இதெல்லாம் சும்மா விளையாட்டு இல்லை.. 13 வருஷம் முன்பே அரசியல் எண்ட்ரி குறித்து விஜய் சொன்னது
சென்னை: நடிகர் விஜய் தனது அரசியல் பயணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ள நிலையில், கடந்த 13 வருடங்களுக்கு முன்பாக விஜய், அரசியல் குறித்த கேள்விக்கு அளித்த பதிலை பார்க்கலாம்.
தமிழ் திரையுலகின் டாப் நட்சத்திரமாக இருப்பவர் விஜய். தமிழகத்தில் விஜய் படம் வெளியாகும் போதெல்லாம் ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி வருகிறார்கள். தனது நடிகர் சங்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றிய விஜய் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். இதனால், விஜய் விரைவில் அரசியலுக்கு வரலாம் என்று கடந்த சில ஆண்டுகளாகவே பேசபப்ட்டு வந்தது.

குறிப்பாக கடந்த சில மாதங்களாக நடிகர் விஜயின் செயல்பாடுகள் அவரது அரசியல் வருகையை உறுதிப்படுத்தும் விதமாகவே இருந்தது. தொடர்ந்து தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை செய்து கொண்டு இருந்தார். இதனால், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் அரசியலுக்கு வருவது உறுதி என அவரது ரசிகர்கள் கூறி வந்தனர். இந்த நிலையில் தான் தனது அரசியல் வருகையை நடிகர் விஜய் இன்று அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளார்.
ரசிகர்கள் மகிழ்ச்சி: "தமிழக வெற்றி கழகம்" என்ற பெயரில் கட்சியை தொடங்கியிருக்கும் விஜய், வரும் 2026 சட்டமன்ற தேர்தல்தான் இலக்கு என்றும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை.. யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் அறிவித்து இருக்கிறார். நடிகர் எம்ஜிஆர், நடிகர் விஜயகாந்த், நடிகர் சரத்குமார், கமல்ஹாசன் வரிசையில் தற்போது விஜயும் அரசியல் கட்சியை தொடங்கியிருக்கிறார்.
இதனால் நடிகர் விஜயின் ரசிகர்கள், விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நடிகர் விஜயின் இந்த அறிவிப்பை தொடர்ந்து அவர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். இதனிடையே, கடந்த 13 வருடங்களுக்கு பிறகு விஜய் அளித்த பேட்டி ஒன்றில் அரசியல் வருகை குறித்து பதிலளித்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. விஜய் அந்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
கட்டாயமாக மக்களுக்கு நான்: இப்போதைக்கு என்னுடைய கவனம், ஆர்வம் எல்லாமே சினிமாதான். அதில் எந்த மாற்றமும் இல்லை. என்ன படம் நடிக்க வேண்டும்... அடுத்து என்ன படம் நடிக்க வேண்டும்.. எந்த மாதிரி நான் டிரவல் பண்ணனும் அதில்தான் எனது கவனம் உள்ளது. நான் ஒரு நடிகன் ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டேன். இவ்வளவு பெரிய ஸ்டேஜில் மக்கள் என்னை கொண்டு வந்து உட்கார வைப்பாங்க என்று அப்போது நான் எதிர்பார்க்கல..
அது காலம்.. என்னைக் கொண்டு வந்து இந்த இடத்தில் உட்கார வைத்துள்ளது. அதே மாதிரி காலம் என்னைக் கொண்டு போய் ஒரு இடத்தில் உட்கார வைக்கும். அதற்கு அந்த நேரம் காலம், சூழல் இடம் எல்லாமே அமைய வேண்டும். அது வரும் போது நான் கட்டாயமாக தமிழ்நாட்டு மக்களுக்கு நான் எதாவது செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். இப்போ என்ன பண்ண போறேன் என்று கேட்டால் என்னிடம் பதிலே கிடையாது.

இது விளையாட்டு இல்லை: ஆர்வம் இருக்கு.. அதற்கான நேரம் இது கிடையாது. என்னைக் கொண்டு வந்து நல்ல இடத்தில் உட்கார வச்ச நேரம் காலம், கொண்டு வந்து உட்கார வைக்கும். அந்த சமயத்தில் நான் வருவேன். அதற்கு இன்னும் நேரம் இருக்கு. அந்த வாய்ப்பு வருவதற்கே இன்னும் நேரம் இருக்கு. இது அதற்கான நேரம் இல்லை. இது விளையாட்டு இல்லை. சும்மா எதோ சொல்கிறார்கள்..
நம்மை பில்டப் பண்ணி எழுதுகிறார்கள் என்று வந்து விட முடியாது. அதற்கான அடித்தளத்தை வலுப்படுத்த வேண்டும். அதை நான் செய்து கொண்டே இருப்பேன். ரசிகர் மன்றமாக இருந்ததை மக்கள் இயக்கமாக மாற்றி பண்ணிக்கொண்டே இருக்கிறோம். வலுப்படுத்திக் கொண்டே இருக்கிறோம். அதுதான் இப்போதைக்கு" என்று விஜய் கூறினார். தற்போது இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் ஆக்கி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications