அக்னிபாத்தை எதிர்ப்பது தான் தேசபக்த கடமை! வாங்க ஓரணியில் நிற்போம்! மோடி அரசை சாடிய கே பாலகிருஷ்ணன்
சென்னை: ‛‛ஆபத்தான சூழலில் இந்திய நாட்டை பாதுகாக்கும் ராணுவ பணிக்கு கூட 4 ஆண்டுகள் ஒப்பந்தக்கூலியில் ஆட்களை எடுக்க துணிந்திருக்கிறது மோடி அரசாங்கம். இது மிகப்பெரிய மோசடி. அக்னிபாத் திட்டத்தை எதிர்ப்பது மகத்தான தேசபக்த கடமை. இதனால் அனைவரும் ஓரணியில் நின்று எதிர்ப்போம்'' என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இந்திய பாதுகாப்பு துறையின் முப்படைகளில் அக்னிபாத் எனும் திட்டம் அறிமுகமாக உள்ளது. இதன்மூலம் குறுகிய கால பணியாக 4 ஆண்டுகள் வரை இளைஞர்கள் பணியமர்த்தப்பட உள்ளன.
இந்த திட்டத்துக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இத்திட்டத்தை கைவிட்டு இதற்கு முன்பு இருந்தபடியே முப்படைகளிலும் ஆள்சேர்ப்பு நடவடிக்கை வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

வெடித்த போராட்டங்கள்
இந்தியாவில் வடமாநிலங்களில் இந்த திட்டத்துக்கு கடுமையாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இளைஞர்கள் ஆக்ரோஷமாக போராடி வருகின்றனர். குறிப்பாக பீகார், உத்தர பிரதேசம், அரியானா, மேற்குவங்கம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள், சாலை, ரயில் மறியல் தொடர்ந்து நடக்கின்றன. பீகார், உத்தர பிரதேசங்களில் ரயில்கள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. இதனால் வன்முறையானது. பல இடங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் டயர்களை போட்டு தீவைத்து போராட்டக்காரர்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றன. போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்து வருகின்றனர். பல இடங்களில் கண்ணீர் புகை குண்டுகள் பயன்படுத்தப்பட்ட நிலையில் செகந்திராபாத்தில் துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் ஒருவர் பலியாகி உள்ளார். 10க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்
இந்நிலையில் எதிர்க்கட்சிகள் இளைஞர்களின் பக்கம் உள்ளன. இத்திட்டத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. மத்திய அரசு அக்னிபாத் திட்டத்தை கைவிட வேண்டும் என காங்கிரஸ், சிவசேனா, ஆம்ஆத்மி, கம்யூனிஸ்ட் கட்சிகள், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும் திட்டத்தை செயல்படுத்துவதில் மத்திய அரசு தீர்க்கமாக உள்ளது. இதனால் இளைஞர்களும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

கே பாலகிருஷ்ணன் எதிர்ப்பு
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் அக்னிபாத் திட்டத்தையும், அதனை அமல்படுத்தும் பிரதமர் நரேந்திர மோடியின் மத்திய அரசையும் விமர்சனம் செய்துள்ளார். மேலும் அனைவரும் ஓரணியில் திரண்டு அக்னிபாத் திட்டத்தை எதிர்க்க வேண்டும் என அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். இதுபற்றி கே பாலகிருஷ்ணன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

ஒப்பந்த கூலியில்...
ஆபத்தான சூழலில் இருந்து இந்திய நாட்டை பாதுகாக்கும் உட்சபட்ச கடமையை ஆற்றுவோர் ராணுவ வீரர்களே. அந்த பணியிலும் கூட 4 ஆண்டுகள் ஒப்பந்தக்கூலியில் ஆட்களை எடுக்க துணிந்திருக்கிறது மோடி அரசாங்கம். இது மிகப்பெரிய மோசடி ஆகும். ஓய்வூதியம், பணிப்பாதுகாப்பு ஏற்பாடுகளை மறுத்து நிரந்தரமற்ற சூழலில் 4 ஆண்டுகளுக்கு பின் கைவிடப்படும் வீரரின் நிலை என்ன ஆகும்?/

எதிர்ப்பது தான் தேசபக்த கடமை
ராணுவ வீரர்களுக்கே இதுதான் நிலை என்றால், மற்ற பல துறைகளிலும் இதை விட மோசமான நிலை அல்லவா ஏற்படுத்தப்படும். இந்த அக்னிபத் திட்டத்தை எதிர்ப்பது, மகத்தான தேசபக்த கடமை. அனைவரும் ஓரணியில் நின்று எதிர்ப்போம்'' என பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை அவர் விமர்சனம் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications