலமும் தமிழகத்தில் காலூன்றுவதற்காக, பட்ட பாடெல்லாம் வீணாகிவிடுமே.. பார்ப்போம்..!












Click it and Unblock the Notifications