சம்மந்தம் இல்லாத "செலபஸ்.." நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டது உண்மை: அண்ணாமலை ஒப்புதல்
சென்னை: தமிழ்நாட்டில் நீட் தேர்வால் பாதிப்பு இருந்தது உண்மை தான் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இளங்களை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாகியது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் 80 சதவிகிதம் தோல்வியை சந்தித்தனர். இது தமிழக அரசியல் கட்சியினரிடையே விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சென்னையில் தமிழ பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், நீட் தேர்வை பொறுத்தவரை பாஜகவுக்கு அரசியல் செய்ய வேண்டிய நோக்கம் கிடையாது. நீட் தேர்வு தமிழக மாணவர்களுக்கு நல்லது. குறிப்பாக பின்தங்கிய பகுதிகளில் இருந்து நீட் தேர்வின் மூலம் மருத்துவம் படித்து வருகின்றனர்.

நீட் தேர்வால் பிரச்னை
இன்னும் சொல்ல வேண்டுமென்றால் தனியார் லாபியை உடைத்து அனைவருக்கும் சமமான வாய்ப்பை நீட் தேர்வு கொடுத்துள்ளது. தமிழ்நாட்டில் ஆரம்ப காலங்களில் நீட் தேர்வால் பிரச்னை இருந்தது உண்மை தான். காரணம், தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்பட்டு வந்த பாடத்திட்டத்திற்கும், நீட் தேர்வுக்கு தயாராவதற்கான பாடத்திட்டத்திற்கும் பல வித்தியாசங்கள் இருந்தன.

பாடத்திட்டம்
ஆனால் 2019 மற்றும் 2020ஆம் ஆண்டு பாடத்திட்டம் மாற்றமடைந்த பின், மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் ஆளும் அரசு, அமைச்சர் ஆகியோர் நீட் தேர்வை எதிர்க்கின்ற காரணத்தால், மாணவ மாணவியர்களுக்கு உள்ள பயிற்சி வகுப்புகளை நீக்கிவிட்டனர்.

திமுக மீது விமர்சனம்
மாணவர்களின் கைகளையும், கண்களையும் கட்டிவிட்டு வேண்டுமென்றே நீட் ஹேர்வுக்கு அனுப்பி, அதன்மூலம் கடினமானது என்று கூறுகிறார்கள். இந்தியாவில் எந்த முதல்வரும் நீட் தேர்வை எதிர்க்காதபோது, தமிழ்நாட்டில் மட்டும் மாணவர்களின் மன உறுதியை குலைத்து வருகிறார்கள்.

நீட் விலக்கு மசோதா
அதேபோல் நீட் தேர்வில் வெற்றிபெற்றவர்களை தமிழக அரசு எங்கேயும் பாராட்டுவதில்லை. திமுக குடும்பத்தைச் சேர்ந்த பலர், ஆளுநர் இடஒதுக்கீட்டில் மருத்துவர்களாக ஆகியுள்ளனர். அவர்கள் யாரும் கஷ்டப்பட்டு நுழைவுத் தேர்வை எழுதவில்லை. நீட் வேண்டாம் என்று திமுக சொன்னாலும், நீட் தேர்வு நடைபெறும். அதேபோல் குடியரசுத் தலைவரும் நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பதான் போகிறார் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications