கரும்பு பயிரை தாக்கிய மஞ்சள் நோய்! ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30,000 இழப்பீடு தருக! ஜவாஹிருல்லா வேண்டுகோள்!
சென்னை: கரும்பு பயிர்களை மஞ்சள் நோய் தாக்கி வருவதால் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30,000 வரை இழப்பீடு வழங்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது;
பாபநாசம் வட்டம் கபிஸ்தலம்,சத்தியமங்கலம்,கணபதி அக்ரஹாரம்,மணலூர், வீரமாங்குடி, தேவன்குடி, சோமேஸ்வரபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் விவசாயிகள் சுமார் 1000 ஏக்கரில் சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்புவதற்காகவும்,வெல்லம் காய்ச்சுவதற்காகவும் பல ஆண்டுகளாக கரும்பு சாகுபடி செய்து வருகின்றனர்.
கடந்த மார்ச் மாதத்தில் பயிரிட்டு, தற்சமயம் 5 மாத பயிராக இருக்கும் நிலையில்,கரும்புப் பயிர்களை மஞ்சள் நோய்த் தாக்கியுள்ளது. இதனால் அந்த பயிர்கள் கருகியும், சிறுத்தும் வளராமல் நின்று விட்டன. பூச்சிக் கொல்லி மருந்துகளாலும் கட்டுப்படுத்த இயலாத நிலையில் இந்த நோய் தாக்குதல் அமைந்துள்ளது. இதனால் சாகுபடி செய்துள்ள 1000 ஏக்கரில் சுமார் 300 ஏக்கர் கரும்பு பயிர்கள் இந்த நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நோயின் தாக்கம் மற்ற பகுதிகளில் பரவாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நோய் தாக்குதலுக்கு உள்ளான 300 ஏக்கர் கரும்புப் பயிர்களை டிராக்டர் மூலம் உழுது அவற்றை அழிக்கும் பணியை விவசாயிகள் செய்து வருகின்றனர். ஒரு ஏக்கருக்கு கரும்பு சாகுபடி செய்வதற்கு ரூ.50 ஆயிரம் செலவிடப்படுகின்றது. தற்போது நோய் தாக்குதல் காரணமாக அழிக்கப்பட்டுள்ள கரும்புப் பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேளாண் துறை அலுவலர்கள்,திருச்சி சிறுகமணி கரும்பு ஆராய்ச்சி மையத்தின் பூச்சியியல் நிபுணர் மற்றும் ஒரத்தநாடு ஈசச்சங்கோட்டை வேளாண் அறிவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட பயிர்களை நேரடியாக ஆய்வு செய்துள்ளனர்.
எனவே விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நோய் தாக்குதல் காரணமாக அழிக்கப்பட்டுள்ள கரும்புப் பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும், மேலும் நெற் பயிர்களுக்கு இருப்பது போல, கரும்பு பயிறுக்கும் காப்பீடு செய்யும் நடைமுறையை எளிதாக்க வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.
Jawahirullah post about sugarcane farmers: கரும்பு பயிர்களை மஞ்சள் நோய் தாக்கி வருவதால் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30,000 வரை இழப்பீடு வழங்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications