தனுஷை வளரவிடக்கூடாது! அரசியலுக்குள் வரும் முன் போட்டு அடிக்கும் விஜய் ஆதரவு ஐடிக்கள்!
சென்னை: தமிழக அரசியலில் சினிமா நட்சத்திரங்களின் வரவும், அவர்கள் அதைத் தொடர்ந்து உருவாக்கும் மக்கள் செல்வாக்கும் புதிய விஷயமல்ல. ஆனால், சமீபகாலமாக தேர்தல் களத்தில் வெற்றியைத் தீர்மானிக்கும் முதன்மை சக்தியாகச் சமூக வலைத்தளங்கள் உருவெடுத்துள்ளன.
குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சமூக வலைத்தளங்களை மிகத் துல்லியமாகப் பயன்படுத்தி முதல்வர் அரியணை ஏறியது முதல், தற்போது நடிகர் தனுஷின் அரசியல் வருகை குறித்த வதந்திகள் வரை, டிஜிட்டல் அரசியல் களம் முன்பை விட மிகக் காரசாரமாக மாறியிருக்கிறது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய் அடைந்த மிகப்பெரிய வெற்றிக்கு, அவரது கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியும் ஆதரவாளர்களும் இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் தளங்களில் முன்னெடுத்த பிரச்சார உத்திகள் மிக முக்கியமான காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன.
திராவிடக் கட்சிகளின் பாரம்பரிய பிரச்சார முறைகளுக்கு மாற்றாக, இளைஞர்களையும் முதன்முறை வாக்காளர்களையும் கவரும் வகையில் ஹேஷ்டேக் போர்கள், ரீல்ஸ்கள் மற்றும் வீடியோ டிரெண்ட்கள் மூலம் ஆளுங்கட்சிக்கு எதிரான கருத்து உருவாக்கத்தை விஜய் ஆதரவாளர்கள் மிக வலுவாகக் கட்டமைத்தனர். இந்த சோஷியல் மீடியா பிரச்சார உத்தியே விஜய்யின் மக்கள் செல்வாக்கை வாக்கு வங்கியான மாற்றுவதில் பெரும் பங்காற்றியது.
இந்த நிலையில், திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் விரைவில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கக்கூடும் என்ற தகவல்கள் இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வருகின்றன. அதற்கு முகாந்திரமாக, கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் தனது நற்பணி மன்றங்களை தொகுதி வாரியாகப் பிரித்து, புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் பணியைத் தனுஷ் தீவிரப்படுத்தியுள்ளதாகச் செய்திகள் வெளியாகின. மேலும், தனது பிறந்தநாளின் போது ரசிகர்களைச் சந்தித்ததும், மேடைகளில் தாய்மொழி மற்றும் மக்கள் நலன் குறித்து அவர் பேசிய கருத்துகளும், அவரது அரசியல் ஆசையின் வெளிப்பாடே என்று அரசியல் விமர்சகர்கள் விவாதிக்கத் தொடங்கியுள்ளனர்.
தனுஷின் இந்தத் திடீர் அரசியல் நகர்வுகள் மற்றும் ரசிகர் மன்ற சீரமைப்பு நடவடிக்கைகள், விஜய் ஆதரவு சோஷியல் மீடியா வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. தனுஷ் அரசியலுக்கு வந்தால், அது இளைஞர்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் மத்தியில் விஜய்க்கு இருக்கும் ஆதரவு தளத்தைப் பிரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுவதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, விஜய் தேர்தலில் வெற்றி பெறப் பயன்படுத்தப்பட்ட அதே சமூக வலைத்தள பிரச்சார பாணியை, இப்போது தனுஷுக்கு எதிராக அவரது ஆதரவு ஐடிக்கள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.
இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் தளங்களில் தனுஷின் திரைப்பயணம், தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அவரது சமீபத்திய அறிக்கைகளை விமர்சித்து பல மீம்களும், விவாதங்களும் வைரலாக்கப்பட்டு வருகின்றன. கர படம் வெளியாகி தியேட்டரை விட்டு போனபின்பும் கூட.. கர படம் வரட்டும் தனுஷை பாருங்க என்று கிண்டலாக அவரை விஜய் ஆதரவு ஐடிகள் sarcasm செய்து வருகின்றன.
தனுஷின் அரசியல் வளர்ச்சியை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தவும், பொதுமக்களிடத்தில் அவரைப் பற்றிய ஒரு குறிப்பிட்ட பிம்பத்தை உருவாக்கவும் இந்த டிஜிட்டல் தாக்குதல்கள் திட்டமிட்டு நடத்தப்படுவதாக சினிமா மற்றும் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
ஒரு நடிகர் தன் ரசிகர் மன்றத்தை அரசியலாக மாற்றுவதும், அதைக் கண்டு மற்றொரு அரசியல் சக்தியின் ஆதரவாளர்கள் டிஜிட்டல் களத்தில் களமிறங்குவதும் தமிழக அரசியல் களம் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது என்பதைக் காட்டுகிறது. போஸ்டர் ஒட்டுவதும், தெருமுனைப் பிரச்சாரம் செய்வதும் மட்டுமே அரசியல் என்றிருந்த காலம் போய், இப்போது ஒரு ஸ்மார்ட்போன் மற்றும் சமூக வலைத்தள கணக்குகள் மூலமே ஒருவரின் அரசியல் வளர்ச்சியைத் தீர்மானிக்கவும், அதைத் தடுக்கவும் முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.
தனுஷ் இதுவரை தனது அரசியல் வருகை குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்றாலும், சோஷியல் மீடியாவில் அவருக்கு எதிராகத் தீவிரமடைந்துள்ள இந்த விமர்சனப் போர்கள், தமிழகத்தின் அடுத்தகட்ட அரசியல் மோதல்கள் இணையத்தில் தான் மிக தீவிரமாக நடக்கும் என்பதைத் தெளிவாக உணர்த்துகின்றன.


Click it and Unblock the Notifications
