தவாக to தவெக.. விஜய்யுடன் இணையும் ஜெகதீச பாண்டியன் - போட்டு உடைத்த வேல்முருகன்!
சென்னை: தமிழக வாழ்வுரிமை கட்சியில் இருந்து ஜெகதீச பாண்டியன் வெளியேறி விட்டதாகவும், அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து செயல்பட விரும்புவதாகவும் தவாக தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். ஜெகதீசபாண்டியன் விரைவில் விஜய்யை சந்தித்து தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு வந்தவர் ஜெகதீச பாண்டியன். இவர் கடந்த 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டார். அவர் சீமான் உடனான கருத்து முரண்பாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகினார்.

இதையடுத்து, வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்தார். அதைத்தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கடுமையாக விமர்சித்துப் பேசி வந்தார். சீமானை கடுமையாகத் தாக்கிப் பேச வேண்டாம் என வேல்முருகன் அறிவுறுத்திய நிலையிலும் தொடர்ந்து சீமானை தாக்கிப் பேசி வந்தார் ஜெகதீச பாண்டியன்.
இந்நிலையில், நாதக மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியிலிருந்து வெளியேறி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து செயல்பட விரும்புவதாக தெரிவித்துள்ளார் என்றும், தவாக கட்சியினர் அவரது முடிவை நாகரிகமான முறையில் கடந்து செல்வதோடு அவர் மீதான எந்த விமர்சனங்களையும் சமூக ஊடகங்களில் வெளிப்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார் வேல்முருகன்.
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜெகதீச பாண்டியன் அவர்கள் நாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறி தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்த நாள் முதலாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான். அவர்களை விமர்சித்து வந்தார். நாம் தமிழர் கட்சியானது தமிழ் தேசியம் பேசும் ஓர் அரசியல் கட்சி என்கின்ற வகையில் தமிழக வாழ்வுரிமை கட்சி அதனை ஓர் நட்பு சக்தியாக பார்த்து வருகிறது. அதன் அடிப்படையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் மீதான விமர்சனங்களில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதை பல்வேறு கட்டங்களில் அவருக்கு அறிவுறுத்தினேன்.
ஆனால் அவர் மேற்கண்ட கருத்துக்களில் தனக்கு உடன்பாடு இல்லை என்று தெரிவித்ததன் அடிப்படையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியிலிருந்து மேற்கண்ட விமர்சனங்களை மேற்கொள்ள வேண்டாம் என்றும் இதிலிருந்து வெளியேறி தாங்கள் மேற்கொள்ள விரும்பும் அரசியல் செயல்பாடுகளை தொடரலாம் என்ற எனது கருத்தின் அடிப்படையில் அவர் இன்று முதல் தமிழக வாழ்வுரிமைக் கட்சியிலிருந்து வெளியேறி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து செயல்பட விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
எனவே தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் மேற்கண்ட அவரது முடிவை நாகரிகமான முறையில் கடந்து செல்வதோடு அவர் மீதான எந்த விமர்சனங்களையும் சமூக ஊடகங்களில் வெளிப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அண்மையில் தவெகவில் இணைந்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. செங்கோட்டையனைத் தொடர்ந்து மேலும் பல முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைந்து வருகின்றனர். நாஞ்சில் சம்பத், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள் தவெகவில் இணைந்துள்ளனர். இன்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மாற்றுக்கட்சி நிர்வாகிகள் தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications