விஜய்தான் டர்னிங் பாயிண்ட்? வெடித்து கிளம்பும் திமுக கூட்டணி தலைகள்! விஷயம் சீரியஸ்!
சென்னை: சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில், நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இந்த நேரத்தில் திமுக கூட்டணி தலைவர்கள் ஒவ்வொருவராக பேசி வரும் கருத்துக்கள் விவாதங்களை கிளப்பியிருக்கின்றன.
கடந்த 29ம் தேதி 5 மாநில தேர்தல்கள் நிறைவடைந்திருந்தன. இதனையடுத்து கருத்துக்கணிப்புகள் வெளியாகியிருந்தன. அதில், தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்ற பெரும்பாலான நிறுவனங்கள் கணித்திருந்தன. ஆனால், விஜய் ஆட்சிக்கு வருவார் என்று ஆக்ஸிஸ் மை இந்தியா மட்டும் கூறியிருந்தது. நிலைமை இப்படி இருக்கையில் திமுக கூட்டணிக்குள் குழப்பங்கள் வெடித்திருக்கின்றன.

உடைத்து பேசிய தலைவர்கள்
திமுக கூட்டணியிலிருந்து எழுந்த முதல் குரல் பிரேமலதாவின் குரல்தான். ஆட்சி அதிகாரத்தில் பங்கு குறித்து அவர் சொன்ன கருத்துக்கள் வெடியை கொளுத்தி போட்டிருக்கிறது.
அதாவது, ரிசல்டில் தொங்கு சட்டசபை அமைவதாக தெரிந்தால், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்கு, "தேர்தல் களத்தில் அனைவரும் சிறப்பாக பணியாற்றி உள்ளோம். இந்த கேள்விக்கு வரும் 4ஆம் தேதி பிறகு பதில் அளிக்கிறேன்" என்று கூறியிருந்தார். தேர்தலுக்கு முன்னாடி வரைக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு குறித்து வாய் திறக்காத பிரேமலதா, இப்போ திடீர்னு இந்த விஷயம் பற்றி ரிசல்டுக்கு அப்புறம் பேசுறேன் என சொல்லியிருப்பது ஏன்? என்று கேள்விகள் எழுந்திருக்கின்றன.
திருமாவளவன் பேசியது என்ன?
மறுபுறம், திருமாவளவன் பேசியதும் கவனம் பெற்றிருந்தது. அதாவது தோழமை கட்சிகளுக்காக விசிகவினர் சரியாக வேலை செய்யவில்லை என்று அவர் விமர்சித்திருக்கிறார். முதலில் திருமாவளவன் நேரடியாக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அவர் பின்வாங்கிக்கொண்டார். அதேபோல புதுச்சேரியில் சில தொகுதிகளில் தங்கள் கட்சிக்கு யாரும் வாக்களிக்க வேண்டாம் என்று கூறியிருந்தார். இப்படி முன்னுக்கு பின் முரணான செயல்பாடுகளால் திருமாவளவன் மீது விமர்சனங்கள் எழுந்திருந்தன.
கிளம்பும் புது யூகம்
இப்படி இருக்கையில், தோழமை கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகளில் விசிகவினர் வேலை செய்யவில்லை என்று குற்றச்சாட்டை திருமாவளவன் நேரடியாக முன் வைத்திருக்கிறார். அப்படி எனில், அந்த தொகுதிகளில் திமுக கூட்டணி தோல்வியடையுமா? என்று பலரும் கேள்வி எழுப்ப தொடங்கியிருக்கின்றனர்.
ஆக இப்படி இரு தலைவர்களின் பேச்சும் பல்வேறு யூகத்தை கிளப்பியிருக்கும் நிலையில், தற்போது சிபிஎம் மூத்த தலைவர் கே.பாலகிருஷ்ணன் பேசியிருப்பது, புதிய விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
சிபிஎம் தலைவர்கள்
"தேர்தலின்போது இடதுசாரிகளுக்கு உரிய அங்கீகாரம் தர திமுக மறுத்துவிட்டது. அமையப்போகும் திமுக ஆட்சி எப்படி இருக்கும் என்பது கேள்விக்குறிதான். ஏனென்றால் இளைஞர்கள் மத்தியில் கொந்தளிப்பு காணப்படுகிறது. வேலையில்லா திண்டாட்டத்தை தீர்க்க உருப்படியான நடவடிக்கைகளை அரசு எடுக்கவில்லை
மாற்றம் வேண்டும் என்கிற மிகப்பெரிய எழுச்சி, அரசியல் புரிந்துணர்வு இளைஞர்களிடம் ஏற்பட்டிருக்கிறது. இது வரவேற்கத்தக்கது, பாராட்டத்தக்கது" என பேசியிருக்கிறார்.
அப்படியெனில் விஜய் காரணியை சிபிஎம் வெளிப்படையாகவே வரவேற்கிறதா? விஜய்யை ஆதரிக்கிறதா? என்று கேள்விகள் எழுந்திருக்கின்றன.
கொளுத்தி போட்ட காங்கிரஸ்
இதுபோக காங்கிரஸ் தன் பங்குக்கு கொஞ்சம் கொளுத்தி போட்டிருக்கிறது. "களத்திலிருந்து ஒரு விசயத்தை மட்டும் மிகத்தெளிவாக உணரமுடிகிறது. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மாணவர்கள்,இளைஞர்கள்,பெண்கள் இவர்களின் தாக்கம் தேர்தல் முடிவைத் தீர்மானிப்பதில் மிக முக்கியக் காரணியாக இருக்கும்" என காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கூறியிருக்கிறார்.
இப்படி வரிசையாக கூட்டணி தலைவர்கள் பேசியிருப்பது, அடுத்து திமுக ஆட்சி அமைகிறது எனில், அந்த ஆட்சியில் கூட்டணி கட்சிகளுக்கு பங்கு இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதை போல இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications