குமாரபாளையத்தில் பச்சை நிறமான காவிரி நீர்.. குடித்தால் நோய் பரவுமா? நாமக்கல் மக்கள் கடும் பீதி!
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவிரி நகர் பகுதியில் மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் காவிரி ஆற்றில் தண்ணீர் திடீரென பச்சை நிறமாக மாறியிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்ட மக்களின் முதன்மைக் குடிநீர் ஆதாரமாகத் திகழும் காவிரி ஆற்றில், கர்நாடகப் பகுதியில் பெய்துவரும் மழையின் அளவு குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் குறைந்து, தற்போது காவிரி ஆற்றில் குடிநீருக்காக விநாடிக்கு ஆயிரம் கன அடி நீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது.

காவிரி கரையோரம்
இத்தகைய சூழலில், காவிரி கரையோரப் பகுதிகளில் உள்ள சில தொழிற்சாலைகள் ஆற்றுநீரை உறிஞ்சி பயன்படுத்தி வருவதால் நீர்மட்டம் மேலும் பாதிக்கப்படுகிறது.
இந்நிலையில், குமாரபாளையம் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்களுக்குக் குடிநீர் விநியோகம் செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள குடிநீரேற்று நிலையம் அமைந்துள்ள பகுதியில், காவிரி ஆற்றில் வரும் நீர் வழக்கத்திற்கு மாறாக பச்சை நிற திரவம் கலந்தது போன்ற தோற்றத்துடன் காணப்படுகிறது. ஆற்றின் நீரிலும், தண்ணீர் பாய்ந்து செல்லும் பாறைகளிலும் பச்சை நிறம் படிந்துள்ளதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நாமக்கல் குமாரபாளையம்
பொதுமக்களின் நேரடி பயன்பாட்டுக்கும் குடிநீருக்கும் பயன்படுத்தப்படும் காவிரி ஆற்றுநீர் இப்படி நிறம் மாறி வருவதால், இதனை குடிப்பதன் மூலம் பொதுமக்களுக்கு பல்வேறு கடுமையான உடல்நலக் கேடுகளும் கொடிய நோய்களும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சில பகுதிகளில் கடுமையான துர்நாற்றமும் வீசுவதாக பொதுமக்கள் சொல்கிறார்கள்.
அதுமட்டுமல்ல, இந்த தண்ணீரை பயன்படுத்துவதாலும், அதில் குளிப்பதாலும் உடல் அரிப்பு மற்றும் தோல் தொடர்பான உபாதைகள் ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதனால் மாவட்ட நிர்வாகமும் அரசும் உடனடியாகத் தலையிட்டு, காவிரி நீரில் நச்சுக்கழிவுகள் கலப்பதைத் தடுத்து பாதுகாப்பான தூய்மையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பச்சை நிறத்தில் காவிரி நீர்
கடந்த மாதம் கரூர் மாவட்டம் மாயனூர் கதவணைப் பகுதியில் காவிரியாற்றின் குறுக்கே அமைந்துள்ள பகுதியில், காவிரி நீரின் மீது பச்சை நிறத்தில் ஆயில் போன்ற படலம் படர்ந்து மிதப்பதாகப் பொதுமக்கள் தீவிரப் புகார் தெரிவித்தனர். மழைக்காலத்தையும், இரவு நேரங்களையும் பயன்படுத்தி சில தனியார் ஆலைகளும் சாயப்பட்டறைகளும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை காவிரியாற்றில் திறந்து விடுவதே இதற்குக் காரணம் என்று அப்பகுதி மக்களும் விவசாயிகளும் குற்றம் சாட்டியிருந்தனர்.
ஏற்கனவே மாயனூர் கதவணைப் பகுதியில் கழிவுநீர் கலப்பது தொடர்பாகப் பொதுமக்கள் அச்சம் தெரிவித்திருந்த நிலையில், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உடனடியாக அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, காவிரி நீரில் கலந்துள்ள நச்சுப் பொருள் என்ன என்பது குறித்து பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், ஆற்றுநீரில் கழிவுநீரை விடும் ஆலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.



Click it and Unblock the Notifications
