ஜெயலலிதா பெயருக்கும் புகழுக்கும் இழுக்கு! ஜெயலட்சுமியை இயக்குவது யார்? வாய்மூடி மவுனியாக அதிமுக!
சென்னை: மறைந்த ஜெயலலிதாவின் மகள் என்று தன்னை தானே கூறிக்கொள்ளும் ஜெயலட்சுமி என்ற பெண் புதிய அரசியல் கட்சியை தொடங்கி 39 தொகுதிகளிலும் தனித்து வேட்பாளர்களை களமிறக்குவேன் என காமெடி செய்து கொண்டிருக்கிறார்.
பொதுவாக எதிரியாகவே இருந்தாலும் கூட மரணித்துவிட்டால் அவரை பற்றி பேசுவது முறையாக இருக்காது என்பது தமிழ்நாட்டின் பண்பாடாக இருந்து வருகிறது. இத்தகைய சூழலில் ஜெயலலிதா என்ன உயிரோடு எழுந்து வரப்போகிறாரா என்ற துணிச்சலில் அவர் மகள் நான் தான் என்று ஜெயலட்சுமி கூறி வருவது கோடான கோடி ஜெயலலிதாவின் அபிமானிகளை வேதனை அடையச் செய்துள்ளது.

ஜெயலலிதாவின் மகள் என்று கூறிக்கொண்டு அம்ருதா என்ற பெண் இதற்கு முன் உரிமை கோரினார். இப்போது ஜெயலட்சுமி என்பவர் கிளம்பியுள்ளார்.
ஜெயலலிதாவின் மகள் என்று கூறிக்கொண்டு ஜெயலட்சுமி அரசியல் கட்சி தொடங்கியிருக்கிறார் என்றால், நிச்சயம் இதனை தனி மனுஷியாக அவரால் செய்ய முடியாது. ஜெயலட்சுமியை இயக்குவதன் பின்னணியில் யாரோ இருக்கிறார்கள் என்பது மட்டும் தெரிய வருகிறது. ஏனெனில் அரசியல் கட்சி தொடங்குவது என்பது விளையாட்டல்ல.
ஒரு வாதத்துக்கு வைத்துக்கொள்வோம், ஜெயலட்சுமி அவர் சொல்வது போலவே ஜெயலலிதாவின் மகளாகவே இருந்தாலும் கூட மறைந்த தாயின் பெயரை இப்படித்தான் எந்த மகளும் டேமேஜ் செய்வார்களா என்பது இங்கு எழும் கேள்வியாகும். உண்மையான மகள் யாரும் ஜெயலட்சுமியை போல் இப்படி நடந்துகொள்ள மாட்டார்கள் என்பது கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.

தங்களுக்கு வாழ்வளித்த தலைவியின் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் கற்பிக்கப்படும் செயலுக்கு, அதிமுக தலைவர்களும், நிர்வாகிகளும் குறைந்தபட்சம் கண்டனம் கூட தெரிவிக்காதது ஜெயலலிதாவின் அபிமானிகளை வேதனை அடையச் செய்துள்ளது.
ஜெயலலிதாவின் சொத்துக்காக ஜெயலட்சிமியை வைத்து யாரோ சிலர் டிராமா நடத்துகிறார்கள் என்ற பேச்சு அதிமுக தொண்டர்கள் மத்தியில் நிலவுகிறது. எது எப்படியோ ஜெயலலிதா உயிரோடு இல்லாதபோது அவரது தனி வாழ்வு பற்றி பேசுவது நாகரீகமற்ற செயலாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications