முருகனுக்கு முஸ்லிம் பெயர்; அருணகிரிநாதர் தரும் ஆதாரம்! தொடரும் பழனி சர்ச்சை!
கடந்த 29 ஆம் தேதி உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை, "இந்து அல்லாதவர்கள் மற்றும் இந்து மத கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்களைப் பழனி கோயில் கொடிமரம் தாண்டி உள்ளே அனுமதிக்கக் கூடாது" என்று ஒரு அதிரடியான தீர்ப்பை வழங்கி இருந்தது.
அந்தத் தீர்ப்பு குறித்து மதச்சார்பற்று பொதுத் தளத்தில் இயங்கி வரும் பலர் சமூக ஊடகங்களில் கவலை தெரிவித்தனர்.

இந்தத் தீர்ப்பு குறித்து விடுதலை ராசேந்திரன், "இப்படியே போனால் இந்து கடவுள்கள் பற்றிய வழக்கு வந்தால் இந்து நீதிபதிகள்தான் விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றங்கள் தீர்ப்பளித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!" என்று கவலை தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சேகர்பாபு, "பழனி கோயில் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. "நீதிமன்ற இறுதித் தீர்ப்பைப் பொறுத்தே, அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிப்போம்" என்று கூறியிருக்கிறார்.
தக்கலை ஹமீம் முஸ்தபா என்ற எழுத்தாளர் எழுதிய பதிவு ஃபேஸ்புக் பக்கத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. அந்தப் பதிவு முருகனுக்கும் இஸ்லாமிய மக்களுக்கும் உள்ள தொடர்பை உணர்வுப்பூர்வமாக அலசி உள்ளது.
ஹமீம் முஸ்தபா அப்படி என்ன எழுதினார்? முருகக் கடவுளுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் என்னத் தொடர்பு?
அந்தப் பதிவை அப்படியே தருகிறோம்.

"'மயிலேறும் ராவுத்தர்' என அழைத்து அருணகிரிநாதர் பாடிய முருகனின் பழனி கோவிலுக்குள் இந்து அல்லாதார் நுழைவது குறித்த நீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.
அருணகிரிநாதர் கந்தர் அலங்காரத்தில் முஸ்லிம்கள் கூறும் முகமனான ஸலாம் என்பதையும் முருகனுக்குக் கூறுவார்.
முருகன் வழிபாட்டிற்கும் முஸ்லிம்களுக்கும் இருக்கின்ற தொடர்பு தமிழ்ச்சூழலில் முக்கியமானது. பழம் மதுரையின் அடையாளம் திருப்பரங்குன்றம் . அந்தத் திருப்பரங்குன்றம் மலையின் மேலே சிக்கந்தர்.கீழே ஸ்கந்தன்.
பக்தி , நம்பிக்கை, வேண்டுதல், சுற்றுலா, தொல்லியல், பண்பாடு, பொழுது போக்கு என வழிபாட்டு இடங்களுக்கு வருகிறவர்கள் பல தரப்பட்டு இருப்பார்கள். மதங்களைக் கடந்து சாதிகளைக் கடந்து மக்களாகக் கூடுகிற இந்த இடங்களின் மீது தலையீடு நிகழ்த்தி மக்களில் ஒரு சாராரை வழிமறிப்பது என்பது ஆபத்தான போக்கு .
வைதீகப்படாத மக்களின் வாழ்வில் அந்தச் சாமி, இந்தச் சாமி பேதங்கள் எதுவுமில்லை. சமீபத்தில் திருமண பத்திரிகை ஒன்று பார்த்தேன், " அருள்மிகு பெரிய நாயகி துணை/ அருள்மிகு ஆனந்த வல்லி, அருள்மிகு கால பைரவர் , அருள்மிகு முத்தால ராவுத்தர் துணை என்று குறிப்பிடப் பட்டிருந்தது.

இதுதான் தமிழரின் நம்பிக்கை மரபு .'எந்தச் சாமியைக் கும்பிட்டால் என்ன ?யாராவது ஒரு சாமி வரம் கொடுக்காதா?!' என்னும் எளிய மக்களின் நம்பிக்கையில் நெருப்பள்ளி போடுகிறது நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு.
சூரியன் மறைந்த நேரம் மெல்லிருட்டு முஸ்லிம்களின் தொழுகை பள்ளி வாசல்களின் முன்னால் முஸ்லிம் அல்லாத தாய்மார்கள் , தந்தையர்கள் தங்களின் குழந்தைகளோடு வரிசையாக நிற்பார்கள் .
தொழுகையை நிறைவு செய்துவிட்டு வருபவர்கள் அந்த வரிசைகளை நோக்கி வருவார்கள் . ஏதேனும் ஒரு திருக் குர்ஆன் வசனத்தை ஓதி ஒவ்வொரு குழந்தையின் நெற்றியிலும் ஊதுவார்கள். தமிழகம் முழுவதும் இந்தக் காட்சியை நம்மால் காண முடியும்
.
குழந்தைகளைக் கொண்டுவந்து காத்து நிற்கும் பெற்றோருக்கும், குழந்தைகளின் நெற்றியில் ஓதி ஊதும் அந்தத் தொழுகையாளிகளுக்கும் இடையில் மதம் ஒருபோதும் தடையாக இருந்ததில்லை. தமிழகம் முழுவதும் இந்தக் காட்சியை நம்மால் காண முடியும் .
வீட்டில் குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்றால் அருகிலிருக்கும் பள்ளிவாசலுக்கு எடுத்துச் சென்று மந்திரித்துப் பார்க்கும் சகோதர சமய உறவுகள் அடர்ந்த நிலம் இது. மாதா கோவில் குருசடிக்கு மெழுகுவர்த்தி காணிக்கை செலுத்தும் கிறிஸ்தவர் அல்லாத மக்கள் ஏராளம் உண்டு.
மண்டைக்காட்டு அம்மனையும் குளச்சல் கடற்கரை புதூரின் லூசியாளையும் அக்காள் தங்கைகளாக உறவுமுறைப் பேணும் மரபு இந்த மண்ணிற்குரியது. குமரி மாவட்டத்தின் பல தர்ஹாக்களின் அருகில் காவல் தெய்வமாகச் சுடலை மாடன் நிற்பதைப் பார்க்கமுடியும்.

