2024ல் தமிழ்நாடு சட்டசபை தேர்தல்.. இப்பதானே சொன்னாரு எடப்பாடி! மாறிய அதிமுக தீர்மானம்-கவனிச்சீங்களா?
சென்னை: ஒரே நாடு ஒரே தேர்தல் முறை நடைமுறைக்கு வந்தால் 2024 நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழ்நாடு சட்டசபைக்கும் தேர்தல் வரும் என்று எடப்பாடி பழனிசாமி பல தருணங்களில் பேசி இருக்கும் நிலையில், இன்று நடைபெற்ற அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டத்தில் அது தொடர்பாக ஒரு கருத்து இடம்பெற்று உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களுக்கு முன் தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் சென்னையில் அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. 15 முக்கிய தீர்மானங்கள் இதில் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன.

இதில் கடைசி தீர்மானத்தில் இடம்பெற்ற ஒரு கருத்து எடப்பாடி பழனிசாமி இத்தனை நாட்களாக பேசி வந்ததற்கு மாற்றாக அமைந்து இருக்கிறது. அதில் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது, "வரவிருக்கின்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலிலும்; அதற்கடுத்து வரும் சட்டமன்றப் பொதுத் தேர்தலிலும், கழகப் பொதுச் செயலாளர் தலைமையில் தீவிர களப்பணி ஆற்றி, கழகத்தின் வெற்றிக் கொடி பட்டொளி வீசிப் பறந்திட வீரசபதம் ஏற்போம்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் மக்களின் மனங்களைக் கவர்ந்த தலைவராகவும், நம்பிக்கை அரசியலுக்கு நாயகராகவும் திகழ்ந்தவர். சத்துணவு திட்டம் தந்த சரித்திர நாயகர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் மக்களின் மனங்களில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர், மக்களுக்கு எதிரான தீய சக்திகளை எதிர்த்து நாளெல்லாம் போராடி நல்லாட்சி தந்தவர்.
புரட்சித் தலைவரின் வெற்றிப் பாதையில் பீடுநடை போட்டு, கழகத்தை அரை நூற்றாண்டுகால அரசியலுக்கு வித்திட்டவர் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் உண்மையான மக்கள் இயக்கம். மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இயக்கம். இந்த இயக்கம் இருக்கின்ற வரை, மென்மேலும், மென்மேலும் தமிழர்கள் வாழ்வு வளம் பெறச் செயல்படும்." என்று வீர முழக்கமிட்டவர்.
தீய சக்தியை எதிர்த்து மக்களைக் காத்த நம் இருபெரும் தலைவர்களின் ஆசிர்வாதத்தோடும், ஒன்றரைக் கோடி கழகத் தொண்டர்கள், நிர்வாகிகளின் பேராதரவோடும், வாராது வந்த மாமணி போல் கழகம் காத்து, தமிழகம் மீட்க வந்திருக்கின்ற கழகப் பொதுச் செயலாளர் திரு. எடப்பாடி K.பழனிசாமி அவர்களின் சீரிய தலைமையை ஏற்று, அவர் காட்டும் பாதையில் பயணித்து, வரவிருக்கின்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில், கழகத் தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றியை ஈட்டிடவும்; அதற்கடுத்து வரவிருக்கின்ற தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலிலும் முழுமையான பெருவெற்றியை ஈட்டி, கழகப் பொதுச் செயலாளர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் தலைமையில் கழகத்தின் நல்லாட்சி மீண்டும் மலரவும், அயராது உழைத்திட சூளுரை ஏற்போம்; வெற்றி பெறுவோம் என்று இந்தச் செயற்குழு வீரசபதம் ஏற்கிறது." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
மத்திய அரசு நாடாளுமன்றத்துக்கும் அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை அறிமுகம் செய்தது. பரிசீலனையில் இருந்து வரும் இத்திட்டத்தில் பல்வேறு மாநில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் மூலம் 2024 ஆம் ஆண்டிலேயே தமிழ்நாடு சட்டசபைக்கு மீண்டும் தேர்தல் வர வாய்ப்பு உள்ளது என்றார்.
கடந்த ஜனவரி மாதம் ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவு தெரிவித்து மத்திய சட்ட ஆணையத்துக்கு கடிதம் எழுதியதாகவும் செய்திகள் வெளியாகின. அண்மையில் அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் சேலத்தில் பேசிய அவர், "மத்தியில் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான பேச்சு எழுந்து இருக்கிறது. 2024 ஆம் ஆண்டில் கூட நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு தேர்தல் வரலாம். அப்போது அதிமுக ஆட்சி மீண்டும் மலரும்." என்று பேசி இருந்தார்.
இந்த நிலையில் இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், "வரவிருக்கின்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலிலும்; அதற்கடுத்து வரும் சட்டமன்றப் பொதுத் தேர்தலிலும்..." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இதன் மூலம் 2024 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற தேர்தலும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலும் ஒரே நேரத்தில் வராது என்பதை எடப்பாடி பழனிசாமியே உணர்ந்துள்ளார் என்பது தெரிகிறது. மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே இருக்கும் நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை இப்போது நடைமுறைப்படுத்த சாத்தியம் இல்லை என்றே கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications