உதயநிதி அமைச்சரானது ரொம்ப லேட்..விரைவில் துணை முதல்வராவதை எதிர்பார்க்கிறேன்..சொல்கிறார் பொன்முடி
சென்னை: உதயநிதி எப்போதோ அமைச்சராகியிருக்க வேண்டும் இது தாமதமாக கொடுக்கப்படுகிறது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். எந்த துறையை கொடுத்தாலும் அவர் சிறப்பாக செயல்படுவார் என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்பதை நானும் எதிர்பார்க்கிறேன் என்று பொன்முடி கூறியுள்ளார்.
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ உதயநிதியை தமிழக அமைச்சராக்க முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநருக்கு பரிந்துரைத்திருந்தார். இந்த பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, வரும் டிசம்பர் 14-ம் தேதி உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்கிறார்.
இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ உதயநிதியை தமிழக அமைச்சரவையில் அமைச்சராக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநருக்கு பரிந்துரைத்திருந்தார். முதல்வரின் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது. வரும் 14-ம் தேதி சென்னை கிண்டியில் உள்ள ராஜபவன் தர்பார் ஹாலில் காலை 9.30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் உதயநிதி
அமைச்சராக பதவியேற்கவுள்ள உதயநிதி ஸ்டாலினுக்காக தலைமைச் செயலகத்தில் அறை ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், திமுக அமைச்சர்கள் பலரும், உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், அமைச்சராக பொறுப்பேற்கவுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

பொன்முடி
உதயநிதி அமைச்சராவது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த பொன்முடி, இதுவே ரொம்ப தாமதம் என்று கூறினார். உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி செயலாளராக இருக்கிறார். சுறுசுறுப்பாக செயல்படக்கூடியவர். லோக்சபா தேர்தல், சட்டசபைத் தேர்தலின் போது தமிழகம் முழுவதும் சென்று பிரச்சாரம் செய்தார். அவர் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். அப்போதே அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. 19 மாதங்களுக்குப் பிறகு தற்போது அமைச்சர் பதவி கொடுத்திருக்கிறார் தலைவர் ஸ்டாலின்.

உழைக்கும் தலைவர்
உதயநிதி ஸ்டாலினை சிறுவயதில் இருந்தே பார்த்திருக்கிறோம். எடுத்துக்கொண்ட வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பார். சினிமா, கட்சிப்பணி, அரசியல் துறை என எந்த துறையை எடுத்தாலும் சிறப்பாக செயல்படுவார். நாளைய தினம் அமைச்சராக பதவியேற்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு எந்த துறை கொடுத்தாலும் அவர் சிறப்பாக செயல்படுவார். எந்த துறையை கொடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் முடிவெடுப்பார் என்றும் பொன்முடி தெரிவித்தார்.

துணை முதல்வர்
தொடர்ந்து பேசிய அமைச்சர் பொன்முடி,என்னைக் கேட்டால் அவருக்கு முன்னரே அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால் தேர்தலில் அவர் அவ்வளவு வேலை செய்திருக்கிறார். மாணவர்கள், இளைஞர்களின் எல்லா விதமான எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற துடிப்போடு செயலாற்றுகிறவர். மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். திராவிட மாடலை நிலைநிறுத்த எல்லாவகையிலும் உதயநிதி செயல்படுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கக் கூடாது என தி.மு.கவைச் சேர்ந்த யாரும் சொல்லவில்லை. துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்பதை நானும் எதிர்பார்க்கிறேன் என்றும் பொன்முடி கூறினார்.

வாரிசு அரசியல்
திமுக அரசு பொறுப்பேற்றதுமே உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்று பலரும் கருத்துக்களை கூறினோம் இப்போது அமைச்சராகப் போகிறார் உதயநிதி என்றும் பொன்முடி கூறினார். வாரிசு அரசியல் பற்றிய குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு பதில் அளித்த பொன்முடி, திமுகவில் நீண்ட காலமாக வாரிசு அரசியல் இருக்கிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது. தலைவர் ஸ்டாலின் அரசியலுக்கு வந்த போது கூட வாரிசு அரசியல் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதாக கூறினார்.

உதயநிதி சேவை நாட்டுக்கு தேவை
இதனிடையே பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு பெரம்பலூர் அருகே நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எ.வ. வேலு, நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் கிராமம், கிராமமாக சென்று உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்து கட்சி வெற்றிக்கு பாடுபட்டார். அவரது பிரசாரத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. அந்த 2 தேர்தல்களில் சிறப்பாக செயல்பட்டு அவர் தன்னை நிரூபித்துக் காட்டினார். அவரது சேவை கட்சிக்கும், தமிழகத்திற்கும் அவசியம் தேவை என்று கூறினார்.












Click it and Unblock the Notifications