இவைபோன்ற புண்ணிய இடங்கள் மதமற்றவை . மதம் கடந்து மக்கள் கூடுபவை . அங்கே அவர்கள் அவர்களின் சுய அடையாளத்துடன் வரலாம் என்பதே அவற்றின் அழகு.
தக்கலைச் சுற்றுவட்டாரத்தில் உயர் நிலை , மேல் நிலைப் பொதுத்தேர்வு எழுதும் ,மாணவர்கள் இன்றும் தேர்வு நாளன்று தக்கலை பீர்முஹம்மது அப்பாவை வழிபட்டுச் செல்லும் மரபைப் பார்க்க முடியும்.

முஸ்லிம்களுக்கு அவர் இறைநேசர், முஸ்லிம் அல்லாதவர்க்கு அவர் சித்தர், பள்ளி நாயன், அல்லா சாமி, அங்கு வழங்கப்படும் உணவு முஸ்லிம்களைப் பொறுத்துவரை நேர்ச்சை, மற்றவர்களுக்கு அது பிரசாதம் . வேறு வேறு அடையாளங்கள் கொண்டோ , வேறு வேறு பெயர்கள் கொண்டோ அழைப்பதனால் எந்த வேறுபாடும் இல்லை .
இயல்பாக மக்கள் இணைந்து கொள்கிற இத்தகைய ஒற்றுமைத் தலங்களின் மீது பெரும்பான்மை அடிப்படைவாதமும் , சிறுபான்மை அடிப்படைவாதமும் நீண்டகாலமாகவே குறிவைத்துத் தாக்குதலை நிகழ்த்தி வருகின்றன . மக்கள் இணக்கமாக இருத்தல் என்பது அவர்களின் அடிப்படைவாத அரசியலுக்கு ஒத்துவராது .

ஆனால் அதே அடிப்படைவாத குரலை நீதிமன்றத்திலிருந்து கேட்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது . ஆகம விதிகளால் அல்ல மக்கள் தங்களின் வாழ்வில் பேணும் ஆகும் விதிகளைக்கொண்டு மக்களை அரவணைத்துக் கொள்வதே அழகு" என எழுதி இருக்கிறார் தக்கலை ஹமீம்
இவர் கட்டுரையின் தொடக்கத்தில் பயன்படுத்தி உள்ள 'மயிலேறும் ராவுத்தர்' என்ற சொல்தான் இப்போது பேசு பொருளாகி உள்ளது.
முருகனின் அறுபடை வீடு எந்தளவுக்குப் புகழ் பெற்றதோ அந்தளவுக்கு முருகனை உருகிப் பாடிய அருணகிரிநாதரின் 'கந்தர் அலங்காரம்' , 'திருப்புகழும்' புகழ் வாய்ந்தது.
தித்திக்கும் திருப்புகழை வாழ்க்கையில் ஒருமுறை ஒருவர் படித்துவிட்டால் அது தரும் தமிழ் இன்பத்திலிருந்து விடுபடவே முடியாது. அந்தளவுக்கு தேனமுதம் தரும் படைப்பு அது.

தமிழ்க் கடவுளான முருகனை அருணகிரிநாதர், கந்தர் அலங்காரத்தில் இரண்டு இடங்களில் 'இராவுத்தன்' என்று அழைக்கிறார். அதாவது 'இராவுத்தர்' என்ற சொல்லைத்தான் அவர் இராவுத்தன் என்று குறிப்பிட்டுள்ளார். இந்தச் சொல் தமிழ்ச் சொல் அல்ல. அரேபிய வார்த்தை. 'இராவுத்தன்' என்றால் குதிரை வீரன் என்று பொருள்.
இச்சொல் 'ரவா' மற்றும் 'துதா' என்ற சொல்லிலிருந்து உருவாகி இருக்கலாம் என்பது தமிழறிஞர்களின் கணிப்பு. ரவா என்றால் அரசன் என்றும் துவா என்றால் செய்தியைக் கொண்டு செல்லும் தூதுவன். அரசனுக்குச் செய்தி கொண்டு செல்பவன் என்பதால் குதிரை வீரன்.

பிற்காலத்தில் அரேபிய நாட்டிலிருந்து குதிரைகள் விற்க வந்த இஸ்லாமியர்களை குறிக்க இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வட்டார வழக்குச் சொல்லை அருணகிரிநாதர் முருகனைக் குறிப்பிடப் பயன்படுத்தி உள்ளார்.
ஏதோ ஒருவகையில் முருகனுக்கும் தமிழக இஸ்லாமிய மக்களுக்கும் தொடர்பு இருந்ததால்தான் அருணகிரிநாதர் முருகனை 'ராவுத்தன்' எனப் புகழ்ந்து பாடியுள்ளார் என்பது இந்தச் சர்ச்சையில் முக்கிய வாதமாக முன்வைக்கப்படுகிறது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications