Jana Nayagan: ஜனநாயகன் படம் செல்போனில் இருந்தா உடனே அழிங்க.. கிரிமினல் நடவடிக்கை பாயும்.. கேவிஎன் நிறுவனம் வார்னிங்
சென்னை: பொங்கலுக்கு முன்பு ரிலீஸ் ஆக இருந்த விஜய்யின் ஜனநாயகன் படம் சென்சார் பிரச்சனை காரணமாக தற்போது வரை வெளியாகவில்லை. அரசியல் காரணமாக தான் வெளியாகவில்லை என விஜய்யும் கூறிய நிலையில் நேற்று திடீரென ஜனநாயகன் முழுப் படமும் சட்டவிரோதமாக இணையத்தில் லீக் ஆனது. இந்த நிலையில், ஜனநாயகன் படம் செல்போனில் இருந்தா உடனே அழித்துவிடுங்கள் என்றும், இல்லையெனில் கிரிமினல் நடவடிக்கை பாயும் என கேவிஎன் நிறுவனம் எச்சரிக்கை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் கடந்த ஜனவரி மாதம் பொங்கலுக்கு முன்பாக வெளியாக இருந்தது. ஆனால், சென்சார் பிரச்சனையில் இந்த படம் சிக்கியதால், தற்போது வரை ரிலீஸ் செய்ய முடியாத நிலை உள்ளது.

ஜனநாயகன் முழு படமும் வெளியானது
அரசியல் காரணங்களுக்காக தனது படம் முடக்கபட்டதாக விஜய்யே நேரடியாக குற்றம் சாட்டியிருந்தார். தேர்தலுக்கு பிறகே இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஜனநாயகன் படம் திடீரென நேற்று இணையதளத்தில் சட்ட விரோதமாக கசிந்தது. முதலில் 5 நிமிட காட்சிகள் வெளியான நிலையில், சிறிது நேரத்தில் முழு படமும் வெளியானது இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்தது.
இந்த நிலையில், ஜனநாயகன் பட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:- செல்போனில் ஜனநாயகன் படம் வந்தால் டெலிட் செய்யுங்கள் விஜய்யின் ஜனநாயகன் படம் சட்டவிரோதமாக இணையதளங்களில் முழுமையாக வெளியாகியுள்ளது.
கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்
மர்ம நபர்கள் சிலர் ஜனநாயகன் படத்தை பதிவிறக்கம் செய்து அதிக அளவில் பகிர்ந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. ஜனநாயகன் படத்தை பதிவிறக்கம் செய்பவர்கள் மற்றும் பகிர்வோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். ஜனநாயகன் படத்தை செல்போனில் வைத்திருப்பவர்கள், பார்ப்பவர்கள் மீதும் கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
வாட்ஸ்ஆப், இன்ஸ்டா, டெலிகிராம் மூலம் ஜனநாயகன் படத்தை பகிர்வோரை கண்டுபிடிப்பது எளிது. சமூகவலைதளம் மூலம் வரும் ஜனநாயகன் படத்தை பகிரவோ, செல்போனில் சேமித்தோ வைக்க வேண்டாம் ஒவ்வொரு டிஜிட்டல் செயல்பாடும் கண்காணிக்கக்கூடியது. இதில் தொடர்புடையவர்களை கண்டறிவதற்காக, நாங்கள் ஏற்கனவே விசாரணைகளை தொடங்கியுள்ளோம்.
புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. எந்த வித விதிவிலக்குமின்றி, இந்த குற்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சிவில் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications