எக்ஸ்போ சர்ச்சை! பணத்தைத் திருப்பி தர முடியாது.. தாமரை செல்வி பேச்சு! ரவுண்ட் கட்டும் இணையவாசிகள்
சென்னை: பிக் பாஸ் மூலம் பிரபலமான தாமரை செல்விதான் சமீப காலமாகவே சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டிருக்கிறார். ஏற்கனவே அவர் நடித்துக் கொண்டிருந்த சீரியலிருந்து திடீரென அவர் வெளியேற்றப்பட்டார். அதற்கு பிறகு அடுத்தடுத்து அவருக்கு பஞ்சாயத்து தான் வந்து கொண்டிருக்கிறது. இப்போது சிலர் அவர் எக்ஸ்போ நடத்துவதற்காக பணம் கொடுத்து ஏமாந்து விட்டோம் என்று வீடியோ வெளியிட்டு வரும் நிலையில், அவர்களுக்கு நான் பணம் தர முடியாது என்று தாமரைச்செல்வி பேசி இருக்கிறார்.
தாமரை செல்வி ஆரம்பத்தில் திருவிழாக்களில் தெருக்கூத்துவில் ஆடி பிரபலமானவர். அவருக்கு பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அந்த நிகழ்ச்சியில் அதிக நாட்கள் இருந்து விட்டார். இவரால் ஒரு வாரம் தாக்கு பிடிக்க முடியாது என்று எல்லோரும் ஆரம்பத்தில் சொல்லிக் கொண்டிருந்தாலும், 97 நாட்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து 6வது போட்டியாளராக செலக்ட் ஆகி இருந்தார்.

அடுத்தடுத்து பிரச்சனை
இது ஒரு பக்கம் இருக்க, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்தை வைத்து விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா, சின்ன மருமகள் போன்ற சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் சின்ன மருமகள் சீரியலில் திடீரென்று தன்னை நீக்கிவிட்டார்கள் என்று அவரே பேட்டிகளில் பேசியிருந்தார். அதுவும் பெரிதாக பேசப்பட்டது. அதற்கு பிறகு ஆதி என்ற ஒருவர் தன்னை 10 லட்சம் ஏமாற்றிவிட்டார் என்று வீடியோக்கள் வெளியிட்டிருந்தார். அதற்கு ஆதியும் மறுப்பு தெரிவித்து இருந்தார். இதனால் இந்த பஞ்சாயத்து ஒரு பக்கம் போய்க்கொண்டிருந்தது.
அதற்கு பிறகு அவர் சட்டமன்ற தேர்தலில் தவெக கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து இருந்தார். ஆனால் முதல்வர் விஜய் ஆட்சிக்கு வந்த பிறகு தனக்கு எக்ஸ்போ நடத்த அனுமதி கிடைக்கவில்லை, அமைச்சர் அருண் காமராஜை சந்திக்க நான் எவ்வளவோ முயற்சி செய்தேன் ஆனால் அவர் எங்களை எல்லாம் சந்திக்க முடியாது என்று சொல்லிவிட்டார். ஆனால் நான் அவருக்காக ஓட்டு கேட்டேன் என்று வீடியோ வெளியிட்டு இருந்தார். இதுவும் பெரிதாக பேசப்பட்டது.
இப்போது இவர் நடத்திய எக்ஸ்போவில் பணம் கொடுத்து ஸ்டால் புக் பண்ணினவர்கள் தொடர்ந்து வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்கள். அதில் அவர்கள் பேசுகையில், எக்ஸ்போ கேன்சல் ஆனதால் பணத்தை திருப்பி கேட்டு தாமரையை தொடர்பு கொள்ள முயற்சி செய்தோம். ஆனால் அவர் போனை சுவிட்ச் ஆப் பண்ணி வைத்திருக்கிறார். எங்களுக்கு பணம் வருமா? இல்லையா? என்று தெரியவில்லை. நாங்க கஷ்டப்பட்டு சேர்த்த பணம், என்றெல்லாம் கண்ணீருடன் ஒரு பெண் பேசி இருந்தார். அவரை போல பலர் பேச தொடங்கி விட்டார்கள்.
தாமரை செல்வி வெளியிட்ட வீடியோ
இப்படி இருக்கும்போது தாமரை செல்வி இன்று ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் எல்லோருக்கும் வணக்கம், நான் எக்ஸ்போ போட்டு எந்த லாபமுமே பார்த்தது கிடையாது. என் கையில் இருந்து தான் நான் செலவழித்து இருக்கிறேன். அப்படி இருந்தாலும் என்னை நம்பியவர்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். நான் கடைசியாக போட்ட எக்ஸ்போ கேன்சல் ஆகிவிட்டது. அதற்கு முன்பு போட்ட எக்ஸ்போவில் பிரச்சனை வந்தது. கடைசியாக போட்டதில் 5 ஸ்டால்தான் புக் ஆகி இருந்தது. அதில் வந்த பணத்தை இதற்கு முன்பு நடந்த பிரச்சனைக்கு நான் ரொட்டேஷன் கொடுத்து இருந்தேன். இப்போது என்னுடைய கையில் பணமே இல்லை.
எல்லோரும் பேசுறாங்க
அப்படி இருக்கும்போது நாங்கள் பணத்தை கொடுத்து தாமரை செல்வியிடம் ஏமாந்து விட்டோம் என்று சிலர் வீடியோ வெளியிடுறாங்க. யூடியூப், இன்ஸ்டாகிராம் என எந்த பக்கம் போனாலும் தாமரை செல்வி பணத்தை ஏமாத்திட்டாங்கன்னு சொல்லுறாங்க. நானே ஒருத்தன் கிட்ட 10 லட்சம் பணத்தை ஏமாந்து விட்டேன். ஆனால் இவங்க எல்லாம் சொல்றதை பார்க்கும்போது அவன மாதிரி தான் நான் பண்ணனுமோ? நான் யாரையும் ஏமாற்றல. இப்போதைக்கு என் கிட்ட பணம் இல்ல. பற்றாக்குறையில் இருக்கிறேன்.
என்கிட்ட இருக்கிற நகையை வித்து கூட பணத்தை திருப்பி தர முடிவு செய்தேன். ஆனால் இப்போ தங்க விலை திடீரென குறைந்து வருவதால் இந்த நேரத்தில் நகையை விற்றாலும் பணம் வராது. அதனால் தான் நான் கொஞ்சம் பொறுமையாக இருக்கிறேன். நீங்கள் ஒரு மாதம் வரைக்கும் தயவு செய்து பொறுமையாக இருங்கள். உங்களுக்கு நான் கொடுக்கிறேன்.
பணம் கொடுக்க முடியாது
அதே நேரத்தில் இன்னொரு விஷயத்தை நான் சொல்கிறேன் என்னை நம்பாமல், பொறுமையாக இருக்க முடியாமல், என்னை பற்றியும் என் பெயரை கெடுக்கும் விதமாக வீடியோ போட்டவங்களுக்கு நான் ஒரு பைசா கூட கொடுக்க மாட்டேன். அவங்களால என்னுடைய வாழ்க்கையே போய்விடும் போல. எனக்கான வாய்ப்புகள் கூட மறுக்கப்படுகிறது. இப்படி இருக்கும் போது நான் எதற்காக அவங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும்? என்று அந்த வீடியோவில் தாமரை செல்வி பேசியிருக்கிறார். இதனால் இவரிடம் பணத்தை கொடுத்தவர்கள் மீண்டும் வீடியோக்கள் போட தொடங்கி விட்டார்கள்.




Click it and Unblock the Notifications
