Jana nayagan: தள்ளி போகும் ஜனநாயகன் பட ரிலீஸ்! விஜய்க்கு பின்னடைவு! தவெகவினருக்கு சோர்வு!
சென்னை: ஜனநாயகன் படத்திற்கு எதிரான சென்சார் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பால் பட ரிலீஸ் தள்ளி போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது விஜய்க்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். அடுத்த மாதம் தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்க போகும் நிலையில் இந்த படம் எப்போது வெளியாகும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஜனநாயகன் திரைப்படம் தொடர்பாக சென்சார் வாரியம் செய்த மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் படத்திற்கு உடனடியாக யுஏ சான்றிதழ் கொடுக்குமாறு கடந்த 9ஆம் தேதி தனி நீதிபதி ஆஷாவின் உத்தரவை நீதிபதிகள் அமர்வு ரத்து செய்துள்ளது. இதன்மூலம் சென்சார் குழுவின் மேல்முறையீட்டு மனு ஏற்கப்பட்டுவிட்டது.

மேலும் இந்த வழக்கை மீண்டும் தனி நீதிபதி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் ஜனநாயகன் திரைப்படத்தின் வெளியீடு மீண்டும் தாமதமாகும் சூழல் உருவாகியுள்ளது.
இதனால், பிப்ரவரி மாதத்திற்குள் படம் வெளியாவதில் பெரும் கேள்விக்குறி எழுந்துள்ளது. இது விஜய்க்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்த தீர்ப்பால் ரசிகர்களும் தவெகவினரும் துவண்டு போயுள்ளனர். இது குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கருத்து தெரிவிக்கையில், "ஜனநாயகனுக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல். ஆனால் இது அவர்களாகவே தேடிக் கொண்டது" என்று குறிப்பிட்டார். தணிக்கை வாரியத்தின் விதிகள் முழுமையானவை என்றும், சட்டரீதியான நிவாரணம் கிடைக்காத பட்சத்தில் மட்டுமே ரிட் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் விளக்கினார்.
ஜனநாயகன் படத்திற்கு ஆரம்பகட்ட 'ஆய்வு குழு' (EC) மட்டுமே முடிவடைந்த நிலையில், அடுத்தகட்டமாக 'திருத்தும் குழுவுக்கு' (RC) அனுப்ப முடிவு செய்யப்பட்டிருந்தது. படக்குழுவினர் 'திருத்தும் குழுவிற்காக' காத்திருந்திருக்க வேண்டும் என்றும், நீதிமன்றத்தை அணுகியது ஒரு அவசரமான முடிவு என்றும் ஷ்யாம் தெரிவித்தார்.
தணிக்கை வாரியம் கட்டாயம் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். இல்லையெனில், இது இந்தியா முழுவதும் ஒரு முன்னுதாரணத் தீர்ப்பாக மாறி, எதிர்காலத்தில் எந்தப் படத்திலும் சிக்கல் ஏற்பட்டாலும் இத்தீர்ப்பை மேற்கோள் காட்டுவார்கள் என அவர் கூறினார்.
தற்போதைய சட்ட நிலவரப்படி, தணிக்கை வாரியத்தின் மேல்முறையீடு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. படக் குழுவினர் மீண்டும் ஒரு புதிய தனி நீதிபதியை அணுகலாம். ஆனால், இது மீண்டும் அதே சிக்கலுக்கு வழிவகுக்கும் என்றும், பழைய நீதிபதியிடம் செல்ல முடியாது என்றும் ஷ்யாம் சுட்டிக்காட்டினார்.
பல ஆண்டுகளுக்கு முன்பு, தணிக்கை வாரியத்தில் ஒரு தீர்ப்பாயம் செயல்பட்டது. திரைப்படங்களுக்குப் பிரச்சினை ஏற்படும்போது, படக்குழுவினர் நீதிமன்றத்தை நாடாமல் இந்த தீர்ப்பாயத்தையே அணுகுவார்கள். சினிமா உலகில் அனுபவம் வாய்ந்தவர்களைக் கொண்ட இந்த அமைப்பு, எளிமையான தீர்வுகளை வழங்கியது.
சில ஆண்டுகளுக்கு முன்பு மோடி அரசு இந்த தீர்ப்பாயத்தைக் கலைத்ததால், நீதிமன்றமே ஒரே வழியாகிவிட்டது. "ஜனநாயகன் படத்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கல் என்பது மிகவும் கவலைதரக் கூடியது" என்று தராசு ஷ்யாம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications