தங்க நகை சேமிப்பு திட்டம்.. பீனிக்ஸ் சூப்பர் மார்க்கெட்டில் பணத்தை இழந்தவர்கள் புகார் தர அறிவிப்பு
சென்னை: தங்க நகை சேமிப்பு உள்ளிட்ட பல்வேறு லாபகரமான திட்டங்களில் முதலீடு செய்துள்ளதாக கூறி, ஏராளமான பொதுமக்களிடம் பணத்தை வசூல் செய்து மோசடி செய்ததாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஜான் கென்னடி என்பவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள், போலீசில் புகார் அளிக்கலாம் என்று விழுப்புரம் பொருளாதார குற்றப்பிரிவு அறிவித்துள்ளது.
தங்க நகை சேமிப்பு திட்டம் என்பது அனைத்து நகைக் கடைக்காரர்களாலும் வழங்கப்படுகிறது. இது தனி நபர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் சேமிக்க உதவும் சேமிப்பு திட்டமாகும்.

மாதத் தவணை
இந்த திட்டத்திற்கு மாதத் தவணையாக பணம் செலுத்த முடியும்.. பெரும்பாலும் 10 முதல் 12 மாதங்கள் வரை குறிப்பிட்ட கட்டணத்தை மாதம் மாதம் நகைக்கடைகளில் முதலீடு செய்ய முடியும். மேலும் அப்படி செலுத்தி முடித்த பிறகு வாடிக்கையாளர்கள் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை பெறுவார்கள்.
கூடுதலாக போனஸ் தொகைகள் மற்றும் தள்ளுபடிகள் ஆகியவற்றையும் சில நகைக்கடைகள் வழங்குகின்றன. அதாவது, நீங்கள் முதலீடு செய்த பணம் மற்றும் நகை கடையில் இருந்து பெற்ற குறிப்பிட்ட சதவீத தொகை இரண்டிற்கும் சேர்த்து நகைகளாகவோ அல்லது காயின்களாகவோ இறுதியில் வாங்கிக் கொள்ளலாம். எனவேதான், தங்க நகை சேமிப்பு திட்டம் மக்களின் வரவேற்பை பெற்று வருகிறது.
ஆனால், இதை வைத்தே சில மோசடிகள் ஆங்காங்கே நடந்து வருகிறது. இதை மையப்படுத்திதான் போலீசார் தற்போது பொதுமக்களுக்கு அலர்ட் ஒன்றை தந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி சூப்பர் மார்க்கெட்
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்துள்ளது மைக்கேல்புரம்.. இங்கு வசித்து வந்தவர் ஜான்கென்னடி.. இவருக்கு 49 வயதாகிறது.. இவர் கடந்த 2023 - 2024ம் ஆண்டு கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை சாலை மேல்சிறுவள்ளூர் கூட்ரோட்டில் பீனிக்ஸ் சூப்பர் மார்க்கெட் நடத்தி வந்தார்..
அப்போது, தங்க சேமிப்பு திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.. அத்துடன், கார் மற்றும் நிலம் வாங்கும் திட்டம், மளிகை பொருட்கள் இரட்டிப்பு திட்டம், ஸ்டாக் பாயிண்ட் திட்டம், இரட்டிப்பு பணம் மற்றும் அதிக முதலீடு செய்தால் சிங்கப்பூர் செல்லும் திட்டம் உட்பட பல கவர்ச்சி திட்டங்களை அறிவித்தார்.
ஜான்கென்னடி
இந்த விளம்பரத்தை பார்த்த, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நபர்கள், மேற்கண்ட திட்டங்களில் பணத்தை செலுத்தியிருக்கிறார்கள்.. ஆனால் அந்நபர்களிடம் பல லட்சங்களை பெற்று ஜான் கென்னடி மோசடி செய்துவிட்டார்.. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் போலீசுக்கு போனார்கள்..
இதில், சேலம் மாவட்டம் அழகாபுரத்தைச் சேர்ந்த சவுந்தரராஜ் (69) என்பவர், விழுப்புரம் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்திருந்தார். அதில், கள்ளக்குறிச்சி மாவட்டம் மைக்கேல்புரத்தைச் சேர்ந்த ஜான் கென்னடி (49) என்பவர், கடந்த 2023 அக்டோபர் 1 முதல் 2024 அக்டோபர் 1 வரையிலான காலகட்டத்தில், கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை மெயின் ரோட்டில் உள்ள மேல்சிறுவள்ளூர் கூட்ரோட்டில் "பீனிக்ஸ் சூப்பர் மார்கெட்" என்ற பெயரில் கடை நடத்தி வந்தார் என கூறியிருந்தார்.
போலி திட்டங்கள்
அதேபோல ஏராளமான போலி திட்டங்களை அறிமுகப்படுத்தி, விழுப்புரம், தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, தேனி, கொடைக்கானல், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து பணம் வசூல் செய்துள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது.
இதையடுத்து, விழுப்புரம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, ஜான்கென்னடியை கடந்த ஜனவரி 31ம் தேதி கைது செய்தனர். தற்போது, புழல் ஜெயிலில் ஜான் கென்னடி உள்ளார்..
ஆவணங்கள் - புகார்
இந்நிலையில் இவ்வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என விழுப்புரம் பொருளாதார குற்றப்பிரிவு அறிவித்துள்ளது.
இந்த வழக்கில் ஏமாற்றம் அடைந்த அனைத்து பாதிக்கப்பட்டவர்களும், தங்களிடம் உள்ள தொடர்புடைய ஆவணங்களுடன் சேர்த்து, விழுப்புரம் பொருளாதார குற்றப்பிரிவை நேரில் அணுகி புகார் மனு அளிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புகார் அளிக்க விரும்பும் பொதுமக்கள், விழுப்புரம் மேற்கு, சண்முகாபுரம், சேர்மன் சண்முகம் தெரு, எண் 7 -ல் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு: 0414-250366 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி இதுகுறித்து கூறும்போது, "இந்த வழக்கில் 26ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்க செய்ய வேண்டியுள்ளதால், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் விழுப்புரம் மேற்கு சண்முகபுரத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அலுவலகத்தில், உரிய ஆவணங்களுடன் புகார் அளித்து வழக்கில் தங்களை இணைந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் விபரங்களுக்கு 04146-250366 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி தெரிவித்துள்ளார். பீனிக்ஸ் சூப்பர் மார்க்கெட் திட்டங்களில் பணம் இழந்தவர்கள் புகார் அளிக்கலாம் என்று போலீசார் அறிவித்திருப்பதால், பாதிக்கப்பட்டவர்கள் விரைந்து புகார்களை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications