மாணவர்களிடம் மத துவேஷத்தை வளர்க்காதீர்கள்; யாருக்கு அறிவுரை கூறுகிறர் ஜவாஹிருல்லா?
சென்னை: பாடத்திட்டத்தின் மூலம் மத துவேஷத்தை வளர்க்க வேண்டாம் என சி.பி.எஸ்.சி.க்கும், மத்திய அரசுக்கும் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா அறிவுரை கூறியிருக்கிறார்.
12-ம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வில் 2002 குஜராத் கலவரத்தை மையப்படுத்தி கேள்வி இடம்பெற்றிருப்பது கடும் கண்டனத்திற்குரியது எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

குஜராத் கலவரம்
குஜராத் மாநிலத்தில் 12 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பருவம் 1 தேர்வில் "2002 இல் குஜராத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவு மற்றும் பரவலான முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை எந்த அரசாங்கத்தின் கீழ் நடந்தது?"என்று கேள்வி வினாத்தாளில் இடம்பெற்றுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கல்வி கற்பிப்பதின் முக்கிய நோக்கமே சமத்துவமும் மனிதாபிமானம் மிக்க சமூகத்தை கட்டமைப்பதற்காக தான் இருக்க வேண்டும்.

சிறுபான்மை சமூகம்
இந்த உயர்ந்த நோக்கத்தை சிதைக்கும் வகையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் இது போன்ற கேள்விகள் இடம் பெற்று இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான மனநிலையை மாணவர்களின் மத்தியில் விதைப்பது இந்தியாவின் எதிர்காலத்தை மிகப்பெரிய அளவில் பிளவுபடுத்தும் நோக்கம் கொண்டதாக அமையும்.

தப்பிக்க முயற்சி
கடுமையான எதிர்ப்புகள் கிளம்பிய பிறகு சிபிஎஸ்சி தற்போது விழித்துக்கொண்டு வினாத்தாள் தயாரித்தவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறுவது ஏற்புடையதாக இல்லை. பொதுவாக வினாத்தாள்கள் பெறப்பட்டு கல்வி உயரதிகாரிகள் வாயிலாக மேற்பார்வை செய்யப்பட்ட பின்னரே மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்கும் முறை தற்போது வரை உள்ளது. பிரச்சனைகள் பெரிதாகி விட்டவுடன் வினாத்தாள் தயாரித்தவர்கள் மீது நடவடிக்கை என்று சொல்லி சிபிஎஸ்இ நிர்வாகம் தப்பித்துக்கொள்ள பார்க்கிறது.

பல குளறுபடிகள்
இதற்கு முன்னரும் பாடத்திட்டத்திலும் வினாத்தாளிலும் பல குளறுபடிகளை சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான முன்னெடுப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. கல்வியின் நோக்கத்தையே சிதைக்கும் இந்த முயற்சியினை முன்னெடுக்கும் சிபிஎஸ்சி பாடத்திட்ட குழுவையும் ஒன்றிய அரசையும் வன்மையாக கண்டிக்கிறேன். இது போன்று இனிவரும் காலங்களில் எப்போதும் நிகழாத வண்ணம் மிகச்சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications