ஜஸ்ட் 18 மணி நேரம் தான்! தமிழகம் - குஜராத்தை இணைக்கும் சென்னை - சூரத் விரைவுச்சாலை! சிறப்பே இதுதான்
சென்னை: இந்தியாவில் 2வது மிகநீளமான விரைவுச்சாலை குஜராத் மாநிலம் சூரத் மற்றும் சென்னை இடையே அமைக்கப்பட்டு வருகிறது. ரூ.50 ஆயிரம் கோடியில் நடக்கும் இந்த விரைவுச்சாலை பணி 2026ல் முடிவடைய உள்ளது. இந்த சாலை நடைமுறைக்கு வந்தால் வெறும் 18 மணிநேரத்தில் தமிழகத்தில் இருந்து குஜராத்துக்கு காரில் செல்ல முடியும். இந்த விரைவுச்சாலை பற்றிய முழுவிபரம் வருமாறு:
இந்தியாவில் மிக நீளமான விரைவுச்சாலை என்பது டெல்லி - மும்பை இடையே அமைக்கப்பட்டுள்ளது. இந்த விரைவுச்சாலை என்பது சுமார் 1,350 கிலோமீட்டர் நீளம் தூரம் கொண்டது. இதையடுத்து நாட்டின் மிக நீளமான 2வது விரைவுச்சாலை என்பது குஜராத் மாநிலம் சூரத் மற்றும் சென்னை இடையே அமைக்கப்பட்டு வருகிறது.

பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் இந்த சூரத் - சென்னை விரைவுச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்பிறகு
இந்த விரைவுச்சாலை அமைக்கும் பணியை பிரதமர் மோடி கடந்த 2021ம் ஆண்டு தொடங்கி வைத்தார்.
இந்த சூரத் - சென்னை விரைவுச்சாலை என்பது 1,271 கிலோமீட்டர் நீளம் கொண்டது. இந்த விரைவுச்சாலை அமைக்கும் பணி தொடங்கி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது 2024ம் ஆண்டு நடக்கும் நிலையில் 2026ல் சூரத் -சென்னை விரைவுச்சாலை பணி முழுவதுமாக முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
இந்நிலையில் தான் சூரத் - சென்னை விரைவுச்சாலையின் சிறப்புகள் பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது சூரத் - சென்னை விரைவுச்சாலை என்பது மேற்கு தொடர்ச்சி மலை வழியாக சென்னையை குஜராத்தின் சூரத்துடன் இணைக்கிறது. இந்த விரைவுச்சாலை என்பது 6 மாநிலங்கள் வழியாக செல்கிறது. குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் வழியாக அமைக்கப்படுகிறது.
இன்னும் புரியும்படி கூற வேண்டும் என்றால் இந்த விரைவுச்சாலையானது சென்னையில் இருந்து திருப்பதி, கடப்பா, குர்னூல், கலபுர்கி, சோலாப்பூர், அகமத் நகர், நாசிக் உள்ளிட்ட நகரங்கள வழியாக சூரத் வரை செல்கிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் ரூ.50 ஆயிரம் கோடியில் இந்த விரைவுச்சாலை அமைக்கப்பட்டு வருகிறத. மொத்தம் 1,271 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த விரைவுச்சாலையில் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் வாகனத்தில் பறக்கலாம்.
மேலும் தற்போது சென்னை - சூரத் இடையே சாலை வழி மார்க்கமாக சென்றால் 1,600 கிலோமீட்டர் வருகிறது. மேலும் பயண நேரம் என்பது 35 மணிநேரமாக உள்ளது. ஆனால் இந்த சூரத் - சென்னை விரைவுச்சாலை பயன்பாட்டுக்கு வரும்போது பயண தூரம் 1,270 கிலோமீட்டராக குறையும். அதோடு பயண நேரம் 35 மணிநேரத்தில் இருந்து 18 மணிநேரமாக குறையும்.
தற்போது, 4 வழிச்சாலையுடன் சூரத் - சென்னை இடையே விரைவுச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. வரும் காலத்தில் இந்த விரைவுச்சாலை என்பது 6 அல்லது 8 வழிச்சாலையாக மாற்றப்பட வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications