நாடாளுமன்றத் தேர்தல் பணிகளில் விறுவிறு! பொதுக்குழுவை கூட்டும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்!
சென்னை: இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் பொதுக்குழு கூட்டம் நாளை சென்னையில் நடைபெறும் நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக விவாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியை பொறுத்தவரை திமுக கூட்டணியில் நீண்ட காலமாக அங்கம் வகிக்கும் ஒரு கட்சியாகும். இன்று நேற்றல்ல காயிதேமில்லத் காலம் தொட்டு திமுகவுடன் நட்புறவை பேணி வரும் கட்சி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி. இடையே சில ஆண்டுகள் மனக்கசப்புகள் வந்து சென்றாலும் அக்கட்சியின் தேசியத் தலைவராக காதர் மொகிதீன் வந்ததிலிருந்து திமுகவுடன் சுமூகமாக உறவு பேணப்படுகிறது.

அதேபோல் கேரளாவில் காங்கிரஸ் கட்சியுடன் நீண்ட காலமாக கூட்டணியை தக்க வைத்து வருகிறது இந்திய யூனியன் முஸ்லீம். இதனிடையே வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் தொடர்வது கிட்டதட்ட உறுதியாகிவிட்ட நிலையில் எந்தெந்த தொகுதியில் வெற்றி வாய்ப்புகள் உள்ளன என்பது பற்றியும் எத்தனை தொகுதிகள் கேட்பது என்பது பற்றியும் நாளைய தினம் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசியத் தலைவர் காதர் மொகிதீன் தலைமையிலான குழுவினர் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனை கடந்த வாரம் சந்தித்து பேசிய நிலையில், அது கட்சியின் பவள விழா மாநாட்டுக்கான அழைப்பாக கூறப்பாட்டாலும் ஊடகங்களில் கூட்டணி பேச்சுவார்த்தையின் முதற்கட்டமாகவே பார்க்கப்பட்டது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதி மட்டுமே திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக் கட்சிக்கு வழங்கப்பட்டது. இந்த முறை 2 தொகுதிகளை திமுகவிடம் கேட்டு வாங்க திட்டமிடுள்ள முஸ்லீம் லீக் மாநில நிர்வாகிகள் அது குறித்தும் பொதுக்குழுவில் விவாதிப்பார்கள் எனத் தெரிகிறது.
முக்கியமாக புதிய நிர்வாகிகள் அறிமுகமும் இந்த பொதுகுழுவில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே பொதுக்குழு தொடர்பாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் அபுபக்கர் விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு; ''இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பொதுக்குழு கூட்டம் நாளை 4ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு சென்னை ராயபுரம் ரம்ஜான் மஹாலில் தேசியத் தலைவர் காதர் மொகிதீன் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது.''












Click it and Unblock the Notifications